கண்காட்சி, சுற்றுச்சூழல்

“என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” – குழந்தையின் அபயக்குரல்

ஞா.கலையரசி

புதுவையில் 01/03/2015 முதல் 08/03/2015 வரை ஷில்பதரு (Shilpataru) கலைஞர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த கலைக் கண்காட்சியைக் காணும்  வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
இந்நிகழ்ச்சிக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த கரு, ‘மறுசுழற்சி கலை’ என்பதாகும். நாம் குப்பை என்று தூக்கி வீசும் பொருட்கள், இவர்களின் படைப்புத் திறன் மூலம் கவின்மிகு கலைபடைப்புகளாக உருமாற்றம் பெற்றிருந்தன. நான் பார்த்து வியந்த கலைப் பொருட்களை, நீங்களும் பார்த்து மகிழுங்கள்…

வாசலில் எச்.சண்முகம் என்பவர் அடுத்த அடி (Next step) என்ற தலைப்பில் உருவாக்கி வைத்திருந்த மிகப்பெரிய கலை வடிவம், அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.  குப்பை மேலாண்மையில் (waste management) இனியும் நாம் கவனம் செலுத்தாவிட்டால், எதிர்கால பூமி எப்படியிருக்கும், நம் வருங்காலச் சந்ததிகளின் நிலை என்ன, சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை சிறிதுமின்றி எப்படிப்பட்ட பரிதாபமான சூழ்நிலையில் நம் குழந்தைகளை விட்டுச் செல்கிறோம் என்று காண்போரைச் சிந்திக்க வைத்தது அப்படைப்பு.   நாம் தினமும் தொட்டியில் கொட்டும் மக்காத குப்பைகள், கழிவுப் பொருட்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நெகிழிகள் (Plastic) மறுசுழற்சி செய்யப்படாத பொருட்கள் எல்லாமுமாக சேர்ந்து பூமியைக் குப்பை காடாக மாற்றி விட, நம் குழந்தை அதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சி, மனதை மிகவும் பாதித்தது.

shilpatharu_2

கண்ணெதிரே சில அடி தூரத்தில் ஏணி இருந்தும், அதில் ஏற முடியாமல்,  குப்பை புதைகுழிக்குள் கால்களிரண்டும் அகப்பட்டுக் கொண்டு ‘என்னைக் காப்பாற்றுங்கள்,’ ‘என்னைத் தூக்கிவிடுங்கள்,’ என்று குழந்தை அபயக்குரல் எழுப்புவது போன்ற தத்ரூபமான காட்சி, படைப்பாளரின் சமூக சிந்தனையைப் பறைசாற்றியதுடன், காண்போருக்குச் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டுவதாக அமைந்திருந்தது.  தங்களுக்கும் அன்னை பூமியின் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை  இக்கலைப் படைப்புகளின் மூலம் அருமையாக வெளிப்படுத்தியிருந்தனர் இக்கைவினைஞர்கள்.

உடைக்கும், நாகரிகத்துக்கும் மட்டும் மேல் நாடுகளை காப்பியடிக்கும் நம்மவர்கள், நல்லவிஷயமான குப்பை மேலாண்மையை அவர்களிடமிருந்து கற்றுகொண்டால் என்ன?  இன்னும் சுற்றுச்சூழல் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். காய்கறிக் கழிவு, புல், பூண்டு போன்றவற்றிற்குப் பச்சைத் தொட்டி, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைப் போட நீலத் தொட்டி,  மக்காத குப்பை, மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளுக்குக் கறுப்புத் தொட்டி என்று கலர்வாரியாக ஒவ்வொரு வீட்டிலுமே கழிவுகளைப் பிரித்துப் போட்டு விடுகிறார்கள்.

விற்கும் ஒவ்வொரு பொருளிலும் குத்தப்படும் முத்திரையைக்கொண்டு இது மறுசுழற்சி பொருளா இல்லையா என்பதை அறிந்து கொள்கின்றனர்.  செய்யக்கூடிய பொருள் என்றால் எத்தனை முறை ஏற்கெனவே மறுசுழற்சிக்கு உட்பட்டிருக்கிறது; இன்னும் எத்தனை முறை  செய்யமுடியும் என்பதை அதிலுள்ள எண்ணைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் வகை பிரித்து தொட்டியில் போட, குப்பை மேலாண்மை எளிதாகிறது.  இக்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்துமே, தென்னை நார், தேங்காய் மட்டை, குரும்பைகள், பனை ஓலை, ஒயர், விபத்தின் போது சிதறி விழும் கண்ணாடித்துண்டுகள், சவுக்கு காய்கள், நெகிழி குவளைகள் போன்றவைகளை வைத்தே செய்யப்பட்டிருந்தன.  நாம் வேண்டாம் என்று எரியும் பொருட்களிலிருந்து, இப்படியும் செய்ய முடியுமா என வியப்படைய வைத்தது ஒவ்வொரு படைப்பும்.  குப்பைகள் கலைப்பொருட்களாக மாறுவதன் மூலம், நம் குழந்தைகளின் படைப்புத்திறனும் தூண்டப்படுகிறது; குப்பையின் அளவும் குறைகிறது.

கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.

““என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” – குழந்தையின் அபயக்குரல்” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. மிக அருமையான கட்டுரை நிஜமாகவே எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாகத்தான் இருக்கிறது . எனது சொந்த ஊர் பாண்டிச்சேரிதான். ஆனால் இப்போது நான் ஹைதிராபாத்தில் இருக்கிறேன்.

  2. குப்பை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை மிக நேர்த்தியாக கலைப்பொருட்கள் வழியே உணர்த்தும் ஷில்பதரு கலைக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். குப்பைகளால் சூழ்ந்த உலகில் வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை எவ்வளவு மூச்சுமுட்டக்கூடிய போராட்டமாக இருக்கப்போகிறது என்பதை அந்த புதையுண்ட குழந்தை காட்சி தெள்ளந்தெளிவாக உணர்த்துகிறது. மற்றக் கலைப்பொருட்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இவற்றையா நாம் குப்பையில் எறிந்தோம் என்று எண்ணவைக்கின்றன. விழிப்புணர்வூட்டும் பதிவுக்கும் கலைபொருட்களை நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.