அரசியல், அரசியல் பேசுவோம், தமிழகம், தமிழ்நாடு

என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு? கருணாநிதி கேள்வி

karunaமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கண்காணிப்பு குழு நியமனத்துக்கு தடை கோரி கேரள அர்சு உச்சநீதிமன்றம் செல்லும் நிலையில் தமிழக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“23.6.2014 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கையில், காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் எப்படி தமிழ்நாட்டின் உரிமை தன்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று பாலாறு நதிநீர்ப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும் என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார். நான் அதற்கு அப்போதே 27ஆம் தேதியன்றே, காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையிலும் தன்னால் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விட்டிருக்கிறாரே, காவேரி நதி நீர்ப் பிரச்சினை தீர்ந்து விட்டதா? தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் வரு கிறதா? சாகுபடி ஒழுங்காக நடைபெறுகிறதா? முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப் பட்டு விட்டதா என்றெல்லாம் கேட்டிருந்தேன். அதற்கு இன்று வரை பதில் இல்லை.

அதுபோலவே 27.6.2014 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், கேரள மாநில சட்டப் பேரவையில், கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் 2009ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என்று பேசியிருக்கிறாரே, இந்த உரிமையாரால் நிலை நாட்டப்பட்டது என்று கேட்டிருந்தேன்.
என்னுடைய கேள்விக்கு தமிழக முதலமைச்சர், அந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று பின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நான் அவசரப்பட்டு அறிக்கை விட்டு விட்டதாகவும் என்னைக் கடுமையாகத் தாக்கிப் பதில் கூறியிருந்தார். ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பாகவே, கேரள மாநில முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்களே, 29.6.2014 அன்று செய்தியாளர்களிடம் கூறும் போது, இந்த நான்கு அணைகளும் தங்களுக்கு சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண் டாடுவது தவறானது, அந்த அணைகள் தமிழ்நாட் டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதி முறைப்படி முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வரு கிறது. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகியுள்ளது. இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றெல்லாம் தெரிவித்திருந்தார். நான் கேரள முதலமைச்சரின் இந்தப் பதிலைச் சுட்டிக்காட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்னிடம் ஆத்திரம் காட்டுவதற்குப் பதிலாக, கேரள முதல்வரின் இந்தக் கூற்றுக்கு பதில் அளிக்கும்படி தெரிவித்திருந்தேன். ஆனால் வழக்கம் போல ஜெயலலிதா மௌனமாகிவிட்டார். எந்தப் பதிலும் கூறவில்லை.

இதற்கிடையே டெல்லிக்கு வந்த கேரள முதலமைச்சரிடம், தினமணி செய்தியாளர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பது பற்றி கேள்வி கேட்ட நேரத்தில், கேரள முதலமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் கேரள அரசின் நிலை எப்போதும் தெளிவாகவே உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தினால், அணையைச் சுற்றியுள்ள ஐந்து கரையோர மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற் படும். அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள மாநிலத்துக்கு நிலவும் அச்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என மறு ஆய்வு மனுவில் வலியுறுத்தியுள்ளோம். அதன் மீது உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை கேரளத்துக்கு சாதகமான நிலை காணப்படாவிட்டால், குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவுரை கோரும் நட வடிக்கையை மேற்கொள்வதா அல்லது வேண்டாமா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அரீஷ் சால்வே உள்ளிட்டவர்களோடு கேரள முதலமைச்சர் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி கண்காணிப்புக் குழுவை நியமித்தது. அந்தக் குழு செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன்பாகவே, கேரளத்தின் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு அனுமதிக்கவும், அதன்மீது முடி வெடுக்கும் வரை கண்காணிப்புக் குழுவின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் உச்ச நீதி மன்றத்திடம் கேரள அரசு கேட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் முதலமைச்சரோ, முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலே தமிழ்நாட்டின் உரிமை தன்னால் நிலைநாட்டப்பட்டது என்று தனக்குத் தானே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்.
இப்படித்தான் கடந்த ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. உடனே ஜெயலலிதா காவேரி நதி நீர்ப் பிரச்சினையில் தன்னால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டு விட்டது என்று தஞ்சையிலே விவசாயிகளையெல்லாம் அழைத்து வந்து பாராட்டு விழா நடத்திக் கொண்டார்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை என்ற ஒரே காரணத்தைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இப்போதும் கூறுகிறார்கள். 1980ஆம் ஆண்டிலேயே அணையைப் பலப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு 1998இல் பலப்படுத்தும் பணி நிறைவுற்றது. அணை பலம் உடையதா என்பதை சோதனை செய்ய மத்திய அரசு வடமாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை டாக்டர் எஸ்.எஸ். பிரார் தலைமையில் நியமித்து அந்தக் குழு முல்லைப் பெரியாறு அணையை நேரில் உரிய கருவிகளுடன் ஆய்வு செய்தது. அணை பலமாக உள்ளது, 145 அடி தண்ணீர் தேக்கலாம் என்று அறிக்கையை அந்தக் குழு கொடுத்தது. ஆனால் இந்த அறிக்கையை கேரள அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது.
1996ஆம் ஆண்டுக்கும், 1999ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், தி.மு.கழக ஆட்சியில், இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக பல கடிதங் களை நான் கேரள அரசுக்கு எழுதினேன். தேதியோடு சொல்லவேண்டுமேயானால், 2-12-1996, 29-3-1997, 7-11-1997, 3-12-1997, 9-12-1997,10-12-1997, 11-12-1997, 15-12-1997, 8-1-1998, 20-1-1998, 24-2-1998, 3-4-1998, 28-5-1998, 13-6-1998, 2-7-1998, 13-8-1998, 21-8-1998, 30-9-1998, 13-10-1998, 24-5-1999, 6-7-1999, 14-7-1999, 22-7-1999, 5-8-1999 என்ற தேதி களில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காகக் கடிதம் எழுதியிருக்கிறேன். 5.4.2000 அன்று நான் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை யும் நடத்தியிருக்கிறேன். 19.5.2000 அன்று டெல்லி யில் நடைபெற்ற இரண்டு மாநில முதல்வர்களுட னான பேச்சுவார்த்தையில் நானும், அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகனும் சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினோம்.
பின்னர் டி.கே. மித்தல் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி மீண்டும் வேறு வேறு கோணத்தில் அணையை ஆய்வு செய்தது. இந்தக் குழு வினரும் சோதனை செய்து அணை மிகவும் உறுதியாக உள்ளது, குறைந்த அளவிலான சீப்பேஜ் வாட்டர்தான் வருகின்றது என்று மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தது. இதையும் கேரள அரசு ஏற்க மறுத்தது.

பின் கேரள அரசே, கொச்சி கடற்படையினரை வரவழைத்து, அணையில் நீரில் மூழ்கி எக்கோ டெஸ்ட் – நீர் கேமிரா போன்ற பல சோதனைகளைச் செய்து, அவர்களும் அணை பலமாக உள்ளது, ஆனால் 15 அடி சேரும் சகதியும் உள்ளது என்று அறிக்கை கொடுத்தனர். முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை கேரள அரசு ஏற்க மறுத்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியவுடன், கேரள அரசு ஒரு புதிய சட்டத்தினை இயற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்த முடியாதபடி செய்தார்கள். இதை எதிர்த்து தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. இந்த வழக்கில் 25.9.2006 அன்று தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வாறும், அதனைத் தொடர்ந்து 23.10.2006இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், 29.11.2006 அன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் அவர்கள் முன்னிலையில் தமிழக முதல்வராக இருந்த நானும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தம் அவர்களும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரள அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 18.12.2006 அன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களின் முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. அதன் பின்னர், இந்தியப் பிரதமர் அவர்கள் கூறியபடி மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் தமிழக மற்றும் கேரள முதல்வர்களின் கூட்டம், 19.12.2007 அன்று டெல்லி யில் நடைபெற்ற போதிலும், அதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வு, 20.1.2010 முதல் 17.2.2010 வரை வாதங் களைக் கேட்ட பிறகு, 18.2.2010 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களைத் தலைவராகக் கொண்டு, ஐந்து நபர்கள் கொண்ட ஓர் அதிகாரமளிக்கப்பட்ட குழுவினைஅமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவில் நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணனும், கேரளாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமசும் இடம் பெற்றிருந்தனர். குழுவினர் அணையை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் அணை மிகுந்த பலத் துடன் இருப்பதாகத் தெரிவித்து, அதையடுத்து, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் ஆணையிட்டது.
ஆனால் அதற்குப் பிறகும் கேரள அரசு அணை பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்து, உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனுவினை இப்போது தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு இதுகுறித்து முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் அளித்த பேட்டியில், “முல்லைப் பெரியாறு அணை மிகுந்த பலத்துடன் உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான அணை முல்லைப் பெரியாறு மட்டுமே. ஆனாலும் அணை பலவீனமாக இருப்பதாக சிலர், கேரள மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இதைப்பற்றி தமிழக அரசின் சார்பில் என்ன செய்யப் போகிறார்கள்? கேரள முதல்வரும், கேரள அரசும் இதைப் பற்றி டெல்லியில் வழக்கறிஞர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றம் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்று கேரள முதல்வரே டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றியெல்லாம் கவலைப்படவோ, ஆலோசிக்கவோ தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா? அந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது, முல்லைப் பெரியாறு பிரச்னையில் தன்னால்தான் தீர்வு ஏற்பட்டது என்று திரும்பத் திரும்ப சுய புராணம் பாடிக் கொண்டிருக்கப்போகிறதா? நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு பெருவாரியாக வாக்களித்து விட்டார்கள், எனவே தங்களைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களா?’’ என்று கேட்டிருக்கிறார் கருணாநிதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.