உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளைக் கண் டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் அதிமுகவினரின் யதேச்சதிகார போக்கை கண்டித்துள்ளன. திமுக இதைக் காரணம் காட்டியே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கல்சிகள் இது குறித்து வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்துகொள்வதும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது. குறிப்பாக, புதுக்கோட்டை நகராட்சித் தலைவருக்கானத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், பாஜக வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் ஆளும்கட்சியினர் தடுத்து விட்டார்கள்.
ஆளும்கட்சிக்கு ஆதரவாக புதுக்கோட்டை நகராட்சி ஆணையர், நேரம் முடிந்து விட்டது எனக் கூறி, வேட்புமனுக்களைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முறையிட்டபோது, நகராட்சி ஆணையர் எந்தத் தவறும் செய்யவில்லை என ஆளும்கட்சிக்குத் துணையாக நின்றார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்கள் எந்தக் காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்பந்தத்தால் தேர்தல் அலுவலர்கள் ஆளும்கட்சிக்குத் துணை நிற்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்த வேண்டும். உள்ளாட்சி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. உள்ளாட்சி மன்றங்கள் ஜனநாயகரீதியாக செயல்பட தமிழக வாக்காளர்கள் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.