அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணரின் இல்லற ஒழுக்கம்!

சமணமும் தமிழும் : பகுதி-5

அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி

ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
    தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’

என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்.

இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன:

1. கொல்லாமை (அகிம்சை), 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்), 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்), 4. பிறன் மனை விரும்பாமை, 5. பொருள் வரைதல், இவை ஐந்தும் ‘அணுவிரதம்’ என்று கூறப்படும்.

இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்ட வேண்டும் என்னும் வரையறுத்துக் கொண்டு, அவ்வரையறைப்படி பொருளை ஈட்டுவதாகும். நிலபுலம், வீடுவாசல், பணம் காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடுமாடு முதலிய பொருள்களை இவ்வளவுதான் ஈட்டுவேன்; இதற்குமேல் சம்பாதிக்கமாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்.

இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம்மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தேன் உண்பது ‘பாவம்’ என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன் புழுக்களைக் கொன்றும் உயிர்க் கொலைகளைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் விரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள். மருந்தைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டியிருந்தால், தேனை விலக்கிச் சர்க்கரைப் பாகுடன் கலந்து கொடுப்பது சமண மருத்துவரின் மரபு.

சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை என்பது. சூரியன் மறைந்த பிறகு உணவு கொள்ளக்கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத்தார்க்கு இன்றியமையாதன. கீழ்க்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது.

  ‘‘கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை
    ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோ டிவைபிறவும்
    பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு
    நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்’’
திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன:

‘‘விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
         விழைவார், கொலையினை விழையார்; பொய்
    உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
         உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
    சுரையால் உணர்வினை அழியார்; அழிதசை
         துவ்வார்; விடமென வெவ்வாறும்
    புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
         புகழார்; குரவரை இகழாரே’’
இச் செய்யுள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்பிடித்தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கெண்டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர் யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அச் செய்யுள் இது:

‘‘செய்யும் வினையும் இருள்உண் பதுவும்
         தேனும் நறவும் ஊனும் களவும்
    பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
         பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
    கையும் முகமும் இதழும் விழியும்
         காலும் நிறமும் போலும் கமலங்
    கொய்யும் மடவார் கண்வாய் அதரங்
         கோபங் கடியுந் தீபங் குடியே’’
இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.

‘‘பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல்
    பொருள்வரைதல் மத்தம்மது புலைசுணலின் நீங்கல்
    பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல்
    மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்’’
என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித்திரன் அறங்கேள்விச் சருக்கம், 173) இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக்கூடாது.

Jain Sculpture from the Samanar Malai, Madurai. by Suryagonewild  via Wikimedia Commons -
Jain Sculpture from the Samanar Malai, Madurai. by Suryagonewild via Wikimedia Commons

தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம்.

1. பிறர்க்குத் தீங்கு நினையாதிருத்தல்; 2. அசட்டைத் தனத்தினால் பூச்சிகளைச் சாகவைக்காதிருத்தல்; அஃதாவது பால், எண்ணெய், நீர் முதலியவற்றை மூடி வைக்காதபடியால் ஈ, எறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 3. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்களை வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிறருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டாதிருத்தலும் ஆம்.

இருபோகம் வரைதல் என்பது போகப் போக பரிமாண விரதம். அஃதாவது போகப் பொருள்களை வரையறுத்தல். உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள், காய் கறிகள் சிற்றுண்டி முதலிய உணவுப் பொருள்கள், பருகும் பால் பாயாசம் முதலிய பானவகைகள், சந்தனம் வாசனைத் தைலம் மல்லிகை ரோசா நறுமணப் பொருள்கள், குதிரை மாடு முதலிய ஊர்திகள், பஞ்சணை முதலிய சயனப் பொருள்கள், காலில் அணியும் பாதர¬க்ஷ முதலிய போகப் பொருள்கள் ஆகிய இவற்றில் இன்னின்ன பொருள்களை உபயோகிப்பதில்லை என்று விரதம் செய்து கொள்ளுதல். இவை பொய், களவு, கொலை முதலியன செய்யா திருப்பதற்கு உதவியாக உள்ளன.

சிக்கை என்பது சிக்ஷவிரதம். இது நான்கு வகைப்படும். அவை: – தேசாவதாசிகம், ஸாமாயிகம், புரோஷதோபவாசம், அதிதி ஸம்விபாகம் என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்.
தேசாவதாசிகம் என்னும் விரதம் மேலே கூறப்பட்ட திசை விரதம் போன்றது. இந்தத் திசையில் இந்த எல்லைக்கு அப்பால் செல்வதில்லை என்று உறுதிசெய்து கொண்டு அதன்படி நடத்தல்.

சாமாயிக விரதம் என்பது தியானத்தில் அமர்ந்திருத்தல். குறைந்த அளவு நாற்பத்தெட்டு நிமிடமாவது கோயிலிலோ அல்லது வீட்டிலோ அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வது. இதைக் காலை நடுப்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளில் செய்யலாம். ஆனால் காலையில செய்வதே சிறந்தது. சாமாயிகம் செய்யும்போது மனம் வாக்குக் காயங்களினால் பாவச் செயல்களை நினைக்காமலும் பேசாமலும் செய்யாமலும் இருக்கவேண்டும்.

புரோதோபவாசம் என்பது போசத விரதம் என்றும் சொல்லப்படும். ஓரிரவும் ஒரு பகலும் ஆகிய ஒரு நாள் முழுவதும் உணவு கொள்ளாமலும் நீர் அருந்தாமலும் உயர்ந்த ஆடை அணிகள் அணியாமலும் இணைவிழைச்ச இல்லாமலும் விரதம் காத்தல். இந்த விரதத்தை மாதத்தில் நான்கு நாள் செய்யவேண்டும். பிற்காலத்தில் துறவு கொள்ளவிரும்பும் சமணர் இந்த விரதத்தை மாதத்தில் ஆறுமுறை செய்வது உண்டு. சமணப் பெண்மணிகள் இந்த விரதத்தை அதிகமாகச் செய்வது வழக்கம்.

அதிதி சம்விபாக விரதம். இது வையா விரதம் என்றும் கூறப்படும். துறவிகளாகிய சமண முனிவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்களில் எதையேனும் அளிப்பேன் என்று விரதம் செய்துகொண்டு அதன்படி ஒழுகுதல் இந்த விரதமாகும். சமண முனிவர் இல்லறத்தாரிடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்கள் எவை என்றால், உணவு, நீர், பழம், கமண்டலம், மருந்து, உடை முதலியனவும் உபயோகப்படுத்திக்கொண்டு திருப்பிக் கொடுத்துவிடுகிற கம்பளி, படுக்கை, ஆசனம் முதலிய பொருள்களுமாம். இந்த வையா விரதம், துறவறத்தாரை இல்லறத்தார் போற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது. இல்லறத்தார் இந்தப் பொருள்களைத் துறவிகளுக்குக் கொடுக்கும்போது பணிவிடையாளரைக் கொண்டு கொடுப்பிக்காமல் தாமே தமது கைகளால் மனமுவந்து கொடுத்தல் வேண்டும். இவற்றைப் பெற்றுக் கொள்ளும் துறவியானவர், தமக்கு வருகையை முன்னரே தெரிவிக்கக்கூடாது; தமக்கு இன்னபொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் கூடாது.

இவ்வாறு சமணசமயத்து இல்லறத்தார்; தாமும் அறவழியில் ஒழுகித் துறவறத்தாரையும் நன்கு போற்ற வேண்டும் என்னும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமணத் துறவிகளைச் சமண இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மிக்க ஆர்வத்தோடு போற்றி வந்தார்கள். இவ்வாறு போற்றுவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுவர். சமணசமய நூல்களில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.                         (குறள்)
என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைந்திருந்தது சமணசமயத்து இல்லற வாழ்க்கை.
_____________________________________________________________________________
5. தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர், சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.
‘‘நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப்போன்றுதான் உடை உடுத்து இருப்பார்கள்’’ என்று கூறியபோது அந்த நண்பர், ‘‘அப்படியா’’ என்று அதிசயப்பட்டார்.

(தொடரும்)

“சமணரின் இல்லற ஒழுக்கம்!” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.