குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு சமூகத்தை பற்றியும் கற்றுக் கொடுப்போம்!

செல்வ களஞ்சியமே82

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி இரண்டு வாரங்களாகப் பேசினோம். எல்லாமே பெற்றோர்களுக்குத் தெரிந்ததுதான். நான் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. நம்மால் நம் குழந்தைகளுக்குக் கொடுக்க முடிந்தவற்றை கொடுப்போம். ஆரோக்கியத்திற்கு அடுத்தபடியாக நமக்கென்று ஒரு சில பழக்கங்கள் இருக்கின்றன. நமது குடும்ப, பாரம்பரிய வழக்கங்கள், சமூகப் பழக்கங்கள் என்று சில. இவற்றை நாம் நமது வாழ்க்கையின் விலைமதிப்பற்றவைகளாக எண்ணுகிறோம். அவற்றையும் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதுவும் பெற்றோரின் கடமைதான். இவற்றை சொல்லித் தருவதால் என்ன பயன்? குழந்தைகள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக உருவாக இவை உதவும். இந்த நாட்டின் நல்ல பிரஜைகளாக அவர்களை உருவாக்குவதும் பெற்றோரின் கடமை தான்.

அந்தக் காலத்தில் நாங்கள் காலையில் எழுந்தவுடன் ‘கையைக் கூப்பு’ என்பார்கள் எங்கள் பெற்றோர்கள். என்ன புரியுமோ, அம்மா சொன்னால் சரி என்று கேட்போம். இன்றுவரை அந்த வழக்கம் தொடருகிறது. என்ன சாப்பிடக் கொடுத்தாலும் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு சாப்பிட வேண்டும். கைகால்களை கழுவ வேண்டும். மாலையில் பள்ளிவிட்டு வந்தவுடன் முகத்தை நன்கு கழுவி வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தபின் தான் காப்பியோ, சிற்றுண்டியோ அருந்துவோம். விளையாடிவிட்டு வந்தபின் மறுபடி கைகால் முகம் கழுவ வேண்டும். புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அங்கங்கு இறைக்கக் கூடாது. அப்போதெல்லாம் வீட்டு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாது. அதனால் அம்மாவிற்கு கூடமாட உதவியும் செய்ய வேண்டும். இதனால் வீட்டு வேலைகளும் பழகி இருந்தன. இரவு சாப்பிடுவதற்கு தட்டுகளை கழுவிப் போட வேண்டும். நீர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட தட்டுகளைக் கழுவி வைக்க வேண்டும். சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இவை எல்லாமே தினமும் செய்ய வேண்டியவை. இந்தப் பழக்கங்கள் இன்றுவரை எங்களுக்கு மாறவில்லை. இவை எல்லாம் குடும்ப எல்லைக்குள் இருப்பவை.

சமூகம் என்பது நமது வெளிவட்டார நண்பர்கள், சுற்றத்தார்கள், அக்கம்பக்கத்தவர்கள் நிறைந்தது. சமூகத்திலும் நமக்கென சில கடமைகள் இருக்கின்றன. நம்மைவிட வயது முதிர்ந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது; நம்மால் ஆன உதவியைப் பிறருக்குச் செய்வது; வெளியிடங்களில் அசுத்தம் செய்யாமலிருப்பது; வெளியில் சாப்பிடும்போது உணவை வீண் செய்யாமலிருப்பது; நண்பர்களிடத்திலும், சுற்றத்தார்களிடமும் நல்லவிதமாகப் பழகுவது; வீண் சண்டை, வாக்குவாதம் இவற்றைத் தவிர்ப்பது; பள்ளியில் நல்ல பெயர் எடுப்பது இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வாழ்க்கையில் எதிர்கொள்ள குழந்தைகளுக்கு எப்போதும் நாம் பின்னாலிருந்து சொல்லித் தருவது இயலாத ஒன்று. ஆனால் சில நல்ல பழக்க வழக்கங்களை சிறுவயதிலிருந்தே ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தலாம். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ள நம் குழந்தைகளை தயார் செய்யலாம். இதற்கான முதல்படி குழந்தைகளை நல்வழிப்படுத்துதல். தவறு செய்யும் குழந்தைகளை அடித்துத் திருத்துதல் என்பதல்ல இதன் பொருள். அவர்களுக்கு நல்லவழி என்ன என்பதைப் பற்றிய அறிவையும், அதற்குண்டான திறமையையும் வளர்ப்பது தான் இந்த நல்வழிப் படுத்துதல்.

பல பெற்றோர்களுக்கு எப்படி தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது என்பதில் பலவிதக் குழப்பங்கள் நிலவுகின்றன. குழந்தைகளின் நடத்தையியல் வல்லுனர்கள் பல வருடங்களின் ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்வது என்ன என்றால் குழந்தையும், அதன் செய்கைகளையும் நாம் தனித்தனியாகப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு குழந்தை ஒரு பொம்மையைக் கைத்தவறி கீழே போட்டு விட்டது; பொம்மை உடைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்தக் குழந்தையை ‘எதற்கும் லாயக்கில்லை; எப்பவும் நீ இப்படித்தான்; எதையும் சரியாக வைத்துக்கொள்ள மாட்டாய்’ என்ற சொல்வது தவறு. இப்படி முத்திரை குத்துவதால் உடைந்த பொம்மை சரியாகிவிடாது. இந்த மாதிரியான வார்த்தைகள் குழந்தைக்கு தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கும்.

இங்கு எனக்கு நினைவிற்கு வரும் ஒரு கதையை சொல்லுகிறேன். முல்லா ஒருநாள் தன் பிள்ளையிடம் மண்பானையைக் கொடுத்து நீர் கொண்டுவர அனுப்புகிறார். மண்பானையை எடுத்துக்கொண்டு புறப்பட்ட தன் மகனைத் திரும்பக் கூப்பிட்டு ‘பளார்’ என்று முதுகில் ஒரு அடி வைக்கிறார். மகன் அழுதுகொண்டே ‘ஏன் அடித்தீர்கள்?என்று கேட்கிறான். நீ பானையை உடைத்தபின் உன்னை அடித்து என்ன பிரயோஜனம்? அதற்காகத்தான் முதலிலேயே அடித்தேன்’ என்கிறார். சற்று யோசித்துப் பாருங்கள். குழந்தை தப்பு செய்தபின் கன்னாபின்னாவென்று அதனை கடிந்து கொண்டு என்ன பலன்?

குழந்தையை நன்னெறிப்படுத்த வேண்டுமென்றால் பெற்றோர் குரலை உயர்த்தாமல், குழந்தையை அடிக்காமல் கட்டுப்பாட்டுடன் அதற்கு சுயக்கட்டுப்பாட்டை போதிக்க வேண்டும்.குழந்தைகள் உருவத்தில் சின்னவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் யோசிக்க முடியும்; புரிந்துகொள்ள முடியும். சிறு குழந்தைகளுக்கென்று ஆசைகள், அவசியங்கள், உணர்வுகள் இருக்கின்றன. தங்களது முதல் ஐந்து ஆறு வயதில் சுதந்திரமான பிரஜையாக இருக்க விரும்புவதால் கட்டுப்பாடுகளை, எல்லைகளை மீற விரும்புகிறார்கள்.

இதன் காரணமாகவே பெற்றோர்களுக்கு குழந்தைகளை நல்நெறிப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.

 • எதிர்மறையாகப் பேசாமல், (உனக்கு எதையும் சரியாகச் செய்ய தெரியாது; எல்லாத்தையும் உடைப்பாய் இதுபோன்ற வார்த்தைகளை தவிருங்கள்)
 • குழந்தைகளின் நிலையில் நின்று யோசிப்பது, அவர்களிடம் நம்பிக்கை வைப்பது,
 • அவர்களைப் புரிந்துகொள்வது,
 • பொறுமையாக அவர்களைக் கையாளுவது,
 • அவர்களை ஒருபொருட்டாக நினைத்து நடத்துவது

இவைகளை நினைவில் வைத்து அவர்களை நன்னெறிப் படுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்வதற்கு முன் இருக்கும் பருவம் தான் குழந்தைகளை சரியான முறையில் வழிநடத்தி அவர்களுக்கு நல்லது கெட்டது இவற்றைச் சொல்லித்தர ஏற்ற பருவம்.

அடுத்தவாரமும் மேலும் பேசுவோம்.

“குழந்தைகளுக்கு சமூகத்தை பற்றியும் கற்றுக் கொடுப்போம்!” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. ரஞ்ஜனி அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்து எழுதியிருக்கும் விஷயங்கள் பெரும்பாலானவர்களால் கற்பிக்கப்பட்டது.கடைபிடிக்கவும் பட்டது. இம்மாதிரி பழக்க வழக்கங்களைத் தொடர்ந்தவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் இதைத்
  தவராது சொல்லியும் கொடுப்பார்கள்.தொடருகிறேன்

 2. அதற்குள் வேறு அவசியமாக எழுந்திருக்க வேண்டி வந்தது.வசதி படைத்த குழந்தைகளானாலும், சிறுவயது முதற்கொண்டே ஒழுக்கமும், பலவிதமான சிறிய வேலைகளும் செய்யப் பழகிக் கொண்டால், தன்னிறைவு பெற்று வாழ வழி வகுக்கும். ஏன் செய்கிறோம் என்ற விஷயம் புரியாமலேயே நல்ல விஷயங்கள்
  மனதில் பதிய ஆரம்பித்து விட்டால் தக்க காலத்தில் காரணங்களும் புரிய ஆரம்பிக்கும். நீ சொல்லாத விஷயங்களே இல்லை.
  பெற்றவர்களும் இதை ஸாமானிய வஷயம் என்று நினைக்கக் கூடாது.
  நல்ல கட்டுரை. நான் சற்று மிலிட்டிரி ரூல் செய்துதான் வளர்த்தேன். ஆண் குழந்தைகள். அதனாலோ என்னவோ? உன் கட்டுரை மிகவும் கரெக்ட். அன்புடன்
  பாராட்டுதல்கள்.

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கென்று ஒரு வழிமுறை இருக்கும். சிலவற்றை நாம் சொன்னால் சிந்திக்கவாவது செய்வார்கள் என்று தான் எழுதுகிறேன். ஒரொரு குழந்தைகள் வீட்டுக்கு வெளியில் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது இப்படிக்கூடவா என்று வியப்பாக இருக்கும். பார்த்ததையும், கேட்டதையும் வைத்து எழுதுகிறேன். உங்கள் பாராட்டுரை உற்சாகத்தையும், சரியாகவே சொல்லிக்கொண்டு போகிறேன் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.