இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா?

செல்வ களஞ்சியமே – 89

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

தேர்வு சமயத்தில் என்ன விளையாட்டு? என்று தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாதீர்கள். தூக்கம் போலவே விளையாட்டும் குழந்தைகளின் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கிறது. மாலை முழுதும் வேண்டாம் ஒரு அரைமணியாவது விளையாடிவிட்டு வந்து படிக்க உட்காரட்டும். என்ன விளையாட்டு விளையாடலாம்? கிரிக்கெட் போன்ற போட்டி போடும், நிறைய பேர்கள் விளையாடும்  விளையாட்டுக்களை தவிர்த்துவிட்டு பந்து ஒன்றை தட்டித் தட்டி விளையாடும் விளையாட்டை விளையாடலாம். பந்தினை விடாமல் தட்டும்போது மனம் அதில் ஒன்றிவிடுகிறது. அது பாடங்களில் கவனம் செலுத்தவும் உதவுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுவற்றில் பந்தை எறிந்து அதை கீழே விழாமல் பிடிப்பது இன்னொரு நல்ல விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கவனச் சிதறலை தடுப்பதுடன், குழந்தைகளின் அபரிமிதமான சக்தியையும் நல்லமுறையில் செலவழிக்க உதவுகின்றன.

தயவு செய்து எந்தவொரு வீடியோ கேமும் வேண்டாம். வீடியோ கேம்கள் குழந்தைகளிடத்தில் ஒருவித வெறியை உண்டு பண்ணுகின்றன. ஒரு லெவல் ஆடி முடித்தபின் அடுத்த லெவல் அடுத்த லெவல் என்று முடிவில்லாத ஆட்டங்கள் அவை. மற்றவர்களுடன் ஆடாமல் தான் மட்டுமே ஆடி வெற்றி பெற வேண்டும் என்கிற அளவிற்கு அதிகமான ஆர்வத்தை – இந்த ஆர்வமே வெறியாக மாறுகிறது – உண்டு பண்ணுபவை.

எனது மாணவர் ஒருவர் என்னிடம் கேட்டார்: ‘எல்லா ஆசிரியர்களும் தினசரி வகுப்பில் நடக்கும் பாடங்களை அன்றன்றைக்கே படித்துவிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். நீங்கள் அதைப்போல உங்கள் பள்ளி/கல்லூரி நாட்களில் செய்திருக்கிறீர்களா?’ என்று! ‘இல்லை’ என்று உண்மையைச் சொன்னேன். இன்னொரு உண்மையையும் இங்கு சொல்லவேண்டும். அந்தக்  காலத்தில் எங்கள் கவனத்தை திசை திருப்ப இத்தனை சாதனனகள் இருக்கவில்லை. படிப்பு ஒன்று மட்டும் தான்.

அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்துவிடுவது என்பது சற்று சிரமம்தான் என்றாலும் அந்த வார முடிவிலாவது முடிந்தவரையில் பாடங்களை படித்துவிடுவது நல்லது. ஆசிரியர் சொல்லிக்கொடுத்தவுடன் ஒருமுறையாவது நன்றாகப் பாடங்களை படிப்பதால் பாடங்கள் நன்றாக மனதில் பதியும் என்பது மறுக்க முடியாத உண்மை. சந்தேகங்களையும் உடனடியாகத் தீர்த்துக் கொள்ள முடியும். வெறும் கேள்வி பதில்களை நெட்டுரு போடாமல் பாடத்தைப் படித்துப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

_MG_1391

பெற்றோர்கள் குழந்தைகளை தேர்விற்கு என்று தயார் செய்யாமல் வருட ஆரம்பத்திலிருந்தே படிக்க வைப்பதால் கடைசி நேர டென்ஷனைத் தவிர்க்கலாம். குழந்தைகளும் தேர்வு என்றால் பயமில்லாமல் இருப்பார்கள். தேர்வுக்கு முன் படிப்பதற்காக சில பெற்றோர்கள் ஒரு கால அட்டவணை போட்டுக் கொடுப்பார்கள். அதையும் குழந்தையின் உதவியுடன் தயார் செய்ய வேண்டும். எந்தெந்தப் பாடங்களில் குழந்தை ஏற்கனவே நன்றாக தயார் ஆகியிருக்கிறாளோ அந்தப் பாடங்களுக்கு சற்றுக் குறைவான நேரமும், அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய பாடங்களுக்கு நிறைய நேரமும் அளித்து அட்டவணை தயார் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பாடங்களைப் படிக்காமல் போகக்கூடும். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். நடுநடுவில் ஓய்வு வேண்டும். சாப்பிடவும், விளையாடவும், உடலைத் தளர்த்திக் கொள்ளவும் நேரம் விட வேண்டும். அட்டவணைப் படி குழந்தை படிக்கிறாளா என்று பெற்றோர்கள் பார்க்க வேண்டும். எந்தப் பாடங்கள் கடினமாக இருக்கின்றனவோ அவற்றை எளிய முறையில் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்து தயார் செய்ய வேண்டும். மிகமிகப் பொறுமையாக குழந்தையை தேர்விற்கு தயார் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். தேர்வு சமயத்தில் எந்தக் காரணம் கொண்டும் குழந்தையை திட்டாதீர்கள். முதலிலிருந்தே குழந்தையை தயார் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை மறவாதீர்கள்.

நினைவுத்திறன் வளர வேண்டுமென்றால் திரும்பத்திரும்ப படிப்பது ஒன்றே வழி. சில குழந்தைகளுக்கு எழுதிப் பார்த்தால் நினைவு இருக்கும். அவர்களுக்கென்று ஒரு சிலேட்டு பலப்பம் வாங்கிக் கொடுங்கள். பேப்பரை வீண் செய்யாதீர்கள். நான் எனது முதுநிலை தேர்விற்குக் கூட சிலேட்டு பலப்பம் வைத்துக் கொண்டு தான் எழுதி எழுதிப் பார்ப்பேன். இதில் தவறு எதுவும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போதே மாணவ மாணவிகளின் தற்கொலை செய்தியும் வந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்தும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் இந்தத் தேர்வு முடிவில் மட்டுமே வாழ்க்கை என்பது முடிவதில்லை என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைகளுக்கும் இதனை புரிய வைக்க வேண்டும். தேர்வு, மதிப்பெண்கள் இவற்றை விட குழந்தைகளின் உயிர் விலை மதிப்பற்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நினைவுத்திறன் வளர்க்க என்று சந்தையில் பல மாத்திரைகள் கிடைக்கின்றன. தயவுசெய்து அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். எந்தவிதத்தில் இந்த மாத்திரைகள் குழந்தைகளுக்கு உதவாது என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இத்தனை அழுத்திச் சொல்லுகிறேன் என்றால் நானும் இந்தத் தவறை செய்திருக்கிறேன். என் பிள்ளை படிப்பதெல்லாம் மறந்து விடுகிறது என்று சொல்லுகிறானே என்று அப்போது சந்தையில் பிரபலமாக இருந்த ஒரு மாத்திரையை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்களில் குழந்தை ரெஸ்ட்லஸ் ஆக இருக்க ஆரம்பித்துவிட்டான். பாதி தூக்கத்தில் எழுந்து அம்மா படிக்கட்டுமா என்று கேட்க ஆரம்பித்தான். செயற்கையான ஒரு பரபரப்பு அவனிடத்தில் தென்பட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் என் தவறை நான் உணர்ந்தேன். பாவம் குழந்தை என்ன மடத்தனம் செய்துவிட்டேன் என்று உடனே அந்த மாத்திரை பாட்டிலை தூக்கி எறிந்தேன்.

இன்று நினைத்தால் கூட என் குழந்தையை அன்று நான் சித்திரவதை செய்துவிட்டேனோ என்று தோன்றும். அதனால் தான் சொல்லுகிறேன். தயவு செய்து விளம்பரங்களைப் பார்த்தே ஏமாந்து போய் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொடுக்காதீர்கள், ப்ளீஸ்!

தேர்வு சமயத்தில் என்ன உணவுகளைக் கொடுக்கலாம்? அடுத்த வாரம் பேசுவோம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.