இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளை தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்!

செல்வ களஞ்சியமே – 75

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

ஒரே சமயத்தில் ஒரு டஜன் விளக்குகளை எரிய வைக்கும் சக்தி கொண்ட  மூளையை உடைய குழந்தையை எப்படி சமாளிப்பது?

குழந்தையுடன் பேசுங்கள்

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் மிகப்பெரிய  பதவியில் இருக்கலாம்; உங்கள் ஆணைக்கு பலர் காத்திருக்கலாம்; பலர் நிறைவேற்றலாம். ஆனால் உங்கள் குழந்தையின் முன்பு நீங்கள் ஒரு அம்மா அல்லது அப்பா. இதை முதலில் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். குழந்தையிடம் பேசுவதற்கு முன் உங்கள் அலுவலக முகமூடியை கழற்றி வைத்து விடவும். நீங்கள் எத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும், எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் குழந்தையின் முன் அவையெல்லாம் செல்லுபடி ஆகாது. குழந்தையின் அளவிற்கு நீங்கள் இறங்கி வரத் தயாராக இருக்க வேண்டும். இதற்கு முதலில் உங்கள் அலுவலக முகமூடியைக் கழற்ற வேண்டும். இரண்டாவதாக, உங்கள் மடிக்கணணி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை அணைத்து தூர வைத்துவிடுங்கள்.

செய்யக்கூடாதவை:

  • குழந்தை உங்களிடம் ஆசையுடன் ஏதோ சொல்ல வரும்போது ‘எனக்கு இப்போ டைம் இல்லம்மா. நீ தொணதொணன்னு பேசுவே. எனக்கு வேற வேல இருக்கு’ என்று சொல்லாதீர்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? குழந்தையை அலட்சியம் செய்கிறீர்கள் என்பதுடன் ஒரு பெற்றோராக உங்கள் கடமையை தட்டிக் கழிக்கிறீர்கள் என்றும் பொருள். ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள்: நீங்கள் ஆசை ஆசையாக ஏதோ சொல்ல வரும்போது உங்கள் எதிரில் இருப்பவர் நீங்கள் மேலே சொன்னவற்றை சொன்னால் எப்படி இருக்கும் உங்களுக்கு? குழந்தைகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • ஒரு கண் உங்கள் லேப்டாப்பில்; ஒரு காதில் உங்கள் ஸ்மார்ட் போன் என்று குழந்தையின் பேச்சைக் கேட்காதீர்கள். உங்கள் அலட்சியம் குழந்தைக்குப் புரியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை பேசுவதைக் கேட்க தயாராகுங்கள் – எல்லாவிதத்திலும். உங்கள் கவனம் முழுவதும் குழந்தை சொல்லும் விஷயங்களின் மேல் இருக்கட்டும்.
  • ‘இன்னிக்கு ஸ்கூலில் என்ன நடந்தது? டீச்சர் என்ன சொன்னாங்க? ஹோம்வொர்க் என்ன இருக்கு?’ என்று சுவாரஸ்யம் இல்லாமல் கேட்காதீர்கள். சீக்கிரம் சொல்லி முடி. எனக்கு ஒரு கால் இருக்கு…’ என்று குழந்தையின் பேசும் ஆர்வத்தை அணைக்காதீர்கள்.

child and mother

குழந்தைகளுக்கு சின்ன சின்ன விஷயங்களின் மேல் ஈர்ப்பு அதிகம் இருக்கும். முக்கிய விஷயங்களை விட்டுவிட்டு இந்த சின்னச்சின்ன விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் சொல்லுவார்கள் சில குழந்தைகள்.

குழந்தையுடன் பேசுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். தினமும் குழந்தையுடன் நேரம் செலவழிப்பதை உங்கள் முதல் வேலையாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையுடன் பேசும்போது விவாதங்களுக்கும், குழந்தை சொல்லும் யோசனைகளுக்கும் தயாராக இருங்கள். குழந்தை கேட்கும் அறிவு சார்ந்த கேள்விகளுக்கு இணையத்தில் பதில் தேடி குழந்தைக்குப் புரியும் வகையில் சொல்லுங்கள். குழந்தையுடன் கழிக்கும் நேரம் உங்களுக்கும் குழந்தைக்கும் பயனுள்ளதாகவும், அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கட்டும். பேசி முடிந்தபின் குழந்தைக்கு நிறைவு உண்டாக வேண்டும். உங்களுக்கு நிறைவாக இருக்க வேண்டும் என்பதுடன் குழந்தையைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டோம் என்ற உணர்வும் இருக்க வேண்டும்.

  • குழந்தையுடன் பேசும்போது (வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு) குழந்தையை விட்டுவிட்டுப் போகிறோம் என்ற குற்ற உணர்ச்சி வேண்டாம். அதை ஈடுகட்டவே இப்போது நீங்கள் குழந்தையுடன் நேரம்  செலவழிக்கிறீர்கள் என்பது நினைவில் இருக்கட்டும். ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் சில அம்மாக்கள் இந்த குற்ற உணர்ச்சியினால் குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு விடுவார்கள். குழந்தையும் அம்மாவின் பலவீனத்தை புரிந்து கொண்டு தலைக்கு மேல் ஏறும். அம்மாக்கள் உஷார்!
  • ரொம்பவும் கண்டிப்பான பெற்றோராகவோ, அல்லது அதிகச் செல்லம் கொடுக்கும் பெற்றோராகவோ இல்லாமல் கண்டிப்புடன் கூடிய அன்பைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். குழந்தை தன் வயதுக்கு மீறி பேசும்போதோ அல்லது விளையாட்டு சாமான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும்போதோ கண்டிக்கத் தயங்காதீர்கள். தவறு செய்தால் தண்டிக்க அம்மா தயங்க மாட்டாள் என்பது குழந்தைக்கு புரிய வேண்டும்.
  • குழந்தையின் நடவடிக்கைகள் உங்கள் கவனத்திற்கு வருகின்றன என்பதை குழந்தை புரிந்துகொள்ள வேண்டும். தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கும் அதே சமயத்தில், குழந்தையின் நிலையில் நின்று கருணையுடன் பார்க்கவும் வேண்டும். நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ அது குழந்தை தன்னைப் பற்றி நினைப்பதிலும் பிரதிபலிக்கும். அதாவது உங்களின் பிரதிபிம்பம் தான் குழந்தை. நீங்கள் எப்படி உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றீர்களோ, அதேபோல உங்கள் குழந்தையும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளட்டும். சிறுவயதுக் குழந்தைகள் பெற்றோர்களையே தங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளும். குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்கள் நடவடிக்கைகளையே கண்ணாடி போலக் காட்டும். அதனால் நீங்கள் ஒரு நல்ல உதாரணமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
  • ஒப்பீடுகளை தவிருங்கள். ஒப்பிடுவது தவறு என்று உங்கள் குழந்தைகளுக்கும் புரிய வையுங்கள். பக்கத்துவீட்டுக் குழந்தையிடம் இருக்கும் விளையாட்டு சாமான்கள் எல்லாம் நம் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; அந்தக் குழந்தை அணியும் உடைகள், காலணிகள் நம்மிடம் இல்லையென்றால் தவறில்லை. நாம் சற்று வித்தியாசமாக இருக்கலாம்; அவர்களிடம் இல்லாத பல பொருட்கள் நம்மிடம் இருக்கின்றன. அவர்கள் வேறு; நாம் வேறு; என்பதை எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவ்வபோது சொல்ல வேண்டும். நீங்கள் உங்களை அடுத்தவருடன் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்; குழந்தைகளையும் இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள்.

அடுத்த வாரம் தொடர்ந்து பேசுவோம்.

“குழந்தைகளை தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.