அனுபவம், இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

செல்வக் களஞ்சியமே – 76

ரஞ்சனி நாராயணன்

‘நாங்கள் தாயின் கருப்பையிலும் பாதுகாப்பாக இல்லை; வெளியிலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’

சமீபத்தில் பெங்களூரில் ஒரு ஆறு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைக்குப் பிறகு பொங்கி எழுந்த கல்லூரி மாணவிகளின் கூட்டத்தில் ஒரு மாணவி கையில் பிடித்திருந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவை. படிக்கும்போதே மனது பதறுகிறது. நம் குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்கிற விஷயம் நம்மை தலை குனிய வைக்கிறது, இல்லையா? பாதுகாப்பான ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். தங்கள் குழந்தை பருவங்களைக் கூட நம் குழந்தைகள் தொலைக்க வேண்டுமா?

‘உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டும் உடைகளை பெண்கள் அணியக் கூடாது. அதுதான் இதைப்போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கக் காரணம்’ என்று அரசியல் பெரிய தலைகள் எல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டிருக்கின்றன. ஆறு வயது பள்ளிக் குழந்தை என்ன மாதிரி உடை அணிந்திருக்கும் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட என்று தோன்றினாலும், எங்கேயோ பார்த்த காட்சிகளின் தினவை சொறிந்துகொள்ள குழந்தைகள்  அகப்பட்திருக்கிறார்கள் இந்தக் கயவர்களுக்கு. குழந்தைகளின் உடலை ஒருவன் காமக்கண் கொண்டு பார்க்கிறான் என்றால் அவன் நிச்சயம் மனிதனல்ல; கொடிய மிருகம்.

bang-protest

கர்நாடக முதலமைச்சர் ‘பள்ளி வளாகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு பள்ளிகளே பொறுப்பு’ என்று கூறி கைகழுவிவிட்டு விட்டார். என்ன மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்ற வேதனை தான் ஏற்படுகிறது. எத்தனை பெற்றோர்கள் குழந்தைகள் பத்திரமாக பள்ளியில் இருக்கிறார்கள் என்ற மனநிம்மதியுடன் அலுவலகம் செல்லுகிறார்கள்? இனி அந்த மனநிம்மதி என்ன ஆகும்? ஆசிரியர் என்ற போர்வைக்குள் ஒரு மிருகம் இருப்பது குழந்தைக்கோ, பெற்றோர்களுக்கோ எப்படித் தெரியும்?

ஒரு பத்திரிக்கைக்காக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான அநீதிகளைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத, ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்திருந்த கட்டுரையை மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. குழந்தைகள் என்றாலே நமக்கு கள்ளங்கபடமற்ற சிரிப்பும், கவலையில்லாத முகமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் எத்தனை எத்தனையோ குழந்தைகள் வாழ்வில் இவை இல்லவே இல்லை என்பதை அந்த ஆங்கில கட்டுரை மூலம் அறிந்த போது இரண்டு மூன்று நாட்கள் இரவில் தூக்கமே வரவில்லை. இப்படியும் நடக்குமா, என்ன அநியாயம் இது என்று மனது பரிதவித்துப் போயிற்று.

நம் குழந்தைகளைப் பாதுகாப்பது நம் கடமை. ஒவ்வொரு பெற்றோரும் தம்மைவிட தம் குழந்தைகள் நல்ல படிப்பு, நல்ல வசதிகளைப் பெற வேண்டும் என்றுதான் பாடுபடுகிறார்கள். எவனோ ஒரு கயவனின் கையில் நம் குழந்தை அகப்பட்டு சிதைந்து போகலாமா?

குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது இந்தக் கொடியவர்களிடமிருந்து?

 • குழந்தைகளை (ஆண், பெண் இருபாலரையுமே) யாருடனும் – எத்தனை தெரிந்தவர்களாக இருந்தாலும் வெளியே தனியாக அனுப்பக் கூடாது.
 • நீங்கள் இல்லாமல் காரில் ஓட்டுனருடன் கூட அனுப்பாதீர்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தபின் விதம்விதமான வகுப்புகளுக்குப் போய்வருகிறார்கள். ரொம்பவும் தெரிந்த ஓட்டுனர், பல வருடங்களாக உங்கள் வீட்டில் வேலை செய்கிறார் என்றாலும் கூட, பெற்றோர்களே, குழந்தைகளை அவர்களுடன் அனுப்பாதீர்கள். யார் எந்த சமயத்தில் எந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பார்கள் என்றே தெரியாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் கடமை.
 • நமக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் நம் குழந்தைகளுக்கு எதிரி. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகம் ஆனவர் என்ற தகுதியே விபரீதம் நிகழ சந்தர்ப்பத்தை அளிக்கிறது.நாம் என்ன செய்தாலும் குழந்தை தன் பெற்றோர்களிடம் சொல்லாது; சொன்னாலும் அவர்கள் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணம் தவறு செய்யத் தூண்டுகிறது. இவர்களைப் பற்றிக் குழந்தைகள் நம்மிடம் சொன்னாலும், ‘ச்சே! அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்’ என்று நாம் குழந்தைகளை நம்ப மாட்டோம். இதுதான் ஆபத்தில் முடிகிறது.
 • குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன் அன்றைய தினம் என்ன நடந்தது என்று விவரமாகக் கேட்டுக் தெரிந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன விவரங்களையும் கவனமாகக் கேளுங்கள்.
 • குழந்தை வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்தாலோ, கவனக் குறைவுடன் இருந்தாலோ உடனே விசாரியுங்கள். இந்த சமயங்களில் குழந்தைகளை திட்டாதீர்கள். நீங்கள் திட்டினால் குழந்தைகள் பயந்துகொண்டு தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேச மாட்டார்கள்.
 • குழந்தைகளிடம் இதுபோல நடக்கும் கொடுமைகள் பற்றி பொதுவாகச் சொல்லி எச்சரிக்கை செய்யுங்கள்.
 • எதற்காகவும், யாரும் உங்கள் குழந்தையின் மேல் கைவைக்கக் கூடாது. தொட்டுப் பேசவும் கூடாது. அசிங்கமான ஜோக்குகள் சொல்லக்கூடாது.
 • குழந்தை யாரையாவது ‘bad uncle’ என்று சொன்னால் பொறுமையாகக் குழந்தையின் பேச்சைக் கேளுங்கள். ஏன் அப்படிச் சொல்லுகிறது, எந்த விஷயத்தில் அங்கிள் பேட் ஆக நடந்து கொண்டார் என்று விசாரியுங்கள்.

‘ஆழம்’ இதழில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை பற்றி வந்திருந்த எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இதோ:

பரவலாக எல்லா இடங்களிலும் மதம், கலாசாரம், வர்க்கம்என்று வேறுபாடில்லாமல் குழந்தைகள் சிறார்கள், சிறுமிகள் பேதமின்றி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். நகரம், கிராமம் வேறுபாடில்லை. உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தந்தை, சகோதரன், ஆசிரியர், அறிமுகமற்றவர்கள் என்று எங்கிருந்தும் யாரும் அத்துமீறல் செய்யமுடியும். இப்படிப்பட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று பொதுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இவர்களில் பலர் நம் வீட்டுக்குள் இருப்பவர்கள் என்னும் உண்மைமையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

‘ஹக்’ என்ற குழந்தைகளுக்கான உரிமை மையத்தின் இணை இயக்குனர் இனாக்ஷி கங்குலி சொல்கிறார்: ‘குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் இந்த மாதிரியான வன்முறைகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது குழந்தைகள் தனிமையில் விடப்படுவது ஒரு காரணம். நடுத்தர, மேல் வர்க்கக் குழந்தைகள்கூட  இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் நெருக்கமான குடும்ப வலைக்குள் இருப்பதால் இதைப்பற்றி பேச யாரும் இருப்பதில்லை;  குடும்பத்தின் ‘மரியாதை’ முக்கியமாகக் கருதப்பட்டு மௌனம் காக்கப்படுகிறது.’

குழந்தைகள் பத்திரம் பெற்றோர்களே! அடுத்த வாரம் சந்திப்போம்.

“கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?” இல் 2 கருத்துகள் உள்ளன

 1. நல்ல விழிப்புணர்வு கட்டுரை ரஞ்சனி.

  சிறுவயதிலிருந்தே குழந்தைகளை கவனமாய் நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்க்க வேண்டும் பெற்றோர்கள். இந்தகாலக்கட்டத்தில் இன்னும் பொறுப்பு அதிகமாகிறது.

  யாரைத்தான் நம்புவதோ! என்ற நிலையில் இருக்கிறோம்.
  பெண் குழந்தைகளுக்கு சில விஷ்யங்களை சொல்லித்தர வேண்டும் அது இப்போது மிக அவசியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.