இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு

ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்

jeymohan
மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ள நிலையில் விமர்சகர் ஞாநி நாவல் குறித்து முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் “வெண்முரசு’ எனும் பெயரில் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். மொத்தம் 30 ஆயிரம் பக்கங்களில், 30 நாவல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக “வெண்முரசு’ எதிர்காலத்தில் விளங்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஓராண்டில், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்களை ஜெயமோகன் எழுதி முடித்துள்ளார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில், இந்த நாவல்கள் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூர், அருங்காட்சிய கலையரங்கில் நேற்று நடைபெற்றது. நாவல்களை வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, ‘ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அவரின் இந்தப் படைப்புக்கு இசையமைக்க நேர்ந்தால், அவர் எழுதும் வேகத்துக்கு என்னால் இசையமைக்க முடியுமா எனத் தெரியவில்லை. மகாபாரதத்தை தமிழில் நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார்’ என்றார் அவர்.

‘பைபிளை மிஞ்சும் அளவுக்கு 3,000 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் உலகின் மிகப்பெரிய இலக்கியப் படைப்பாக உள்ள மகாபாரதத்தை, நாவல் வடிவில் எழுதும் ஜெயமோகனின் முயற்சி மிகவும் தைரியமானது. மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதும் கடினமான தமது முயற்சியின் மூலம் ஜெயமோகன் பேராசை மிக்கவராகத் தெரிகிறார்’ என்றார் நடிகர் கமல்ஹாசன்.

jeyamo

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய ஏற்புரையில், ‘மகாபாரதத்தை நாவலாக எழுத வேண்டும் என்பது 25 ஆண்டுகளுக்கு மேலான என் கனவு. ஐரோப்பிய மரபுகளை எடுத்துரைக்க, கிரேக்க- ஆர்மீனிய மொழிகளில் பரந்துப்பட்ட படைப்புகள் இருப்பதைப்போல், நமது பெருமைமிக்க இதிகாசமான மகாபாரதத்தை பெரிய அளவில் மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற எனது வேட்கையையும் இந்த நாவலை எழுத முக்கியக் காரணம்.

30 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட நாவலை இந்தக் காலத்தில் யார் படிப்பார்கள் என்ற கேள்வி என் முன் வைக்கப்படுகிறது. இதற்கு, 300 பக்கங்களே கொண்ட நாவலாக இருந்தாலும், அந்தப் படைப்பு நன்றாக இல்லையென்றால் அதனை யாரும் படிக்கமாட்டார்கள் என்பதுதான் என் பதில்.

வெண்முரசு நாவல் வரிசையில் இதுவரை எழுதப்பட்டுள்ள நான்கு நாவல்களை, இணைய தளத்தில் தினமும் சராசரியாக 5,000 பேர் படிக்கின்றனர். இந்த நாவல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்பு, பீஷ்மர், துரோணர், அர்ச்சுனர், கிருஷ்ணர், திரௌபதி, குந்தி என மகாபாரதத்தின் அனைத்து கதைமாந்தர்கள் பற்றி விரிவாக விவரிக்கும் உலகின் சிறந்த படைப்பாகவும், தமிழில் அதிகம் படிக்கப்படும் படைப்பாகவும் வெண்முரசு விளங்கும்’ என்றார் அவர்.  இந்த நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் ஜெயமோகனை வாழ்த்திப் பேசினர். பல ஆண்டுகளாக, மகாபாரதம் பிரசங்கம் செய்துவரும் சொற்பொழிவாளர்கள் இரா.வ.கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.கே.செல்வதுரை, கூத்துக் கலைஞர்கள் தேவன், ராமலிங்கம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். வெண்முரசு நாவல்களுக்கு ஓவியம் வரைந்துவரும் மணிகண்டன், சண்முகவேல், மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட்டு வரும் அருள்செல்வர் பேரரசன் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வெண்முரசு குறித்து விமர்சகர் ஞாநி தன்னுடைய கருத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ‘ஜெயமோகனுடன் எனக்கு அரசியல், கலாச்சார, வாழ்வியல் நேர்மை, அன்றாடம் பின்பற்றும் அறம் முதலியன தொடர்பாக கடும் கருத்து வேறுபாடுகளும் விமர்சனமும் உண்டென்றாலும், அவரது பிரமிப்பூட்டும் உழைப்பை நான் எப்போதும் வியக்கிறேன். மகாபாரதம் எனக்குப் பிடித்தமான இலக்கியம். ( ராமாயணம் அவ்வளவு உகப்பானதே அல்ல.) எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைத்த யோசனைப்படி பிரபஞ்சன் போன்ற ஓர் எழுத்தாளர் சம கால இளம் வாசகர்களுக்கு மகாபாரதத்தை எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரும் உழைப்பை செலவிட்டு ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு ஒரு வியர்த்தமான முயற்சி என்பதே என் கருத்து. நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் புலவர்கள் சிலரால் பின்பற்றப்பட்டு காலாவதியாகிப் போன ஒரு இலக்கிய உரைநடையை அவர் மீட்டுருவாக்கம் செய்ய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.இப்போது அதைப் படித்து ரசித்து மகிழும் சிலரிலும் பெரும்பாலோர் இதே படைப்பு அவர் பெயருடன் வெளியாகாமல், எழுதியவர் பேரா. அருமனை வெற்றிப்பிரியனார் என்று இருந்திருந்தால் ஓரிரு பத்திகளுக்கு மேல் படிக்கக்கூட மாட்டார்கள். அவர் அவாவுவது போல இந்தப் படைப்பு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நிச்சயம் காலத்தை வென்று மதிக்கப்படும் ஒரு படைப்பாக ஆகும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. (அதை அறிய நானும அவரும் இருக்கமாட்டோம் என்பதே ஆறுதல்.) அவருடைய படைப்பாற்றல் இதில் ஆங்காங்கே கீற்றுகளாகப் பளிச்சிட்டாலும், அவையெல்லாம் காபியில் போட்ட முந்திரிப்பருப்பு மாதிரி வீணாகின்றன. இதற்கு அவர் செலவிடும் உழைப்பை அவர் நான் பெரிதும் விரும்பும் மாடன் மோட்சம் போன்ற சிறுகதைகளை, காடு, பின்தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல்களை எழுத செலவிட்டிருந்தால், தரமான ஐம்பது சிறுகதைகளும் ஐந்து நாவல்களும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும். அவரிடம் இருக்கும் படைப்பாற்றலை, இந்த வெண்முரசு எழுத்துப் பணி வீணடிக்கிறது என்பதே என் வருத்தம். அவரிடம் தங்கள் விமர்சனத்தை , கறாராகவும் அக்கறையோடும் சொல்லக் கூடிய நண்பர் வட்டமே அவருக்கு இல்லாமல் போய்விட்டதென்றே எனக்குத் தோன்றுகிறது. இது அவருக்குப் பெரிய இழப்பேயாகும். என் கருத்து, பலருக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தக் கூடுமென்றாலும், திறமைசாலியான கடும் உழைப்பாளியான ஒரு படைப்பாளியை ஒரு ரசிகர் மன்ற சூழல் வீணடிப்பதைப் பற்றி சொல்லியே தீரவேண்டும் என்பதால் சொல்லிவிட்டேன்’ என்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.