காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகளை தெரிந்து கொள்வோம்!

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 42

ரஞ்சனி நாராயணன்

சென்றவாரம் பொதுவாக நமது செவிகள் செய்யும் வேலைகளைப் பார்த்தோம். இந்தவாரம் செவிகளின் அமைப்பைப் பார்க்கலாம். நமது காதுகளில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. புறச்செவி, நடுச்செவி, உட்செவி ஆகியவை அவை.

புறச்செவி: இதை ஆங்கிலத்தில் Pinna என்கிறார்கள். இது நாம் பார்க்க முடியும் வகையில் வெளியே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் தான் நாம் காதுகுத்தல் செய்து தோடுகள் போட்டுக்கொள்ளுகிறோம். நம் நண்பர்கள், ‘அருகே வா, ஒரு ரகசியம் சொல்லுகிறேன்’ என்று கிசுகிசுப்பதும் இந்தப் பகுதியில்தான். இந்தப் பகுதியின் முக்கிய வேலை நாம் கேட்கும் ஒலிகளை சேகரிப்பதுதான்.

செவிக்குழல் (Ear Canal) இருப்பதும் இங்கேதான். இங்குதான் செவிக்குரும்பி அல்லது காது மெழுகு சேருகிறது. இந்த மெழுகுப் பொருள் உண்மையில் செவிக்குழலை தொற்றுநோய் தாக்காதவாறு காப்பாற்றுகிறது. செவிக்குள் அழுக்கு போகாமலும் காக்கிறது. இந்தக் காது குரும்பி அழுக்கு என்றாலும் பயனுள்ள அழுக்கு!

நடுச்செவி: செவிக்குள் நுழையும் ஒலி அலைகள் செவிக்குழலைத் தாண்டி நடுச்செவிக்குள் நுழைகிறது. நடுச்செவியின் வேலை இந்த ஒலி அலைகளை அதிர்வுகளாக மாற்றி உட்செவிக்கு அனுப்புவது. இதைச் செய்வதற்கு உதவுவது தான் செவிப்பறை என்னும் ear drum. இது செவிப்பறை என்பது ஒரு இழுத்துக் கட்டப்பட்ட சருமம். போகிப் பண்டிகையின் போது உடுக்கை போல ஒன்றை வைத்துக் கொண்டு ‘டமடம’ என்று அடிப்போமே, அதில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் தோல் போலவே நம் செவியினுள்ளும் இந்த செவிப்பறை இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இந்த செவிப்பரைதான் புறச்செவியையும், நடுச்செவியையும் பிரிக்கிறது. நடுச்செவியில் இன்னும் மூன்று எலும்புகள் உள்ளன.

  • முதல் எலும்பிற்கு சுத்தி (Hammer) எலும்பு என்று பெயர்.
  • இரண்டாவது எலும்பு பட்டைச் சிற்றெலும்பு – (anvil)
  • மூன்றாவது அங்கவடி எலும்பு – (stirrup)

ஒலி அலைகள் காதில் புகுந்து, செவிப்பறையை அடையும்போது அதில்  அதிர்வு அலையை உண்டாக்குகிறது. அப்போது இந்த மூன்று சின்ன சின்ன எலும்புகளும் அசைகின்றன. ஒலியை உட்காதுக்கு அனுப்புவதற்கு இந்த மூன்று எலும்புகளும் உதவுகின்றன. செவிப்பறை அதிரும்போது, முதலில் சுத்தி எலும்பு, பிறகு பட்டைச் சிற்றெலும்பு பின்னர் அங்கவடி எலும்பு என்று ஒவ்வொரு பகுதியாக ஒலிகள் கடத்தப்படுகின்றன. இப்படிக் கடத்தப்படும் ஒலிகள் உட்செவியை அடைகின்றன.

Anatomy_of_the_Human_Ear

உட்செவி:
உட்செவிக்குள் வரும் ஒலியலை அதிர்வுகளாக காதுநத்தை (Cochlea) எலும்புக்குள் நுழைகிறது. இந்த எலும்பானது ஒரு சுருள் எலும்பு. அதனாலேயே நத்தை எலும்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த எலும்பிற்குள் திரவம் நிரம்பி இருக்கிறது. ஒலியலை இந்த திரவத்தை அலைபோல அசைய வைக்கிறது. இதனால் மேலே சொன்ன மூன்று எலும்புகளும் அதிருகின்றன.

காது நத்தை எலும்பில் வரிசையாக நுண்ணிய உரோமங்கள் கூடிய திசுக்கள் அமைந்திருக்கின்றன. இவை மிக மிக நுண்ணியவை அதனால் மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே தெரியும். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல இவை நுண்ணியவையாக இருந்தாலும் முக்கியமானவை. ஒலியலைகள் காதுநத்தை எலும்பை அடைந்தவுடன் இந்த உரோமங்கள் அசைகின்றன. இந்த அசைவினால், ஒலியலைகள் நரம்பு சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன. இவற்றை நமது மூளை எளிதாக
புரிந்துகொள்ளுகிறது. இத்தனை நடந்த பிறகே உங்களுக்கு உங்கள் காதலி/காதலன் ‘ஐ லவ் யூ’ சொல்வது கேட்கிறது!

மலைமேல் ஏறும்போதோ, விமானத்தில் பறக்கும்போதோ, காது அடைத்துக்கொள்வது ஏன்? உயரத்தில் செல்லச் செல்ல நம் காதுகளில் இருக்கும் காற்றின் அழுத்தம் பாதிக்கப்படுகிறது. அதனால்தான் இப்படி ஆகிறது. ஆனால் நமது நடுச்செவி ஒரு குறுகலான குழாய் –  யூச்டேஷியன் (eustachian) குழாய் – மூலம் நமது மூக்கின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் ஒரு அழுத்த வால்வு ஆக வேலை செய்து இப்படி அடைப்பு ஏற்படும்போது திறந்து கொள்ளுகிறது. இதனால் நமது இரு செவிப்பறைகளிலும் ஒரே மாதிரியான அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. இதன் காரணமாக நம் செவிகள் பாதுகாக்கப்படுகின்றன.

IMG_8403

நமது சமநிலைக்கும் செவிகளே காரணம். எப்படி என்று பார்ப்போம்.
உட்செவியில் காதுநத்தை எலும்பிற்கு மேல் மூன்று லூப்புகள் (கண்ணிகள்) இருக்கின்றன. இவை அரைவட்ட குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றினுள்ளும் திரவம் நிறைந்திருக்கிறது. இவைகளும் நுண்ணிய உரோமங்கள் நிறைந்தவை.

நாம் தலையை அசைக்கும் போது இந்த அரைவட்ட குழிகளில் உள்ள திரவம் அசைகிறது. இந்த அசைவு நுண்ணிய உரோமங்களை அசைக்கின்றன. இதனால் நமது தலையின் நிலை (தலைவரின் தலை நேராக இருக்கிறது, ஒரு பக்கம் சாய்ந்திருக்கிறது) பற்றிய செய்தி மூளைக்குச் செல்லுகிறது. ஒரு நொடிக்குள் மூளை சம்பந்தப்பட்ட நரம்புகளுக்கு செய்தி அனுப்பி நமது சமநிலை தவறாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஜயன்ட் வீலில் சுற்றிவிட்டு கீழே இறங்கிய பிறகும் நம் தலை சுற்றுகிறதே, ஏன்?

நாம் ஜயன்ட் வீலில் சுற்றும்போது நமது காதுகளில் உள்ள அரைவட்ட குழாய்களில் உள்ள திரவம் சுழல ஆரம்பிக்கிறது. கீழே இறங்கியவுடன் நாம் சுற்றுவது நின்றுவிட்டாலும், சட்டென்று இந்த சுழற்சி நிற்பதில்லை. இதனால் நமது மூளைக்கு நமது தலையின் நிலை – சுழலுகிறது, நேராக நிற்கிறது – என்ற இரண்டு வித வித்தியாசமான செய்திகள் கிடைக்கின்றது. பாவம் குழம்புகிறது, மூளை! அதனால் மூளையால் சரியான செய்தியை சம்பந்தப்பட்ட நரம்புகளுக்கு அனுப்பமுடிவதில்லை. அதனால் தலை சுற்றுவது போலவே இருக்கிறது. செவிகளுக்குள் இருக்கும் திரவம் சுற்றுவது நின்றவுடன் மூளையும் அப்பாடி ஆளு சரியான நிலைக்கு வந்தான் என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டு நம்மை நேராக நிற்க வைக்கிறது!

அடுத்த வாரம் மேலும் கேட்போம்!

 

“காதுகளை தெரிந்து கொள்வோம்!” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. எட்டாம்வகுப்பில் பயாலஜி வகுப்பில் கேட்டவைகள் எல்லாம் ஒரு முறை நினைவுக்கு வந்தது மிக அழகாக எழுதியிருக்கிறீர்கல் பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.