அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஆந்திர காவல்துறையால் கொல்லப்பட்ட 20 தமிழர்கள்: முழு பின்னணி

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள் –  உண்மை அறியும் குழு அறிக்கை – 2

இதன் முந்தைய பதிவு இங்கே…

ஒரு இயற்கை வளப் பாதுகாப்புச் செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை

திருப்பதிமற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ள இந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல் மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும் இது கூறப்படுகிறது. 2009ல் கிலோ 100 ரூபாயாக இருந்த இம்மரம் இன்று கிலோ 2000 ரூபாய். வாசனையற்ற இச்சந்தன மரம் சீனா, ஜப்பான், பர்மா முதலான பவுத்த நாடுகளில் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காகவும், மருந்துக்காகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் பெரிதும்விரும்பப்படுகிறது. இதனுடைய அசாத்தியமான சிவப்பு வண்ணம் இதன் சிறப்பு. இந்த மரத்தை ‘அழியும் உயிரிகளில்’ (endangered species) ஒன்றாக “இயற்கைப் பாதுகாப்பிற்கானபன்னாட்டு ஒன்றியம்” (IUCN) 2000 த்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்புத்தான் மாஃபியாக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியது. இம்மரத்தைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டால் நூறு மடங்குவரை லாபம் கிடைக்கும். அழியும் உயிரி என்பது இந்த வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது. கட்டுப்பாடுகள் மிகும்போது அவற்றை மீறுவதால் விளையும் பயன்களும் அதிகமாகின்றன; ஆபத்துக்களும் அதிகமாகின்றன. பயன்களை இந்த வணிகத்தில் மேல் அடுக்கில் உள்ள மாஃபியாக்களும், ஆபத்துகளைக் கீழடுக்கில் உள்ள மரம் வெட்டிகளும் எதிர் கொள்கின்றனர்.

மிகப் பெரிய அளவில் இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக இந்த மாஃபியாக்கள் உள்ளனர். இன்று மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கி ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தைய முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார்ரெட்டி இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.

சந்திரபாபுநாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்தபோதிலும் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதிகளாகவே உள்ளன. சென்ற தேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவே உயர் காவல்துறை அதிகாரிகளைக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலைமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ்ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.

நவம்பர் 2014 ல் “ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை” (APRSASTF) உருவாக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் சென்ற பிப்ரவரியில் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது தலைமையில் இயங்கிய படைதான். நாயுடு எதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர் பக்கம் பணிவு காட்டத் தொடங்கினர்.

தமிழக எல்லையோர மாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான்செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் கரகாட்டக்காரரான மோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு 30 வீடுகள் உண்டு. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட 32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச் சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

சென்ற ஆண்டு மத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும்அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.

சிறப்புப் படை அமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள் எல்லோரும் செம்மரக் கடத்தற் கண்ணியில் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது, வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப் பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில் தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது என முடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர் மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப் படுகின்றனர். உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்; தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறது எனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.

கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் தமிழர்கள்

நாங்கள் சென்றிருந்த மூன்று பகுதிகளிலும் அடிக்கடி இவ்வாறு மரம் வெட்டப் போகிறவர்கள்கொல்லப்பட்டு உடல்கள் கொண்டுவரப் படுகிறதா எனக் கேட்டபோது எல்லோரும் இல்லை என மறுத்தனர். யாரும் காணாமல் போயுள்ளார்களா எனக் கேட்டபோது சித்தேரி மலையில் அப்படி ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் எனச் சொல்லப்பட்டது,

சென்ற டிசம்பர் 2013ல் ஸ்ரீதர் ராவ், டேவிட் கருணாகர் என்கிற ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர், ஸ்ரீதர் ராவ் மிக்க நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர்,இதற்குப் பிரதியாகவே சில தமிழர்கள் 2014 மத்தியில் கொல்லப்பட்டனர் என்றொரு பேச்சுண்டு. ஆனால் மிகவும் நேர்மையாக நடந்த இந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

இது தவிர இந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதற்காக ஏராளமான தமிழர்கள் இன்று கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் வாடுகின்றனர். அரசநத்தம், கலசப்பாடி முதலான ஊர்களில் மட்டும் சி.முருகேசன், ஆ.காமராஜ், த.சத்தியராஜ், ரா.தர்மன், கோ.வெங்கடாசலம், ரா.மகேந்திரன், ரா.சிவலிங்கம், அ.கோவிந்தசாமி, கு. ஆண்டி ஆகியோர் இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இதில் முதல் அறுவர் பிணை விடுதலை இன்றி ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.

வெங்கடாசலத்தின்(35) மனைவி மகேஸ்வரி (30), தருமன் மனைவி அலமேலு மற்றும் லட்சுமி, ராதிகா ஆகிய பெண்களிடம் நாங்கள் பேசினோம். எல்லோருமே தங்கள் கணவர் குடும்பத்தோடோ தனியாகவோ திருப்பதிக்கு சாமி கும்பிடப் போனபோது அவர்கள் தமிழில் பேசியதைக் கவனித்து அங்குள்ள ஆந்திர போலீஸ் அவர்களைக் கைது செய்து கொண்டு சென்றது என்றனர்.

அலமேலுவின் கணவர் மனைவி, குழந்தைகள், சகோதரன் உட்படத் திருப்பதி சென்று வனங்கிவிட்டுக் கீழ்த் திருப்பதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். தன் கணவரும் கொழுந்தனும் சாலையைக் கடந்து தேநீர் அருந்தச் சென்ற போது யாரோ மூவர் வந்து அவர்களிடம் ஏதோ கேட்டுள்ளனர். தமிழில் பதில் சொன்னவுடன் அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.

வழக்குரைஞர்களை வைத்து அணுகிய போதுதான் அவர் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் கடப்பா சிறையிலும் இன்று பாலூர் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேல்குப்சானூரைச் சேர்ந்த ரமேஷ் என்றஇளைஞரும் தான் எவ்வாறு குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இதே வடிவில் கைதுசெய்யப்பட்டார் என்பதையும், பின் ஏதேதோ சொல்லித் தப்பித்து வந்ததையும் விளக்கினார்.

encounter family2

வன அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 430 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும்,இவர்களில் 30 பேர்கள் முதலிலும், பின்னர் 70 பேர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் மகேஸ்வரி கூறினார். பிணையில் விடுதலையான இந்த 100 பேரும் ஆந்திரர்களாம். சிறையிலுள்ள 330 பேர்களும் தமிழர்களாம். கடப்பாவில் உள்ள சலபதி என்பவர்தான் இவர்களின் வழக்குரைஞர். அவரைக் கேட்டால், “தமிழர்களுக்கு பிணையில் விடுதலை தரமாட்டாங்க. விட்டால் ஓடிப் போயிடுவாங்க” எனச் சொல்கிறாராம். இதுவரை ஒவ்வொருவரும் 22,000 ரூ அந்த வழக்குரைஞருக்கு ஃபீஸ் கொடுத்துள்ளனராம்.போக்குவரத்துச் செலவே இது வரை ஒவ்வொருவருக்கும் 35,000 ரூ ஆகியுள்ளதாம்.

பிள்ளைகளை வைத்துக் கொண்டு தாம் எவ்வாறு எந்த வருமானமும் இல்லாமல் துன்பப் படுகிறோம் என இந்தப் பெண்கள் புலம்பினர். சிறையில் இருக்கும் அவர்களின் கணவர்கள், “:இனிமே நாங்க விடுதலை ஆகிறது கஷ்டம், எப்படியாவது பொழச்சுக்குங்க” எனச் சொல்கிறார்களாம். பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கின்றனர் என்றார் அலமேலு.

என்ன கணக்கில் 430 பேர் கைது செய்யப்பட்டார்கள் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது அவர்களுக்கு விளக்கத் தெரியவில்லை.

ஆந்திர மாநிலடி.ஜி.பி ஜே.வி.ராமுடு இது பற்றிக் கூறுவது:

“2014ல் கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5239 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்களும், 15,520 மரத்துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜன 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திரமா நிலத்தைச் சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். 31 கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர்; 10 தமிழர்கள்; கர்நாடக மாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” – (டெக்கான்க்ரானிகல், ஏப்ரல் 15).

ஆக ஆந்திர டி.ஜி.பி சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2000 க்கும்மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தளச் சாதியினர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும்போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள்விக்கு அவர்கள் தமிழில் பதில்சொல்வது ஒன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.

இந்த முறை 20பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ஆந்திர போலீஸ் கூறியுள்ளது. ஆனால் 150 பேர்களுக்கும் மேல் அன்று ஆந்திரக் காவலர்களால் பிடித்துச் செல்லப் பட்டதாகத் தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள 100 பேர்களின் கதி என்னவெனத் தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அ.தி.மு.க தலா 2 லட்சமும், தி.மு.க ஒரு இலட்சமும், தே.தி.மு.க 50,000 மும், ஜி.கேவாசன் காங்கிரஸ் 25,000 மும் வழங்கியுள்ளன. பா.ம.க கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்விச்செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. நாங்கள் அங்கு சென்றபோது அங்கு வந்திருந்த பா.ஜ.கவினரிடம் ஏதாவது உதவி செய்தீர்களா எனக் கேட்டதற்கு, ” பணமாகக் கொடுத்தால் செலவு செய்து விடுவார்கள். நாங்கள் தொலை நோக்கில் பயன் அளிக்குமாறு எதையாவது செய்ய உள்ளோம்” என்றனர்.

சந்திரபாபு அரசு சென்ற அக்டோபரில் செம்மரங்களை டன் ஒன்று 27 லட்ச ரூபாய் என ஏலத்தில் விற்றுள்ளது. வரும் மேயில் அடுத்த ஏலம் ஒன்று நடக்கப் போவதாகத் தெரிகிறது. அழியும் உயிரினங்கள் பட்டியலிலிருந்து செம்மரங்களை நீக்க வேண்டும் என அவர் மத்திய அரசுக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

encounter family

செய்ய வேண்டியவை

1.மனித உரிமைஅமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப் படை மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதுவும் கூட அவர் தலைமையில் சென்ற யாரோ சில காவலர்கள் என்றுதான் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்து நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதி மன்றக் கண்காணிப்பின் (monitering) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்படக் கொலைச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

3. கொலை நடந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால்சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும், கொல்லப்பட்ட அன்று இந்த 20பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின் கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்படவேண்டும்.தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

3.செம்மரக்கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவுகுறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்த பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.

4.செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத் தக்கவடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயேகைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் சென்ற பகுதிகள் மட்டுமின்றி திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர் முதலான மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கிராமங்களிலிருந்து பலரும் கைது செய்யப்பட்டு இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பழங்குடி மற்றும் வன்னியர், ஒட்டர் முதலான அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்டஇரு ஆந்திர வனத்துறை அதிகாரிகள் ஶ்ரீதர் மற்ரும் டேவிட் ஆகியோரின் கொலை குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தமிழகத் தொழிலாளிகளைப் போலவே கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அடித்தளத் தொழிலாளிகள் பலரும் கூட இன்று கைது செய்யப்பட்டுச் சிறைகளில் உள்ளதாக ஆந்திர டி.ஜி.பி சொல்கிறார். அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேல் மட்டங்களில் உள்ள செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைக் கைது செய்து தண்டனை வழங்குவத்ற்கு ஆந்திர அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

6. சுமார் 1.4 கோடி செம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு இவ் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ல பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி யோக பீடம்’ மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில்இவற்றை அவ் அமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது இது தடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறு செம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

7. கடத்தல்காரர்களால் வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள் மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. தமிழக அரசு இதுவரை வனச் சட்டத்தை (Forest Act 2006) அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது,இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிற மாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குபழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் (sensitisation programmes)) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

9. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படு மோசமாக உள்ளது. போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல பழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதியமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாகமருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும் பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச் சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்கவேண்டும். இந்தப்பணி முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

10.அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள் இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்கு வரத்து வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில் சுமைகளுடன் பயணம் செய்யத் தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurement centres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro based industries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில் மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

11. மலை அடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும் பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச் சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள் மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

12. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHR மற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு வழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளை இக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம் வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையிலுள்ளவர்களைச் சந்திப்பதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரியசட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழு ஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

13.பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைதுசெய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிற நிலையில் தமிழக அரசு, “முறையான விசாரணை வேண்டும்” என ஆந்திர அரசை “வேண்டிக் கொண்டதோடு” நிறுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுஎன்கவுன்டர் கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

14. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும்.

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், சென்னை 20. செல்:94441 20582

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.