இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பெண்களின் சுகாதாரம், மருத்துவம்

பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி?

செல்வ களஞ்சியம் 79

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

செல்வ களஞ்சியமே இந்த வாரம் கொஞ்சம் வேறு வழியில் போகிறது. அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல தொடரும்.

சென்ற வாரம் நண்பரின் மகள் பெரியவளாகிவிட்டாள் என்ற செய்தி தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் என் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். எனக்கு நன்றி கூறியவரின் குரலில் என்னளவு சந்தோஷம் தொனிக்கவில்லை. இன்னும் வயசே ஆகலைங்க அதுக்குள்ளஎன்றார். ஒரு அம்மாவிற்கே உரிய கவலையுடன். உண்மைதான். நம்மூரில் பெண் குழந்தை பிறக்கும்போதே கவலையும் பிறக்கிறது. அதற்குத்தானோ என்னவோ கிராமங்களில் பெண்குழந்தை பிறக்கும்போதே கள்ளிப்பால் கொடுத்து கவலையையும், கதையையும் சேர்த்து முடித்துவிடுகிறார்கள். கொடுமை!

அந்த தாயின் குரலிலிருந்த கவலை என்னை இந்தப் பதிவு எழுத வைத்தது.

பெண் பிறக்கும்போது கவலைப்படாத அம்மாக்களும் அவள் பெரியவளாகும் போது நிச்சயம் கவலைக்கு ஆளாகிறார்கள். இந்தக்கவலை எதற்கு என்று நீண்ட நேரம் யோசித்தேன். ஒரு காரணமும் புரியவில்லை. பெண்ணைப் பற்றிய இந்தக் கவலைக்கு முடிவு உண்டா என்றால் அதுவும் கிடையாது. முடிவில்லாத ஒன்றை மனதில் சுமப்பது எத்தனை மன அழுத்தத்தைக் கொடுக்கும் தாய்மார்களுக்கு?

நாம் கவலைப்படுவதால் ஏதாவது மாறப்போகிறதா? பின் எதற்குக் கவலை? பெண்கள் வயதுக்கு வருவது நிச்சயம் கவலைபட வேண்டிய ஒன்றல்ல. அந்தப் பெண்ணிற்கு மலரும் பருவம். அவள் குழந்தைப்பருவத்தைக் கடந்து அடுத்த பருவத்திற்கு வந்திருக்கிறாள். இந்த மாற்றத்தை அவளுக்குப் புரிய வைப்பது அம்மாவின் கடமை. அவள் வயதுக்கு வரும் முன்பே இந்த மாற்றத்திற்காக அவளை மனதளவில் சந்தோஷத்துடன் மாற்றத்தை வரவேற்க அவளைத் தயார் செய்ய வேண்டியது அம்மாவின் கடமை. எத்தனை அம்மாக்கள் இதை செய்கிறோம்?

எங்கள் காலத்தில் சொல்லிகொடுக்க மாட்டார்கள். ஆனால் வயதுக்கு வந்துவிட்டால் ‘இது ஒண்ணு தான் குறைச்சலாக இருந்தது’ என்று திட்டுவார்கள். நாங்கள் ஏதோ தப்பு செய்துவிட்டதைப் போல ஒரு குற்றவுணர்ச்சியுடன் ஒவ்வொரு மாதத்தையும் தள்ளுவோம். இப்போது காலம் மிகவும் முன்னேறிவிட்டது. ஆனாலும் அம்மாக்கள் கவலைப்படுவது மாறவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு இளம் பெண்ணிடம் சொன்னேன். குழந்தைக்கு பத்து வயதாகிறது. அவளுக்கு எல்லாம் சொல்லிகொடு. வயதுக்கு வந்துவிடுவாள் சீக்கிரம்’ என்று. அந்தப் பெண் எனக்குக் கொடுத்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஆங்….அதெல்லாம் சொல்லிக் கொடுத்தாச்சு! ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்துப் போனேன். அவர் அவளுக்கு வீடியோ போட்டுக் காண்பித்தார். வேலை சுலபமாக முடிஞ்சு போச்சு!அடக் கஷ்டமே! ஒரு அம்மாவால் பெண்ணிடம் இதைப்பற்றிப் பேச முடியாதா? ஏன் மருத்துவரிடம் போக வேண்டும்?

நான் ஏன் திருப்பித்திருப்பி ஒரு அம்மாதான் சொல்லித் தரவேண்டும் என்று சொல்லுகிறேன் என்றால், பெண் குழந்தைகளுக்கு அம்மாக்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை இது. நாம் சொல்வதற்கு முன்பே பள்ளியில் குழந்தைகள் இதைப்பற்றிப் பேசிக் கொள்வார்கள். தவறான எதையும் அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது. சரியான முறையில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்; மனதளவில் அவற்றை ஏற்றுக்கொள்வது எப்படி என்று ஒரு அம்மாவால்தான் சொல்லித்தர முடியும். இந்த விஷயத்தை பொதுவாகப் பேசுவது வேறு. நம் குழந்தையை நாம் தயார் செய்வது வேறு. மருத்துவர் சொல்வது, வீடியோ காண்பிப்பது எல்லாம் ஏட்டுச்சுரக்காய். நாம் சொல்லித்தருவது ஆரோக்கியமான நடைமுறைப் பயிற்சி. முதல்முறை வந்தபின் ஒவ்வொரு மாதமும் நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று ஒரு அம்மாவால் மட்டுமே சொல்லித் தரமுடியும். தனது அனுபவத்தையும் சேர்த்துச் சொல்லி அந்தக் குழந்தைக்கு தைரியம் சொல்லவேண்டும்.

ஒரு பெண் பூவாக மலர்வது என்பது அவளது எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் ஒன்று. அவள் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் உருவாகும் என்பதற்கு இது அடிப்படை. அவளது கருப்பை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்பதை தெரிவிக்க இயற்கை மேற்கொள்ளும் வழி இது. வயதுக்கு வந்தவுடன் அவள் பிள்ளைபேற்றிற்கு தயாராவது இல்லை. இது ஒரு முன்னோட்டம் அவ்வளவுதான். இனி அவள் உடம்பில் நிகழும் மாற்றங்கள் அவளை தாய்மைப் பேற்றிற்கு தயார் செய்கின்றன.

model

வயதுக்கு வந்த பெண்ணிற்கு தாய் என்னென்ன வழியில் உதவலாம்?

முதலில் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். இயற்கை அவளுக்கு தாய்மை பேற்றை அளிக்க அவளை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

 • கவலையை விட்டொழியுங்கள். நீங்கள் கவலைப்பட்டால் இது ஏதோ தவறான செய்கை என்பது போல உங்கள் பெண்ணிற்குத் தோன்றும்.
 • இப்போதெல்லாம் சானிடரி நாப்கின்கள் மலிவாக கிடைக்கின்றன. அவற்றை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். இந்த இரண்டையும் விட முக்கியமானது பயன்படுத்திய நாப்கின்களை எப்படி பிறர் கண்களில் படாமல் அப்புறப்படுத்துவது என்று சொல்லிக்கொடுப்பது.
 • ரொம்பவும் முக்கியமானது எப்படி அந்தரங்க உறுப்பை ஆரோக்கியமான முறையில் வைத்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுங்கள். இப்போது Vwash என்று ஒரு க்ளீனிங் லிக்விட் கிடைக்கிறது. குளிக்கும்போது அதில் இரண்டு மூன்று சொட்டுகள் கையில் எடுத்துக்கொண்டு நுரை வரும்படி செய்து பிறகு பெண் உறுப்பில் தேய்த்து நிறைய நீர் விட்டு அலம்பி விடவேண்டும். சாதாரண நாட்களில் காலை மாலை இரண்டு வேளையும் இதுபோல சுத்தம் செய்யலாம். வீட்டு விலக்கான நாட்களில் நாப்கின் மாற்றும் ஒவ்வொரு தடவையும் இந்த லிக்விட் போட்டு கழுவுவது நல்லது.
 • நாப்கின் வைத்துக் கொள்வதால் அந்த இடங்களில் rashes வரலாம். நடக்கும்போது ஏற்படும் உராய்வினால் இருபக்கங்களிலும் பொரிபொரியாக தோலின் தடிப்பு ஏற்படலாம். அரிப்பு ஏற்படலாம். இவற்றிற்கு சாதாரண வாசலின் (vaseline) தடவலாம்.
 • நாம் முகத்தை அடிக்கடி கழுவுவோம். கால்கைகளைக் கழுவுவோம். அத்தனை முக்கியத்துவம் நம் அந்தரங்க உறுப்பிற்குக் கொடுக்க மாட்டோம். அது ஒரு அசிங்கம் என்று நினைப்பதுதான் காரணம். இதன் காரணமாகவே வயதுக்கு வருவது பற்றிப் பேச பல தாய்மார்கள் தயங்குகிறார்கள். தலைமுறை தலைமுறையாக பெண்கள் அனுபவித்து வருவதுதானே. உங்கள் அம்மா, உங்கள் பாட்டி, அவரது அம்மா இப்போது உங்கள் பெண் அவளது பெண் என்று தொடரப்போகும் விஷயம் இது.
 • வயசுக்கு வந்துட்டா’, பூப்பெய்தி விட்டாள்’, ‘ஒக்காந்துட்டா’ என்று எப்படி சொன்னாலும் ஒன்றுதான். கொண்டாடப் பட வேண்டிய விஷயம் இது. மூடிமறைக்கவோ பேசவோ கூடாத ஒன்றல்ல. அம்மாக்கள் இதைப் புரிந்து கொண்டால் குழந்தைகளும் தைரியமாக தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களை தாயிடம் தைரியமாகக் கேட்பார்கள்.
 • இந்த சமயத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி வரும். இதற்கு சுலபமான வழி இஞ்சிக் கஷாயம். இஞ்சியை தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ளுங்கள் கேரட் துருவுவது போல. ஒரு டம்பளர் ஜலம் வைத்து இஞ்சித் துருவலைப் போட்டு கொதிக்க வையுங்கள். அதனுடன் வெல்லத்தை போட்டுக் கொதிக்க வையுங்கள். டீ வடிகட்டியில் வடிகட்டி கொடுங்கள். அதிகம் வேண்டாம் ஒரு கால் டம்பளர் கொடுங்கள் போதும். சட்டென்று வலி மறையும்.
 • நல்ல போஷாக்கான உணவு கொடுங்கள். பழங்கள், புத்தம் புதிய காய்கறிகள் கொடுங்கள். முக்கியமாக கீரைவகைகள் கொடுக்கலாம். நிறைய இரும்பு சத்து உள்ள உணவுகளைக் கொடுங்கள்.
 • மார்பகம் பெரிதாக ஆரம்பிக்கும். அங்கும் வலி ஏற்படலாம். சரியான அளவு ப்ரா வாங்குவதற்கு குழந்தைக்கு உதவுங்கள். ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல், ரொம்பவும் லூசாக இல்லாமல் பருத்தி உள்ளாடைகள் அணியப் பழக்குங்கள்.

இந்த சமயத்தில் அவர்களுக்குத் தேவை தாயின் அன்பும் அரவணைப்பும். அதை தாராளமாகக் கொடுங்கள்.

 

“பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி?” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. சுகாதார முறையில் நாப்கின்களின் உபயோகமும், பாதுகாப்புடன் இருக்கும் முறைகளும் நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நம்மைப்போன்ற சில பிரிவினர்கள் தவிர தமிழ்நாட்டில் இதைக் கோலாகலமாகத்தான் சுப நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். நம்மிலும் இப்போது பரவாயில்லை. ஒரு காலத்தில் பெண் பெரியவளாகிவிட்டாளே, கலியாணம்,கார்த்தி சிலவுக்கு பெருந்தொகை வேண்டுமே என்று குழம்பினர். காலம் மாறிவிட்டது. பெண்கள் மிக்க மதிப்புக்குரியவர்ளாக வளர்கிரார்கள். அம்மாமார்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வயதுப்பெண்களின் தாய்மார்களுக்கு
  அவசியம் தெரிய வேண்டிய ஸமாசாரங்கள். அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.