ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமக்கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், ‘ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். கட்சியின் சார்பில் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள க. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும்.
க. அண்ணாதுரை (வயது 42) +2 வரை படித்துள்ளார். 1988ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னரே மாணவர் சங்கத்தில் சேர்ந்து மாணவர்களின் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். 1993ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவராகவும், பின்னர் 2015ல் திருச்சி மாநகரச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி மாநகர மக்களின் பிரச்னைகளுக்காக பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றுள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காக முன்னின்று போராடுபவர் தோழர் க. அண்ணாதுரை. இவருக்கு ஏ. விமலா என்ற மனைவியும், ஏ. பிடல் காஸ்ட்ரோ என்ற மகனும் உள்ளனர்’ என்று தெரிவித்தார்.