குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

உறவுகள் தெரியாத குழந்தைகள்: எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

செல்வ களஞ்சியமே – 67

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சென்ற வாரம் ‘சம்மர் கேம்ப்’ பற்றி எழுதியதற்கு ஒரு சகோதரி எனது வலைப்பதிவில் ஒரு கருத்துரை போட்டிருந்தார். ‘தேவையில்லைன்னு சொல்றீங்க….பாட்டி வீடு, உறவினர் வீடு என்று செல்ல முடியாமல் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் இடத்துப் பிள்ளைகளை என்ன செய்வது?’

ரொம்பவும் வருந்த வேண்டிய நிலை இல்லையா இது? உறவுகளே இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா? அந்தக் காலத்தைப் போல நாலு அத்தை, இரண்டு சித்தப்பா, மூணு மாமா என்றெல்லாம் வேண்டாம். ஒரு தாத்தா பாட்டியாவது குழந்தைக்கு வேண்டும், இல்லையா? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்?

இன்றைக்கும் எங்களுக்கு எங்கள் மாமாக்கள் என்றால் அத்தனை ஒட்டுதல். எங்கள் குழந்தைகள், அவர்கள் குழந்தைகள் என்று எல்லோருக்குமே இனிய நண்பர்கள். போன வருடம் என் பேரனின் பூணூல் வைபவத்திற்கு என் மாமா வந்திருந்தார். இந்த உறவுகள் எல்லாம் நம் தலைமுறையை சொல்பவவை அல்லவா? நமது பரம்பரை, பழக்க வழக்கங்கள் எல்லாம் இவர்களிடமிருந்து தானே நமக்கு வருகிறது.

பெற்றோர் எப்போதும் குழந்தைகளிடம் கண்டிப்பும் கறாருமாக இருப்பார்கள். பாட்டி தாத்தாக்கள் தங்கள் முழு அன்பையும் குழந்தைகளிடம் கொட்டுவார்கள். இரண்டும் குழந்தைகளுக்கு வேண்டும். அதுவுமின்றி, தங்கள் குழந்தைகளை கொஞ்ச நேரமின்றி இருந்திருக்கும். இப்போது பேரக்குழந்தைகள் வந்து தாத்தா பாட்டி என்று கூப்பிடும்போது ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே, அது அளவு கடந்தது. இன்றைய இளைய தலைமுறை இதை உணர வேண்டும்.
நீங்கள் உங்கள் வீட்டில் பெரியவர்களை எப்படி நடத்துகிறீர்களோ அப்படித்தான் நாளை உங்கள் குழந்தைகள் உங்களை நடத்துவார்கள். இது ஏன் இந்தக் கால பெற்றோர்களுக்குப் புரிவதில்லை? நாளை நீங்களும் உங்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாடும்போது இந்த அருமை புரியும்.

தாத்தா பாட்டியிடமிருந்து எத்தனையோ நல்ல விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். கதைகள், அவர்களது அனுபவங்கள் என்று நிறைய இருக்கும். குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கும் சந்தோஷம். குழந்தைகளுக்கும் அதெல்லாம் வியப்பாக இருக்கும். என் குழந்தைகளுக்கு என் அம்மா அவர்களது சிறு வயதிலேயே திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டார். இன்றைக்கும் விடாமல் அவர்கள் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது.

எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்: குழம்பு அல்லது ரசம் செய்வதற்கு புளி, உப்பு இரண்டையும் சேர்த்து நீரில் நனைத்து வைப்போம். நான், என் அம்மா, என் பாட்டி எல்லோருமே இப்படித்தான். இந்தப் பழக்கம் எனது கொள்ளுப் பாட்டியிடமிருந்து வந்ததாம் என்று என் அம்மா சொன்னபோது முகம் தெரியாத அந்தப் பாட்டியின் மேல் அளவு கடந்த ஆசை வந்தது நிஜம்.

அதேபோல எங்கள் தாய் வழி தாத்தா ஆசிரியராக இருந்தவர். அவருக்குப் பிறகு நான் தான் எங்கள் குடும்பத்தில் ஆசிரியர் பதவிக்கு வந்தவள். நான் மிகச் சிறந்த ஆசிரியர் என்று பாராட்டப்பட்டதை என் அம்மாவிடம் கூறியபோது எங்கள் தாத்தாவுக்கும் அந்தப் பட்டம் கிடைத்தது என்றார். மாணவர்களிடம் கனிவாக நடந்துகொள்வது, எத்தனை முறை கேட்டாலும் கோபித்துக் கொள்ளாமல் சொல்லித் தருவது இதையெல்லாம் என் தாத்தா செய்வார் என்று என் அம்மா சொன்னபோது அதை நான் ஒரு பாடமாகக் கற்றேன்.

6

சில விஷயங்கள் நாம் சொல்லாமலேயே குழந்தைகள் நம்மிடமிருந்து கற்பார்கள். நல்ல விஷயங்கள் மட்டுமல்ல சில நமக்கே பிடிக்காத விஷயங்களும் குழந்தைகள் கற்கின்றன. கீழே ஒரு உதாரணம் பாருங்கள்:

என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு ஒரு பேரன். அப்போதுதான் ஸ்கூலில் சேர்த்திருந்தார்கள். நான் கேட்டேன் ‘வித்யுத் சமத்தா ஸ்கூல் போறானா?’ என்று. அவர் சொன்னார்: ‘கொஞ்சம் கூட அழறதே இல்லை. சமத்தா போறான். ஸ்கூல் உள்ளே போனவுடன் திரும்பிப் பார்த்து ‘பை’ கூட சொல்லமாட்டான். நேரா உள்ளே போய்விடுவான்’ என்று சற்று வருத்தத்துடன் (பேரன் தனக்கு ‘பை பை’ சொல்லாமல் போகிறானே என்று வருத்தம்) கூறினார்.

எனக்கு இந்த உறவினர் அவரது இளம் வயதில் செய்யும் ஒரு செயல் நினைவிற்கு வந்தது. அலுவலகம் செல்லும்போது மனைவியிடம் ‘போய்விட்டு வருகிறேன்’ என்று சொல்லவே மாட்டார். ஒருமுறை இதை கவனித்து விட்டு நான் இவரது மனைவியிடம் கேட்டேன்: ‘அவர் அப்படித்தான். தவறிப்போய் கூடச் சொல்லமாட்டார்’ என்றார் சற்று வருத்தத்துடன்.

நான் இப்போது சொன்னேன்: ‘பேரன் உங்களைப்போலவே இருக்கிறான். நீங்கள் ‘போய்விட்டு வருகிறேன் என்று சொல்லாமலேயே இறங்கிப் போவீர்களே!’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் ரொம்பவும் வியப்பாக இருந்தது: ‘நான் அப்படிச் செய்தபோது அதன் விளைவு தெரியவில்லை. இப்போது பேரன் முகத்தை திரும்பிப் பார்க்காமல் போகும்போது கஷ்டமாக இருக்கிறது’ என்றார்.

குழந்தைக்கு இரண்டு பக்கமும் தாத்தா பாட்டிகள் இருப்பது ஒரு பெரிய வரம். என் மகளின் குழந்தைகள் ஆரம்பத்திலிருந்து கன்னடம், மற்றும் தமிழ் இரண்டு மொழிகளும் பேச ஆரம்பித்துவிட்டனர். அந்த பக்கத்து தாத்தா பாட்டியிடமிருந்து கன்னடப் பாடல்கள், கதைகள் என்று கேட்பவர்கள் இங்கு எங்கள் வீட்டிற்கு வந்தால் தமிழ் பாடல்கள் கதைகள் என்று கேட்கின்றனர்.

நாங்கள் பல வருடங்களாக பெங்களூரில் இருப்பதால் கன்னடம் பேசுவோம். ஆனால் என் அம்மா, இவரது உடன் பிறந்தவர்கள் எல்லோரும் தமிழில் தான் பேசுவார்கள். என் பேரன்கள் இருவரும் எல்லோருடனும் சரளமாக தமிழ் பேசிப் பழகுவார்கள். இந்த விடுமுறையில் இருவருக்கும் தமிழ் எழுதப் படிக்கவும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் கற்றுக் கொண்டால் நான் எழுதுவதை படிக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

எனக்கும் இளைய தலைமுறை வாசகர்கள் வேண்டாமா? என்ன சொல்லுகிறீர்கள்?

“உறவுகள் தெரியாத குழந்தைகள்: எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. ஓ நீங்கள் ஆசிரியரா. பீ கேர்புல் (எனக்குச் சொன்னேன்). நிற்க, அழகான பதிவு என்பதை விட சாட்டையடிப் பதிவுன்னு சொல்லனும். தாத்தா பாட்டி உறவுமுறை நிலைக்க வேண்டும். பர்சில் பணத்தோடு கொஞ்சம் பாசமும் சேர்க்க வேண்டும்.

  1. வாங்கபயம் பாண்டியன்!
   ஆசிரியர் என்ற பயம் வேண்டாம். நான் வழக்கமான ஆசிரியர் இல்லை.
   எத்தனை பேர்களுக்கு நான் எழுதியிருப்பது மனதில் உறைக்கும் என்று தெரியவில்லை.
   பர்சில் பணத்தோடு கொஞ்சம் பாசமும் வேண்டும் என்று சரியாகச் சொன்னீர்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   1. மன்னிக்கவும் பாண்டியன். உங்களை பயம் பாண்டியன் என்று அழைத்திருப்பதாக நினைக்க வேண்டாம். கீழே வரவேண்டிய பயம் மேலே போயிருக்கிறது. அதைப்பார்காமலேயே enter பட்டனைத் தட்டியிருக்கிறேன். இந்த தளத்தில் என்னால் இதை சரிசெய்ய முடியாது.

    நான்குபெண்கள்! தயவுசெய்து முதல் வரியில் இருக்கும் ‘பயம்’ என்ற வார்த்தையை நீக்கிவிடுங்கள். எனது இந்த பதிலையும் நீக்கி விடுங்கள்.

 2. மிக அருமையான பதிவு ரஞ்சனி. உறவுகள் எதுவும் தெரியாமல் கணினியும் வீடியோ கேம்ஸ் மட்டுமே துணையாக வாழும் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறார்கள் என்று போசித்தால் மிகவும் பயமாக இருக்கிறது ஆனா என்ன செய்வது காலத்தின் கோலம் பெற்றோர்கள் அவகியம் யோசிக்க வேண்டிய விஷயம்.

  1. வாங்க விஜயா!
   பெற்றோர்கள் யோசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இதை எழுதியிருக்கிறேன்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. உறவுகளின் அருமை இளைய தலைமுறைக்கு தெரியாமலே போய் விடும் அபாய விளிம்பில் தான் நாம் நிற்கிறோம். . அருமையாய் ஸசொல்லி இருக்கிறீர்கள் தாத்தா பாட்டிகளின் அருமையை. . பிள்ளைகள் இன்பம் . பேரப்பிள்ளைகள் பேரினபம் ஆயிற்றே.

  1. வாங்க ராஜி!
   பேரப்பிள்ளைகள் பேரின்பம் என்று வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. மிகச்சிறப்பான கருத்துக்கள்! அவசர யுகத்தில் குழந்தைகளுக்கு நல்லதை சொல்ல மறக்கிறோம்! உறவுகளை புரிய வைக்க மறுக்கிறோம்! இது தவறான ஒன்று! சிறப்பான பகிர்வுக்கு நன்றி!

 5. நல்ல விசயங்களை தங்களது அனுபவத்திலிருந்து சொல்லி இருக்கிறீர்கள். மேலும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கத் தொடங்கியிருப்பது ரொம்ப நல்ல விசயம்.

  – சித்திரவீதிக்காரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.