இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்!

செல்வ களஞ்சியமே – 81

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

எடுஸ்போர்ட்ஸ் (EduSports) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி 23 மாநிலங்களில் 85 நகரங்களில் 287 பள்ளிகளில் 1,15,559 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டது.

சாதாரண உடற்பயிற்சி, உடலின் நெகிழ்வுத்தன்மை, கீழ் மற்றும் மேல் உடலின் வலிமை, உடல்நிறைக் குறியீட்டெண் (BMI) ஆகியவற்றில் இக்குழந்தைகளின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது. ஆண் குழந்தைகளின் உடல்நிறை குறியீட்டெண் 59% ஆகவும் பெண்குழந்தைகளின் உடல்நிறை குறியீட்டெண் 65% ஆகவும் இருந்தது. இந்த அளவீட்டில் பெண்குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்.

ஆனால் மற்ற ஆரோக்கிய அளவுகளில் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளைவிட ஆரோக்கியக் குறைவாக இருக்கிறார்கள்.

மொத்தத்தில் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் அத்தனை நன்றாக இல்லை.

 • மொத்தக் குழந்தைகளில் 38% குழந்தைகளுக்கு உடல்நிறை குறியீட்டெண் ஆரோக்கியமானதாக இல்லை.
 • இரண்டில் ஒரு குழந்தைக்கு மேல் உடம்பில் சக்தி குறைவாக இருக்கிறது.
 • ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உடம்பின் சக்தி குறைவாக இருக்கிறது.
 • பத்தில் மூன்று குழந்தைகளுக்கு ஓடும் வேகம் அவர்களது வயதிற்கு தகுந்த அளவில் இல்லை.
 • நான்கில் ஒரு குழந்தைக்கு உடலின் நெகிழ்வுத்தன்மை தேவையான அளவிற்கு இல்லை.
 • இருபது குழந்தைகளில் ஏழு குழந்தைகளுக்கு அடிவயிற்று வலிமை மிகவும் குறைவாக இருந்தது.

இந்தத் தலைமுறையே பலவீனமானவர்களோ என்ற சந்தேகத்தை இந்த ஆய்வு ஏற்படுத்தியிருக்கிறது. எப்படி இதை சரி செய்வது?
பொதுவாகவே நாம் வீட்டில் சொல்வதுண்டு. முந்தைய தலைமுறை நம்மைவிட ஆரோக்கியமானவர்களாக இருந்தார்கள் என்று. அதையே இந்த ஆய்வும் சொல்லுகிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், சுத்தமான சுற்றுச் சூழலுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.

காற்றில் மாசு, நீரில் மாசு, நிறைய இரசாயன உரம் சேர்க்கப்பட்டு விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் தரம் குறைந்திருக்கிறது. இவற்றில் எல்லாவற்றையும் நம்மால் சரிசெய்ய இயலாது. ஆனால் சிலவற்றை நிச்சயம் நம்மால் மாற்ற முடியும். நம் குழந்தைகளுக்காக அவற்றைச் செய்வோம்.

 • நீரை வடிகட்டிக் குடிப்போம்.
 • இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளை வாங்குவோம்.
 • பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துவதற்கு முன் நன்கு கழுவுவோம்.
 • குழந்தைகளுக்கு கையை அலம்பும் பழக்கத்தை ஏற்படுத்துவோம்.
 • சுத்தம் சுகாதாரத்தின் அடிப்படை என்பதை அவர்களுக்குப் புரியவைப்போம்.
 • காற்றில் மாசு குறைய பொது வாகனங்களை பயன்படுத்துவோம். தனியார் வாகனங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவதால் போக்குவரத்து நெருக்கடிகளும் குறையும். காற்று மாசுபடுவதும் குறையும்.
 • வாகனங்களை சரியானமுறையில் பராமரிப்போம். அதிக புகைவிடும் வாகனங்களால் சூழல் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதைப்போலவே உடற்பருமனுள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர் நிச்சயம் உதவலாம்.

family

அதிக உடற்பருமனால் வரும் அபாயங்கள்:
அடிவயிற்று பருமன், இரண்டாம் வகை சர்க்கரை நோய் இரண்டுமே இந்த ஆரோக்கியமின்மையினால் வரும் அபாயங்கள். ஆரோக்கியமில்லாத உடல்நிறைக் குறியீட்டு எண்ணிற்கு காரணம் தற்காலச் சிறுவர் சிறுமிகள் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பது அல்லது பெற்றோர்களின் ஸ்மார்ட் போனில் ஏதாவது விளையாடுவது அத்துடன் ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைவிட சிறப்பான உடல்நிறைக் குறியீட்டு எண் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சிறுவயதிலிருந்தே தங்கள் உடல் பற்றிய கவனத்துடன் இருப்பதுதான். பல பள்ளிகளில் விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு 2 மணிநேரம் தான் நடக்கின்றன. அப்படியில்லாமல் தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதே வயது கிராமப் புறத்துக் குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று மேம்பட்டு இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. நகர்ப்புறத்தைவிட அங்கு சுற்றுப்புறச்சூழல் நன்றாக இருப்பதும், காற்று, நீர் இவற்றில் மாசு சதவிகிதம் குறைந்திருப்பதும் இதற்குக் காரணம். அதிகப்படியான நவீன சாதனங்கள் வீடுகளில் இல்லாதிருப்பதும், உடல் உழைப்பு அதிகம் இருப்பதும் கூட இக்குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குக் காரணங்கள்.

நகர்ப்புறங்களில் இப்போது வளர்ந்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கலாச்சாரம் குழந்தைகளுக்கு விளையாட திறந்த வெளிகளை கொடுப்பதில்லை. அதனால் பள்ளி விட்டு வந்ததும் குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல். எத்தனை நேரம் பள்ளிப் புத்தகத்தைப் படிப்பது? நடுநடுவில் விளையாட அம்மா அப்பாவின் ஸ்மார்ட் போன்கள்தான் துணை.

அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் மாலை பள்ளிவிட்டு வந்தவுடன் சாப்பிட காலையில் செய்த அதே டிபன். குழந்தைகள் வெளியில் பானிபூரி, பேல்பூரி என்று ஆரோக்கியமில்லாத உணவுகளை சாப்பிட வேண்டிய நிர்பந்தம்.

நம் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் இந்தப் போக்கினை சீர்செய்ய முன்வரவேண்டும். இது இன்றைய சூழலில் மிக மிக அவசியம் மற்றும் அவசரம். என்ன செய்யலாம்?

 • சிறுவயதிலிருந்தே பழங்கள் சாப்பிடப் பழக்குங்கள். நீங்கள் முதலில் அவற்றை சாப்பிட ஆரம்பியுங்கள். குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுங்கள்.
 • இயன்றவரை வெளி உணவுகளை வாரம் ஒருமுறை, 15 நாட்களுக்கு ஒருமுறை என்ற வழக்கத்தைக் கொண்டுவாருங்கள்.
 • திறந்தவெளி விளையாட்டுக்களை விளையாட குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். சிரமத்தைப் பார்க்காமல் வெளியில் அவர்களை தினமும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.
 • உங்கள் அலைபேசிகளை அவர்கள் தொடக்கூடாது என்பதில் கண்டிப்புக் காட்டுங்கள்.
 • ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்களை அரைமணிநேரம் மட்டுமே விளையாட வேண்டும் என்ற ஒரு பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.
 • குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே சின்னச்சின்ன வேலைகளை செய்யப் பழக்குங்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும், உங்களுக்கும் கூட பயனுள்ளதாக அமையும்.
 • ஆரோக்கியம் என்பது தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று என்பதை நீங்களும் உணர்ந்து, குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

குண்டாக இருக்கும் குழந்தைகள் மட்டுமே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில்லை. ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முதலில் இதை பெற்றோர்கள் உணர வேண்டும். பிறகு குழந்தைகள் மனதிலும் இதை வேரூன்ற செய்ய வேண்டும்.

புதுவருடம் நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் ஆண்டாக வைத்துக்கொள்ளுவோம்.

“குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்!” இல் ஒரு கருத்து உள்ளது

 1. ஆரோக்கியம் என்பது தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று என்பதை நீங்களும் உணர்ந்து, குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.//

  அருமையான கட்டுரை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.