அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, மயிலை சீனி. வெங்கடசாமி

புத்தரின் பெயரே சாஸ்தா!

புத்தம் ஓர் அறிமுகம் 

மயிலை சீனி.வெங்கடசாமி

இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே ‘சாத்தன் காவு’ என்றும், ‘ஐயப்பன் கோயில்’ என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள்.

கடந்த சில பதிவுகளில் பெளத்த திருப்பதிகள் பற்றி பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சி…

திருப்பாதிரிப்புலியூர்

இப்பொழுது கூடலூர்க்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பண்டைக்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை.

சங்கமங்கை

இதுவும் தொண்டை நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. பௌத்தராயிருந்து, பின்னர்க் காஞ்சீபுரஞ் சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர்ச் சைவ சமயத்தைச் சேர்ந்த சாக்கிய நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே இது பௌத்தரது ஊர் என்பதைத் தெரிவிக்கும். சங்கம் என்பது, புத்த, தர்ம சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. அதாவது, பௌத்தப் பிக்ஷ¨களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே, சங்க மங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பானதென்பதைத் தெரிவிக்கின்றது.

கூவம்
இதுவும் தொண்டை நாட்டிலுள்ள ஒரு ஊர். செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூரிலும் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்த விக்கிரகம் ஒன்றைச் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.
இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

மதுரை
இந்த நகரத்தில் பௌத்தப்பள்ளிகள் இருந்தனவென்பதை மதுரைக் காஞ்சியில்,

‘திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும் ‘

என வரும் அடிகளுக்கு, ‘திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலங்களையுடைவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையும் கூட்டிக்கொண்டு தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளியும்’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருப்பதுகொண்டு அறியலாம்.
அசோக சக்கரவர்த்தி, மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்தப் பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். ஆனால், இந்த விகாரை பள்ளிகளைப்பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ் நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இவை பிற்காலத்தில் கட்டப்பட்டு, நாளடைவில் கட்டியவர் பெயர் மறைந்து, அசோகரும் மகேந்திரமும் கட்டியதாகத் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். யார் கட்டியதாக இருந்தாலும், மதுரையிலும் பௌத்தர்களும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்ததுமட்டும் இதனால் உறுதிப்படுகின்றது. மதுரையில், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், ‘சிந்தாதேவி’ என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.

DSCN0365

அரிட்டாபட்டி
மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஒரு ஊர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷ, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்தமதத்தைப் பரவச் செய்தாரென்றும், அந்த அரிட்டர் என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சி வல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக்கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்து, பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கின்றது.

பொதிகை
பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதி சத்வர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு’ என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகியவச்சிரபோதி (கி. பி. 661 – 730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர் இவரே.

தஞ்சை
பாண்டி நாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்தவூரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு. பாளி மொழியில்
பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்ததாகத் தெரிகின்றது.

திருமாலிருஞ் சோலை

‘அழகர்மலை’ என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுகொண்டு இங்குப் பண்டைக் காலத்தில் பௌத்தர்களும் ஜைனரும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர் திரு. V. R. இராமச்சந்திர தீக்ஷதர் அவர்கள். இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்.

வஞ்சிமாநகர்

இப்போது மலையாளதேசமாக மாறிவிட்ட கேரளதேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது வஞ்சிமாநகர். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருள்ளவன், இந்த நகரத்தில் சிறந்ததோர் புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால் தெரிகின்றது. சிலப்பதிகாரத் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷவின் உபதேசங்களைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுவதும் தானம் செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும் அக்காலமாகும். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவான் என்பவனும், மணிமேகலையும், அறவண அடிகள் என்னும் பிக்ஷ¨வும் இந்த நகரத்திற் சென்று இங்கிருந்த பௌத்த விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமேகலை கூறுகின்றது. இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே ‘சாத்தன் காவு’ என்றும், ‘ஐயப்பன் கோயில்’ என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். ‘சாத்தன்’ என்பது ‘சாஸ்தா’ என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். எனவே, ‘சாத்தன்காவு’ என்றால், புத்தரது தோட்டம் என்பது பொருள். பண்டைக் காலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தகோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர் ‘ஆராமம்’ என்பர். ‘ஆராமம்’ என்றால், தோட்டம் அல்லது கா என்பதே பொருள். (தொடர்புரை 3 காண்க.)

இவையன்றியும், மானாவூர், துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்க யாகப்பரணி உரையில் பௌத்தபுரம் என்னும் ஓர் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில் இருந்ததென்று தெரியவில்லை.

 

“புத்தரின் பெயரே சாஸ்தா!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. மணிமேகலையில் உள்ளது…சிலப்பதிகாரத்தில் உள்ளது எழுதும் நீங்கள் அவர்களிடம் அனுமதி பெற்றீர்களா?
    பின் எதற்கு உங்களுக்கு காப்புறிமைச் சட்டம்?
    சொந்தமாக எழுதினால் காப்புறிமை பற்றி பேசலாம். அங்கிருந்து…இங்கிருந்து சுட்டு எழுதிவிட்டு காப்புறிமை பற்றி பேசலாமா?
    புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் மட்டுமே காப்புறிமை….சொம்மா..எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று எழுதிவிட்டு காப்புறிமை பற்றி பேசக்கூடாது.

    1. மயிலை சீனி. வெங்கடசாமி நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை நண்பரே. நாங்கள் காப்புரிமை குறித்து பேசுவது, சரக்கில்லாமல் பதிவர்களின் சரக்கை திருடும் நிறுவன ஊடகங்களுக்கு எதிராகத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.