சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பெயர் வந்தது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், தக்காளி ரசம், பாரம்பரிய ரெசிபி

பருப்புருண்டை ரசம்!

ருசி

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி
காமாட்சி

பருப்புருண்டைக் குழம்பு என்று சொல்பவரா நீங்கள்?  எது சொன்னாலும் பரவாயில்லை. அதற்கேற்ப ருசியைமாற்றிஅமைத்துவிடலாம்.கிராமத்து சமையல்தானிதுவும். துவரம்பருப்பு கடையில் வாங்குகிறோமே அதை  வீட்டிலேயே ஒரு வருசத்திற்கு வேண்டியதை  தயாரிப்பது வழக்கம். துவரை வாங்கி முளைகட்டி, ஊறவைத்து, காயவைத்து, உடைத்து என ஒரு ஒர்க் ஷாப்பே செயல்படும்.
இந்நாளில் முளைகட்டி ஸ்ப்ரவுட்ஸ் என வழங்கப் படுவதை துவரையை பருப்பாக செய்யுமுன்னரே அதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மொத்தமாக துவரையை வாங்கி ஊற வைப்பார்கள். இரவு தண்ணீரை வடித்துவிட்டு  நிறைய செம்மண்ணைச்  சேர்த்துக் கலந்து  கூட்டி வைப்பார்கள். மறுநாள் வெயிலில்  துவரையைக்  காயப் போடுவார்கள்.  நன்றாக காயும்வரை கலந்துவிட்டு  வெயிலில் காயும். புடைத்தால் மண் நீங்கி விடும்.  காய்ந்த துவரையை எந்திரத்திலிட்டு உடைப்பார்கள். துவரை உடைபடும். தோலைப் புடைத்தெடுத்துவிட்டு மிஞ்சி யிருக்கும் தோலை நீக்க,பருப்பு பாலிஷாக ,உரலில் இட்டு, உலக்கையால் குத்துவது வழக்கம். தோல் நீக்கிப் புடைத்தெடுத்த பருப்பில், குறுணை,அதாவது நொய்யும் இருக்கும்.
அதிக அளவில் தயாரிக்கும் போது நொய்யும் அதிகம் விழும். கடைகளிலும்  நொய் சற்றுக் குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்த நொய்யைக்  கொண்டுதான்,பருப்புப் பொடி, உசிலி, உருண்டைக் குழம்பு,  அடை முதலானவைகள் தயாரிப்பார்கள். இவ்வளவு பெரிய வேலையா? நீங்கள் நினைக்கிறீர்களல்லவா? அப்படியெல்லாமில்லை. வருச செலவுக்கு பருப்பு,சஹாய விலையில் கிடைக்கிறது. சந்தோஷமாகச் செய்யும் வேலை. அவர்கள் நொய்யில் செய்ததை நாம்  பருப்பில் செய்கிறோம். அதுதான் வித்தியாஸம். செய்து பார்க்கிறீர்களா? வாருங்கள்…

வேண்டியவைகள்:
கடலைப்பருப்பு – அரை கப்
துவரம்பருப்பு – அரை கப்
மிளகாய் வற்றல் – 4
புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
தக்காளிப் பழம் – பழுத்ததாக இரண்டு
ரஸப்பொடி – 3 டீஸ்பூன்
ருசிக்கு – உப்பு
தாளித்துக் கொட்ட – கடுகு,பெருங்காயம்,சிறிது,மிளகாய் 1
நெய் – ஒரு டீஸ்பூன்
மிளகு,  சீரகம் சேர்ந்து – 1 டீஸ்பூன்

செய்முறை:
1. பருப்பைக் களைந்து ஊற வைக்கவும். 2 மணிநேரங்கள். ஊறவைத்த பருப்பை வடிக்கட்டி வைக்கவும்.
2. மிளகாய், உப்பு சேர்த்து  மிக்ஸியில் தண்ணீர் விடாது ஒன்றிரண்டாக அரைக்கவும். மிக்ஸியின் சின்ன கண்டெய்னரில் போட்டு அரைத்தால் சரிவர அரையும். வடைக்கு அரைப்பது போலதான். பருப்பு , சரியாக ஊறாவிட்டால் லேசாக தண்ணீர் தெளிக்கும்படி இருக்கும்.
3. அரைத்தக் கலவையை   வழித்தெடுக்கவும்.
4. வழித்தெடுத்த மாவில்  2 டீஸ்பூன் அளவிற்கு, மிளகு, சீரகம், சேர்த்து அரைத்துத் தனியாக வைக்கவும். விருப்பமுள்ளவர்கள் பூண்டு சேர்க்கவும். மிக்ஸியை தண்ணீர் சிறிதுவிட்டு அலம்பித் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
5. இட்லி வேக வைக்கும் ஸ்டான்டை எண்ணெய் தடவித் தயாராக வைக்கவும்.
6. கையில் எண்ணெய் தடவிக்கொண்டு,கெட்டியாக அரைத்த பருப்புக் கலவையை நீண்ட உருளையாகப் பிடித்துக்  கொழுக்கட்டைகளாக இட்லி வேகவைக்கும் ஸ்டாண்டில் பரவலாக வைக்கவும்.

P1020872
7. குக்கரில், நீராவியில் ஸ்டாண்டை வைத்து,10,அல்லது 15 நிமிஷங்கள்  வேகவைத்து எடுக்கவும்.
8. ஸ்டாண்டை வெளியில் எடுத்து ஆறவிடவும். தண்ணீர் முதலானது தெளிக்க வேண்டாம்.
9. தக்காளியை மைக்ரோவேவில் வைத்தெடுத்து புளியைச் சேர்த்துக் கரைத்து   மூன்று கப்பிற்கதிகம் சாறு எடுக்கவும்.
10. ரஸப்பொடி, திட்டமான உப்பு சேர்த்து அகலமான பாத்திரத்தில் ரஸத்தைக் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன்  கொதிக்கும் ரஸத்தில் ஆவியில் வெந்த பருப்புருண்டைகளை நழுவ விடவும்.
P1020877

11. நிதான தீயில் லேசாகத் திருப்பி விட்டு கொதிக்க வைக்கவும்.
12. ரஸம் கொதித்தபின்  மிளகுசீரகக் கலவையில் மிக்ஸி அலம்பிய தண்ணீரையும் வேண்டியஅளவு சேர்த்து கொதித்த ரஸக்கலவையில் சேர்க்கவும்.
13. நுரைத்து,கொதித்து வரும்போது கடுகு,பெருங்காயம் நெய்யில் தாளித்துக் கொட்டி இறக்கவும். கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.  பருப்புருண்டை ரஸம் தயார். பெயர்தான் ரஸம். சற்று திக்காகத்தான் இருக்கும்.
14. பருப்புருண்டைக் குழம்பு என்றால்   சாம்பார் பொடி ,உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்த  புளி தண்ணீரில், உருண்டைகளைச் சேர்த்து, கொதிக்கவைத்து தனியா, சிறிது தேங்காய் வறுத்தரைத்துவிட்டு  கடுகு,வெந்தயம்,பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். இதிலும் வெங்காயப் பிரியர்கள் வெங்காயம்  சேர்க்கலாம். ஆவியில் வேகவைத்த பருப்புருண்டைகளைச் சேர்த்துக் கொதிக்க விடுவதால் உருண்டைகள் கரையாது.
15. குழம்பு தேவையா?  ரஸம் தேவையா? எது வேண்டுமானாலும் செய்யுங்கள்.

P1020879
16. சாதத்தில் சேர்த்துச் சாப்பிடவும், மற்றும் விருப்பம் போல் எதனுடனும் சாப்பிடவும் உதவும்.
17. இம்மாதிரி தயாரித்த பருப்புருண்டைகளை  மோர்க்குழம்பில் சேர்த்தும் ருசிக்கலாம்.
18. அரைத்த பருப்புக் கலவையை வாணலியை சூடாக்கி அதில் போட்டுக் கிளறி  கெட்டியாக்கிப் பிறகு ஆவியில் வேக வைப்பதும் சிலரின் வழக்கம்.

“பருப்புருண்டை ரசம்!” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. உங்களைக் கோணோமே என்று நினைத்துக் கொண்டேன்.வந்ததற்கு மிகவும் நன்றி. என்னைப் பற்றிக் கேட்காதீர்கள். வயதானவர்,பாவம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அன்புடன்

 1. எங்கள் வீட்டில் புருப்புருண்டை குழம்புதான்!
  அரைத்த பருப்புடன் ஒரு ஸ்பூன் அரிசிமாவு போட்டுக் கலந்து கொதிக்கும் புளித் தண்ணீரில் போட்டு விடுவார் என் மாமியார். நானும் அதேபோல மாமியார் சொல்லைத் தட்டாத மாட்டுப்பெண்ணாக அப்படியே செய்வேன். எப்படி உருண்டை கரையாமல் இருக்கிறது என்று என் அம்மா ஆச்சரியப் படுவாள்.
  நீங்கள் சொல்லியிருப்பதும் செய்ய சுலபமாகவே இருக்கிறது.

  1. இந்த வழியில் குழம்போ,ரஸமோ ஸரியாவரும். பருப்புருண்டை குழம்பு மாதிரி சேவைக்கான மாவைக்கூட கொதிக்கும் ஜலத்தில் உருட்டிப்போட்டு வேகவைத்துப் பிழிவதுதான் வழக்கம். இப்போது இட்லியாக வேகவைத்துச் செய்கிறேன். அதுபோலதான் இதுவும். மாமியார் மெச்சிய மருமகளே, இந்த முறையும் முயற்சிக்கவும்.. உங்கள் முறை
   நானும் செய்திருக்கிறேன். அன்புடன்

 2. புளி சேர்த்து பருப்புருண்டை குழம்புதான் செய்திருக்கிறேன், ரசம் ரெசிப்பி புதிதாக இருக்கும்மா! நீங்க சொன்ன துவரம்பருப்பு பக்குவம் ஊரில் சித்தி வீட்டில் செய்வாங்க..சிறுவயதில் பள்ளி விடுமுறை ஒரு மாதம் அங்கேதான் கழியும், அப்போது இந்த வேலைகளெல்லாம் ஜரூராக நடக்கும். ஆர்வமாக பார்த்து ரசிப்போம்! 🙂

  1. ரஸம்,குழம்பு எல்லாம் அக்கம் பக்கம்தான். துவரை முளைகட்டி உடைப்பதென்ற விஶயம் உனக்கும் தெரியும். படித்து ரஸித்திருக்கிராய். பார்த்தும் ரஸித்திருக்கராய்.. இது எனக்கு ஸந்தோஶம். அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.