பெண்

அருணிமாவிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

 

arunimasinha

ஞா. கலையரசி

செயற்கை காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்மணி என்ற வரலாறு படைத்த அருணிமா சின்ஹாவின் வாழ்க்கை, சாதாரண சளி பிடித்தாலே உயிர் போவது போல், படை கலக்குகிற, நமக்கெல்லாம் ஒரு சிறந்த பாடம்!

தேசிய அளவில் வாலிபால் விளையாட்டு வீரராக இருந்த அருணிமா சின்ஹா 11/04/2011 அன்று லக்னோவிலிருந்து டெல்லி சென்ற பத்மாவதி எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் பயணம் செய்த போது, கைப்பையையும், சங்கிலியையும் திருடர்கள் பறிக்க முயன்றனர். பிடுங்க விடாமல் தீவிர எதிர்ப்பைக் காட்டவே, ஓடும் வண்டியிலிருந்து, கீழே தள்ளப்பட்டார்.
பக்கத்திலிருந்த தண்டவாளத்தில் விழுந்த இவர் காலின் மீது, ரயில் ஏறிச் சென்றதால், முழங்காலுக்குக் கீழே எலும்பு நொறுங்கிப் போய் குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி இவர் என்ன கூறுகிறார்?
“விழுந்தவுடன் என்னால் நகர முடியவில்லை; என்னை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. எழ முயன்றேன்; ஆனால் அதற்குள் வண்டி என் கால் மேலேறி சென்றுவிட்டது. அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியாது.”

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தாலும், வலக்காலை இழக்க நேரிட்டது. இச்சம்பவம் நாடு முழுதும் பலத்த அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, இரயில் பிரயாணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டி உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்று தொடரப்பட்டது.

அருணிமா வண்டியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றிலிருக்கலாம்; தண்டவாளத்தைக் கடக்கும் போது விபத்தில் சிக்கியிருக்கலாம்; கொள்ளை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றெல்லாம் புதுக்கதை சொல்லி உ.பி ரயில்வே காவல்துறை, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அருணிமாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, ரெயில்வே துறைக்கு உத்தரவிட்டது.

காலை இழந்த பின்னர் மற்றவரின் அனுதாப பார்வையை என்னால் தாங்க முடியவில்லை; சுய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ முடிவு செய்தேன்; எவரெஸ்ட் ஏற கால் வேண்டும்; ஆனால் அதை விட முக்கியமானது தைரியம். அந்த விபத்து என் வாழ்வின் ஒரு திருப்பு முனை. மற்றவரைச் சார்ந்து நான் வாழ விரும்பவில்லை. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்று கூறும் இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதைத் தம் குறிக்கோளாகக் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடலானார்.

“எழுமின் விழிமின், குறிக்கோளை எட்டும் வரை ஓயாது உழைமின்,” என்ற விவேகானந்தரின் பொன்மொழி இவரை ஈர்த்தது.

arunimasinha 2

எவரெஸ்டில் முதலில் ஏறிய இந்தியப் பெண்மணி பச்சேந்திரி பால் தலைமையில் பல மாதங்கள் கடுமையான மலையேறும் பயிற்சி மேற்கொண்டார்.

மலையேறும் போது மற்றவர்களைப் போலல்லாமல், பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அடிக்கடிச் செயற்கை காலில் ஜெல் விலகி இரத்தக்கசிவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிலிண்டரில் இருந்த ஆக்ஸிஜன் குறைந்த போது, இனிமேலும் ஏறுவது உயிருக்கு ஆபத்து என்றார்கள். இருந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து ஏறி சிகரத்தைத் தொட்டார்!
21/05/2013 இவர் வாழ்வில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! அன்று தான் அருணிமா சின்ஹா 10.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார். கால்களைப் பதித்த அந்தக் கணத்தில் நாடு முழுதும் தம் குரலைக் கேட்க வேண்டும் என்பது போலத் தம்மை மறந்து உற்சாகக்குரல் எழுப்பினார்!

இவருக்குக் கிடைத்த நஷ்ட ஈடு, பரிசுத் தொகை ஆகியவற்றைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்காக விளையாட்டு அகாடெமி ஒன்றைத் துவக்கியிருக்கிறார். இந்திய அளவிலும், உலக அளவிலும் விளையாட்டுப் போட்டிகளில் இவர்களைக் கலந்து கொள்ள ஊக்குவித்துப் பயிற்சியளிக்க வேண்டும் என்பது இவர் நோக்கம்.

‘மலையில் புதிதாய்ப் பிறந்தேன்,’ (BORN AGAIN ON THE MOUNTAIN) என்ற தலைப்பில் இவர் சுயசரிதை வெளியிட்டிருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர்க்கு இணைப்பு:- http://arunimasinha.com/

உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும், மனத்திண்மையுடன் கூடிய நெஞ்சுறுதியும் இருந்தால் கண்டிப்பாக நாம் அடைய நினைக்கிற இலக்கை அது எவ்வளவு கஷ்டமானதாயிருந்தாலும், அடைய முடியும் என்பதற்கு இவர் சாதனை ஓர் எடுத்துக்காட்டு!
வாழ்வில் சோதனையோ, தோல்வியோ ஏற்பட்டவுடன், இனி அவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று மனதைரியத்தை இழப்பவர்களுக்கு, குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு, அருணிமா சின்ஹாவின் வாழ்க்கை ஒரு சிறந்த படிப்பினை!

“அருணிமாவிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.