பெண், பெண் இயக்குநர், பெண்களின் சுகாதாரம், பெண்ணியம்

மாதவிடாய் குறும்படம் அறிமுகம்

unnamed

 எழுத்து: இரா.உமா

“எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை”
– கவிஞர் கனிமொழி
மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் கீதா. இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?
மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.
அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?
தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.
இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.

இயக்குநர் கீதா
இயக்குநர் கீதா

கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது.  பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.
மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.
மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.
மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
சமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.
நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.