குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?

செல்வ களஞ்சியமே – 98
ரஞ்சனி நாராயணன்

அந்தக் குழந்தைக்கு தனக்கு ஏதோ ஒன்று கிடைக்கவில்லை; நாம் எதையோ இழந்துவிட்டோம் என்று வருத்தம். அது கோபமாக வெளிப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உறவினர் ஒருவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை. ஆளுக்கு ஒரு செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். 5 வயதுக் குழந்தை ‘நூக்’ (ஐபேட் மாதிரி ஒன்று) வைத்துக் கொண்டு அதில் ஏதோ விடீயோ பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் அப்பா அதைப் பார்த்துவிட்டு ‘இன்னிக்கு முழுக்க யாரும் எலெக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தக் கூடாது. ‘இன்று நோ கேட்ஜட் டே’ என்றார். அந்தக் குழந்தை அப்பா சொன்னதை காதிலேயே வாங்கவில்லை. அப்பா அவளருகில் போய் அந்த நூக் – கை பிடுங்கி மேலே வைத்துவிட்டார். அந்தக் குழந்தை ஒரு அழுகை அழுதது பாருங்கள். ‘ஆ…..ஓ …….!’ என்று காது கிழியும் அளவிற்கு கத்தி கத்தி அழுதது. அதற்கு அப்பா மசியவில்லை என்பதைப் புரிந்துக்கொண்டு தன் தலையை டீவி ஸ்டேண்டில் முட்டி முட்டி…. நான் அப்படியே கல்லாகிப் போய் உட்கார்ந்து விட்டேன். என்ன இப்படி ஒரு கோபம்?

ஒரு மனிதனுக்குக் கோபமே வராது என்றோ, ஒரு குடும்பத்தில் யாருக்குமே கோபம் வராது என்றோ சொல்ல முடியாது என்றாலும் இப்படி கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?

இந்தக் கோபம் இன்று வந்ததல்ல; அந்தக் குழந்தையின் உள்மனதில் வெகு நாட்களாக இருப்பது. அந்தக் குழந்தைக்கு தனக்கு ஏதோ ஒன்று கிடைக்கவில்லை; நாம் எதையோ இழந்துவிட்டோம் என்று வருத்தம். அது கோபமாக வெளிப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கோபம் அவர்கள் வளர்ந்த பின்னும் உள்ளுக்குள் இருக்குமாம். அதனால் ஒரு கோபக்காரக் குடும்பம் உருவாகலாம்.

குழந்தையின் உள்மனதில் அமைதி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் அமெரிக்கன் சைக்காலஜி அமைப்பின் மனவியலாளர்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் நல்லவிதமான உறவில், தொடர்பில் இருக்கும்போது அவர்களுக்கு குறைந்த அளவில் கோபம் வருகிறதாம். ஒருவருக்கொருவர் அதிக உரசல்கள் இல்லாமல் இருக்கிறார்களாம். அமைதியான பெற்றோர்கள், குடும்பத்தில் நிலவும் நல்ல சூழ்நிலை இவை கோபத்தை குறைக்கின்றன. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கோபம் வராது என்றில்லை; கோபம் வரும் ஆனால் அதை எளிமையாகக் கையாளுவார்கள். தங்களது ஆளுமையை அழிக்காத அளவில் கோபத்தைக் கட்டுப்படுத்துவார்கள். குழந்தையுடன் ஆரோக்கியமான உறவு இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தைகளைப் பற்றிய புரிதல் இருக்கும். அதனால் அவர்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுவதோ, கோபத்தை வரவழைக்கும் செயல்களை செய்யவோ மாட்டார்கள். குழந்தைகளை கட்டுப்படுத்த அடக்குமுறை தேவையில்லை என்பதை உணர்ந்திருப்பார்கள்

DSCN2289

கோபத்தை கட்டுப்படுத்த சொல்லாதீர்கள்
குழந்தை ஏதாவது ஒன்றிற்காக வருத்தப்படும்போது, கவலைப்படும்போது வெளியில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுங்கள். அந்த சமயத்தில் குழந்தை பேசுவதை அக்கறையுடன் கேளுங்கள். குழந்தையின் நிலைமையை அதனுடைய கோணத்தில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

உதாரணத்திற்கு உங்கள் குழந்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிகழ்ச்சியை அவள் பார்ப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை. பார்க்கத்தான் பார்ப்பேன் என்று அடம் பிடிக்கிறாள் குழந்தை. கோவம் வந்து உங்களைப் பார்த்து கத்துகிறாள் என்ன செய்யலாம்?

ஏன் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்று அவளை சொல்லச் சொல்லுங்கள். அவள் சொல்வதை  முழு கவனத்துடன் கேளுங்கள். பின் உங்கள் வாதத்தைச் சொல்லுங்கள். வார்த்தைகளில் நிதானம் இருக்கட்டும். ‘இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை விட வேறு ஏதேனும் சுவாரஸ்யமாக செய்யலாம். அதில் வரும் சில உரையாடல்கள் நன்றாக இல்லை. நான் ஏன் உன்னை பார்க்கவேண்டாம் என்று சொல்லுகிறேன் என்று புரிகிறதா? உனக்கு போர் அடிக்கிறது என்றால் நாமிருவரும் சேர்ந்து விளையாடலாம், வா’ என்று சொல்லச் சொல்ல குழந்தையின் கோபம் தணியும். அம்மா சொல்வது சரியே என்று புரிந்து கொள்ளும்.

ஒரு குழந்தை எப்போதுமே கோபமாக இருந்தாலோ அல்லது இவளை நான் எப்படி சரி செய்யப்போகிறேன் என்ற கவலை உங்களுக்கு ஏற்பட்டாலோ குழந்தையின் உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த மாதிரியான குழந்தைகளின் பெற்றோர்களை கூப்பிட்டுப் பேசும்போது ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விஷயங்களைக் கண்டுபிடித்தனர். ஒன்று குழந்தையின் பெற்றோர்கள் எப்போதும் சண்டை போடுபவர்களாக இருப்பார்கள். அதனால் கோபப்படுவதை தன்னுடைய இயல்பாகக் குழந்தையும் நினைக்கலாம். அல்லது குழந்தையினுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம்; அல்லது அதனுடன் பேச, விளையாட யாருமில்லாமல் இருக்கலாம். அதனுடைய மனதில் யாரோ தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கலாம். எப்போதெல்லாம் குழந்தை தன்னம்பிக்கையுடன் இருக்கிறது? எப்போதெல்லாம் அதன் நம்பிக்கை குறைகிறது? என்று ஒரு கணக்கெடுத்துப் பாருங்கள். இந்த அடிப்படையில் குழந்தையின் கோபத்தை தணிக்கப் பாருங்கள்.

உள்ளுக்குள் இருக்கும் கோபத்தால் குழந்தை யாருடனும் பேசாமல் தனக்குள்ளேயே சுருண்டு கொள்ளுகிறது. யாராவது தன்னை ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவர் எழுப்பிக் கொள்ளுகிறது. மேலாகப் பார்க்கும்போது அமைதியாக இருக்கும் குழந்தையின் அடிமனதில் ஒரு கோபம் கனன்று கொண்டிருக்கும். நம் வீட்டில் ப்ரெஷர் குக்கர் எப்படி அடைக்கப்பட்டு உள்ளிருக்கும் ப்ரெஷர் போகாமலிருக்கிறதோ அதேபோல குழந்தையின் மனதிலும் நிறைய அழுத்தம்  இருக்கிறது. ஒரு குழந்தையின் கோபம் என்பது நமக்கு வெளியில் தெரியும் ஒரு சிறு துளி தான்.

குழந்தை தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள். அம்மா தான் சொல்வதைக் கேட்கவில்லை என்பதே அதற்கு பெரிய வருத்தம். உங்களுக்கு அதன் வார்த்தைகள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு அது மிகப்பெரிய விஷயம். உங்கள் அலட்சியம் அதன் மனதில் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும்.

கோபப்படும் குழந்தை பற்றி தொடர்ந்து பேசலாம்.

“கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.