சுற்றுச்சூழல்

துளிர்க்க துளிர்க்க வெட்டப்படும் அழகுச் செடிகள் நிழல் தருமா?

ஞா. கலையரசி

இன்றைய காலக்கட்டத்தில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று குரலெழுப்புவதற்குப் பதிலாக, இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடுவது அவசியத் தேவையாயிருக்கிறது; அவசரமும் கூட.

காலநிலை மாற்றத்திற்கும், மரங்களுக்கும் உள்ள பிணைப்புப் பற்றியும், சுற்றுச்சூழலுக்கும், மரங்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவு பற்றியும், வாய்கிழிய பேசுகின்றோம்; மரமின்றி மழையில்லை, மழையின்றி நீரில்லை; சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் இவ்வாண்டு அதிகளவில் மரணம் என்றெல்லாம் புலம்புகின்றோம்.
ஆனாலும் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பலியானது போக, எஞ்சி நிற்கின்ற மரங்கள் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், தூசி விழுதல், கடத்தல் போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் ஒரு கட்சி, தெருவோரங்களில் இருந்த தொன்மையான மரங்களை எல்லாம் வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திப் புதிய சாதனை படைத்தது!

இன்னொரு கட்சி தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லிக் கோவையிலிருந்த பல நூறு மரங்களை வெட்டி, ஊரைப் பொட்டல் திடலாக ஆக்கியது.
பிரும்மாண்ட தட்டிகளை வைத்து விளம்பரங்கள் செய்தல், அரசியல்வாதிகளுக்குக் கண்ட கண்ட இடங்களில் வரவேற்பு நுழைவாயில்கள் அமைத்தல், தோரணங்கள் மாட்டுதல் போன்ற பல காரணங்களுக்காகப் பெரிய பெரிய கிளைகளைத் துண்டாடி மரத்தை மொட்டையடித்து மூளியாக்குகின்றனர். இதனால் மரம் பட்டுப் போய்விடுகின்றது.
போதாக்குறைக்கு அவ்வப்போது நடத்தப்படும் மரம் நடு விழாக்களும், எஞ்சியிருக்கின்ற மரங்களுக்குச் சாவு மணி அடிக்கின்றன என்பது தான் வேதனையான உண்மை.
எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன் எழுதியது இது. மந்திரி தலைமையில் மரம் நடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நூறு மரக்கன்றுகள் நடப்பட்டதாம். சில மாதங்கள் கழித்து, நட்டவற்றில் எத்தனை பிழைத்திருக்கின்றன என்று கேட்டதற்கு ‘நட்டது நூறு, செத்தது நூத்தியொன்னு,’ என்றாராம் உதவியாளர். ‘அதெப்படி?’ என்று விழித்தவருக்கு, கன்றுகள் நடுவதற்கு நூறு
போத்துகள் வெட்டியதில், இருந்த ஒரு மரமும் செத்து விட்டது என்றாராம். எனவே அரசியல்வாதிகள் நடத்தும் மரம் நடு விழாக்கள், இப்படித்தான் இருக்கின்ற மரத்தையும் சாகடிக்கும் கேலிக்கூத்தாகயிருக்கின்றன.

tree

மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுவதில் இவர்களுக்கு உண்மையான அக்கறையிருக்குமானால், கோலாகலமாக விழா நடத்தி மரக்கன்று நடுவதுடன், அது வேர் பிடிக்கும் வரைத் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது மழைக்காலம் துவங்குவதற்கு முந்தைய மாதத்தில், இவ்விழாவை நடத்த வேண்டும். செய்வார்களா?
ஒரு நாள் கூத்தாக கடுங்கோடையில் மரம் நடுவிழா நடத்திக் கன்றுகளை நடுவது போல் ‘போஸ்’ கொடுத்து பத்திரிக்கையில் பெரிய படம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதே அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்.

சுற்றுச்சூழல் பற்றியும் இயற்கையைப் பேணுதல் குறித்தும் நம் எழுத்தாளர்களும் அவ்வப்போது குரலெழுப்பித் தம் பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். காலச்சுவடு இதழின் நிறுவனர் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை.’ இக்கதையின் கரு பற்றி ஆசிரியர் முதல் அத்தியாயத்தில் என்ன கூறுகிறார் கேளுங்கள்:-

”மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே? அதில் ஒன்று தான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டு தானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா?

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான். புளியமரம் அழிக்கப்பட்டது.”

இதே கதையில் காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீன பூங்கா அமைக்கும் பணி விவரிக்கப்படுகிறது. தோப்பு மரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல், முதியவர் ஒருவர், இளைஞனிடம் கேட்கிறார்:-

”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

”செடி வைக்கப் போறாங்க”

”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”

”காத்துக்கு”

”மரத்தெக் காட்டிலும், செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”

”அளகுக்கு”

”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

”உம்”

”செடி மரமாயுடாதோவ்?”

”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”

”வெட்டி வெட்டி விடுவாங்களா?”

”ஆமா”

”அட, பயித்தாரப் பசங்களா!”

நவீனமயம் என்ற பெயரில் தோப்பை அழிக்கும் மனிதனின் பைத்தியக்காரத்தனத்தை இவ்வுரையாடல் மூலம், ஆசிரியர் எப்படிக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்!
எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும், இன்னும் நம் மக்களுக்கு சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்தோ, மரங்களின் அருமை பற்றியோ போதிய விழிப்புணர்வு வந்தபாடில்லை. புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரங்களைக் காக்க வேண்டியதன் அத்தியாவசத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.

முடிவாக கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் எழுதிய ‘காயின் ருசி’ என்ற கவிதையிலிருந்து, என்னைக் கவர்ந்த சில வரிகள்:-

தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது என்று
ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். 
நடு இரவில் கிளை தழைகளோடு, ஜன்னல் வழி வந்து 
கன்னந் தழுவிய நிலா, இப்போது மொட்டையாக…

“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…”

கட்டுரையாளர் பற்றி: வலைப்பதிவாளர், வங்கியில் பணியாற்றுகிறார்.

“துளிர்க்க துளிர்க்க வெட்டப்படும் அழகுச் செடிகள் நிழல் தருமா?” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. அழகாக எழுதியுள்ளாயம்மா. பெறுங்கொன்றை என்ற பெயரே தெரியாமல் இது என்ன மரம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு உங்கள் கட்டுரைமூலம் பெயர் தெரிந்தது. நான்கு பெண்களில் எழுதும் உங்களுக்கும்,ஆசிரியை நந்தினிக்கும், நான்கு பெண்களுக்கும் என் வாழ்த்துகள். அன்புடன்

  2. பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா! உங்கள் பின்னூட்டம் மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையளிப்பதாக உள்ளது. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி. நந்தினி & நான்கு பெண்கள் தளம் சார்பாகவும் உங்களுக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.