குழந்தை வளர்ப்பு, பெண்

இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ்
அமுதா சுரேஷ்

ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்!

ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன் இந்த நாட்டில் சட்டம் ஊமையாய் வேடிக்கைப் பார்க்கிறது??

குழந்தைகள் காணமல் போகின்றன, நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் பொதுநல வழக்கு போடுகிறார், பின் நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கிறது!

குழந்தைத் தொழிலாளர் தடை சட்டம் இருக்கிறது, பாலியல் கல்வியறிவு இன்னும் பள்ளிகளில் சட்டபூர்வமாக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், சிறுமிகளையும் கதாநாயகி ஆக்கி, ஆபாச பாடல்களுக்கு, அசிங்கமான நடனங்களை அவர்களை ஆடச் செய்கிறார்கள், பாலுறவு குறித்தப் பாடல்களை, காதல் என்ன என்றே அறியாதப் பிள்ளைகளை, குரல் வேட்டை, பாடல் போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் குழந்தையின் மனதை பெற்றவர்களும் மற்றவர்களும் சீரழிக்கிறார்கள்!

அந்தப் பாடலில் குரலில் தாபம் வேண்டும், ஆடலில் இன்னும் கெமிஸ்ட்ரி வேண்டும் என்று நடுவர்கள் குழந்தைகளைப் பிஞ்சிலேயே பழுக்க வைக்க முனைகிறார்கள்!

ஸ்மார்ட் போன்களைக் கையில் கொடுத்து, உலகத்தையே காட்டி, படிப்பில் ஆர்வமில்லாத, ஓடியாட விரும்பாத தலைமுறையை வளர்க்கிறார்கள்!

சூப் சாங், பீப் சாங் என்று குப்பைகளாய் எழுதி நடிகன் என்றும் இசையமைப்பாளர் என்றும் அறியப்படுபவர்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள், “அடிடா அவளை, வெட்றா அவளை” என்று பாடல்களுக்கும் குழந்தைகளை ஆடப் பாட மேடையேற்றி, பின்னாளில் தோல்வியைத் தாங்க முடியாத ஒரு தலைமுறையை வளர்க்கிறார்கள்!

“அவளை இன்னைக்கு கொன்னுடனும்”, “”அவனுக்கு பாலுல போதை மாத்திரை கலந்து இன்னைக்கு உங்களுக்கு முதலிரவு நடக்கணும்” இப்படியே இலக்கியமான அற்புதமான காட்சிகள் வசனங்கள் நிறைந்த நாடகங்களை குழந்தைகளோடு அமர்ந்துகொண்டு பெற்றவர்களும் பெரியவர்களும் பார்க்கிறார்கள்!

குழந்தைகளைப் பற்றிய கவலையின்றி, அவர்கள் முன்னிலையிலேயே தகப்பன்கள் புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், பின் தன் மகனுக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சில ஆசிரியர்கள் காமசூத்திரத்தை பாடமாக எடுக்கிறார்கள், படிக்கச் செல்லும் பிள்ளைகள் சில ஆசிரியரின் குறைந்தப்பட்ச கண்டிப்பைக் கூட தாங்க முடியாமல் கத்தி எடுத்து கொலைச் செய்கிறார்கள்!

சாலையில் செல்லும் போது, தன் தலைக்கு கவசம் அணியும் ஆணோ பெண்ணோ, தகப்பனோ தாயோ தன்னுடனே அழைத்துச்செல்லும் பிள்ளைக்கு தலைக்கவசம் அணிவிப்பதில்லை, மெதுவாய் கீழே விழுந்தால்கூட தலையில்தான் பெரும்பாலும் அடிபடும், குடும்பத்தோடு பயணம் செய்த ஒருவன், தன் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தான், பின்னே மனைவி, அவளுடன் சற்றே வளர்ந்த குழந்தை, பைக்கின் பெட்ரோல் டேங்க் மேலே சிறிய குழந்தையொன்று, நுங்கம்பாக்க சாலையில் ஒரு வளைவில் திரும்புகிறான், இரவு நேரம், ஒரு நீண்ட பள்ளத்தை வேகத்தடுப்பு அமைப்பதற்காகத் தோண்டி, அந்த வேலையை மற்றொரு நாள் முடிப்பதற்காக வழக்கம் போலவே பொதுமக்களின் உயிரின் மேல் அலட்சியம் காட்டும் போக்கில் அப்படியே விட்டுச்செல்ல, சரியாக அந்தப்பள்ளத்தில் அவன் வண்டியைத் திருப்ப முன்னேயிருந்த பிஞ்சு கீழே விழுகிறது, தலையில் கல் பட்டு அங்கேயே உயிர் பிரிகிறது, குழந்தைகளின் பாதுகாப்பில் கோட்டைவிட்டது இங்கு எல்லோருமே!

குற்றம் நடந்தபின்னே பெற்றவர்கள் துடிக்கிறார்கள், ஒரு குற்றம் நடந்தபின்னே அதில் உள்ள ஓட்டைகளை சட்டம் ஆராய்கிறது, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிக்கிறது! குற்றம் நடந்தது என்ன என்று மீடியாக்கள் சீறிப்பாய்கிறது!

சாராயத்துக்காகவும், காசுக்காகவும், காமத்துக்காகவும், உறுப்புகளுக்காகவும், அரசியலுக்காகவும், கட்சி அபிமானத்துக்காகவும் வதைபடுகிறார்கள் , உயிர்விடுகிறார்கள் பிள்ளைகள்! சுமந்துப்பெற்றாலும், அறிவில்லாத, பொறுப்பில்லாத, சுயநலம் மிகுந்த, ஆற்றலில்லாத, அன்பில்லாத, அக்கறையில்லாத பெற்றவர்களிடமும் உடலாலும் உள்ளத்தாலும் துன்பம் அனுபவிக்கிறார்கள்!

இன்னமும் ஆதிகால சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க ஒவ்வொரு குற்றம் நடக்கவும் , அதிலிருந்தே பாடம் கற்று அதை அடைக்கவும் மேதைகள் காத்திருக்கிறார்கள்!

புதிய மருந்துகளை செலுத்தி சோதிக்க வதவதவென்று பிள்ளைகள் பெறுவது அவசியம், படிப்போ ஆரோக்கியமோ எதிலும் கவலையற்று ஒட்டுப்போட அவர்கள் இருந்தால் போதும், அடியாளாக உருமாற கீழ்மட்ட குழந்தைகள் அவசியமென்று இருக்கும் ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தின் கல்வி மற்றும் மருத்துவத்துடன் பிள்ளைகள் வளர்கிறார்கள்!

இத்தனை மடமைகளையும் தாண்டி, இந்தப்பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம், அதுவரை அவர்களைச் சிதைக்காமல் அந்த அலகு வேல், முருகவேல் காக்கட்டும், ஐந்துமுறை தொழுதெழும் கருணைக்காக அல்லா காக்கட்டும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த கர்த்தர் காக்கட்டும்! இன்னும் நம் குலசாமிகள் அத்தனைபேரும் நம் அறியாமையிலும் , போதையிலுமிருந்தும் அவர்களைக் காக்கட்டும்!

அமுதா சுரேஷ் ,  ஐ டி கம்பெனியில் சென்டர் மானேஜர், இரண்டு குழந்தைகளின் தாய். நிகழ்கால சமூக-அரசியல் பல ஊடகங்களில் கட்டுரை எழுதிவருபவர். 

“இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. என்ன சொல்வதென்று தெரியவில்லை. வார்த்தைகள் எழ மறுக்கிறது. என் போன்ற பலரது மனங்களில் உள்ள வலிகளை அற்புதமாக கோர்த்து வரிகளாக்கி இருக்கிறார் தோழி. ஒவ்வொரு வரியிலும் குழந்தைகள் மீதான ஆழ்ந்த அக்கறையும் இந்தக் கேவலமான சமூகம் மீதான கோபமும் தெரிகிறது. அதற்காக அவருக்கு தலைவணங்குகிறேன்.கீழ்த்தரமான திரைப்படங்களும், அதில் வரும் பாடல்களும் நெஞ்சை அறுக்கிறது.

    இன்றைய மது கலாச்சாரம் குறித்து சொல்லவே தேவையில்லை. 32 வயதாகும் நான் மது குடிக்க இன்னும் கற்றுக்கொள்ள வில்லை என்பதற்காக நண்பர்கள் மத்தியில் பலமுறை அவமானப் படுத்தப் பட்டிருக்கிறேன்.( அவர்கள்தான் என்னை அவமானப் படுத்தியதாக நினைக்கிறார்கள்)

    குடிகாரர்களை விட நான் அதிகம் வெறுப்பது புகைப் பிடிப்பவர்களை. கொஞ்சம் கூட உறுத்தல் இன்றி பலர் நிற்கும் இடங்களில் ( குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடங்களில்) புகைப் பிடிப்பவர்களை கண்டால் கொலைவெறி வருவதை தவிர்க்க முடியவில்லை. நெஞ்சை அடைக்கும் அந்தப் புகை எனக்கு மிக வேண்டியவர்களிடம் கூட என்னை சண்டையிட வைக்கிறது. இதைவிட புகைப்பவர்களை கண்டிக்காமல் பயந்து ஒதுங்கிச் செல்லும் நபர்களை பார்க்கும்போது இன்னும் கோபம் அதிகரிக்கிறது.எல்லாவற்றையும் விடக் கொடுமை அப்படிப்பட்டவர்களை கண்டிக்க நினைக்கும் நம்மை , நம் வீட்டு நபர்கள் ‘உனக்கு ஏன் இந்த வீண் வேலை “ என கண்டிப்பது.

    குடியும், புகையும் கொஞ்சி விளையாடும் இந்த கேடுகெட்ட சமூகத்தை நினைத்து, நினைத்து பல நாட்கள் தூக்கம் தொலைத்து மண்டையில் முடி போனதுதான் மிச்சம். தாமதமாகத்தான் திருமணம் செய்தேன். தற்போது மனைவி என்னை கண்டிக்கிறார். என்ன சொல்ல?

    தங்களின் இந்தக் கட்டுரையை வீடு சென்றதும் மனைவியிடம் காண்பிக்க வேண்டும். மீண்டும் பாராட்டுக்கள் தோழிக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.