இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தமிழின் முதன்மையான இலக்கிய வாசகர் திகசி மறைவு!

TKC

முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவு (25-03-2014)க்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தி.

பள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று இலக்கியத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் அவர்களை ஆசானாக வரித்துக் கொண்டவர் திகசி. அவரது வழிகாட்டுதலாலும் அரவணைப்பாலும் வளர்ந்த திகசி தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்தடத்தை அமைத்துக் கொண்டவர்.

கவிதைகள், சிறுகதைகள் என தமது எழுத்துப் பணியை வல்லிக்கண்ணனின் ‘இளந்தமிழன்’ இதழ் தொடங்கி ‘கிராம ஊழியன்’, ‘கலாமோகினி’ உள்ளிட்ட பல இதழ்களில் பதிவு செய்தவர் திகசி. பிற்காலத்தில் அவரே ‘தாமரை’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது எண்ணற்ற இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வளர்த்தவர். இன்றைக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் படைவரிசையில் அணிவகுத்து நிற்போரில் பலரும் திகசியை நன்றியுடன் நினைவு கூர்வதே இதற்குச் சான்றாகும்.

படைப்புத்துறையில் மட்டுமின்றி மொழியாக்கத்திலும் தடம்பதித்தவர். கண. முத்தையாவின் தூண்டுதலால் ‘வசந்தகாலத்தில்’, ‘சீனத்துப்பாடகன்’, ‘போர்வீரன் காதல்’ ஆகிய நாவல்களையும் எது நாகரிகம் என்ற கார்க்கியின் கட்டுரை நூலையும் தமிழுக்குத் தந்தவர். இந்த மொழியாக்கத்திறன் திகசியை சோவியத் நாடு இதழின் ஆசிரியராக்க உதவியது. தமிழில் ஓரளவே அறிமுகமாகியிருந்த திறனாய்வுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து முன்னேற்றியவர். இதன் விளைவாகவே விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் என்ற நூலுக்காக திகசிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவித்தது.

‘திகசியின் திறனாய்வுகள்’, ‘விமர்சனத் தமிழ்’; ‘மனக்குகை ஓவியங்கள்’ போன்ற நூல்களும் இவரது திறனாய்வுப் புலமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவன.தமிழ் இலக்கிய உலகில் முளைவிடும் எழுத்தாளர்கள் திகசியின் கருத்தறிய தங்களின் படைப்புகளை அனுப்பிவைப்பதும் அஞ்சல்அட்டையில் அதற்கு வாழ்த்தும் விமர்சனமும் எழுதுவதும் திகசியின் இறுதிக்காலம் வரை நடந்து வந்தது.தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சியம் என்ற பஞ்சசீலக் கொள்கைகளே 21ம் நூற்றாண்டுக்குத் தேவையான இலக்கியக் கொள்கை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தவர் திகசி.எளிமையான வாழ்க்கையும் வலிமையான முற்போக்கு இலக்கியக் கண்ணோட்டமும் கொண்ட திகசி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தோடு கைகோர்த்து பயணித்தவர்.

இளம் எழுத்தாளர் பலரை ஊக்கப்படுத்தி வளர்த்தவர். சிறுபத்திரிகைகளுக்கு அஞ்சல் அட்டை மூலம் தன் கருத்தைத் தொடர்ந்து எழுதியவர். இறுதிமூச்சுவரை இலக்கிய வாசிப்பை நேசித்து மறைந்த திகசியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.