அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு

சமணமும் தமிழும் – 7

அறிஞர் சீனி. வெங்கடசாமி

பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படுகிற சமண சமயத் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. சமணசமயம் தமிழ்நாட்டிலே ஏன் செல்வாக்கடைந்தது? ஏன் செழித்து வளர்ந்தது?

பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்த வனாயினும், தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவானாயின் அவனைச் சமணர் போற்றிவந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு
என்னும் நூலிலே,
‘‘பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
    இறைவன் எனஉணரற் பாற்று.’’
என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும், அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர்.

இரண்டாவதாகிய அடைக்கல தானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக்கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலூக்காவில் பள்ளிச்சந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச் செய்தியைக் கூறுகிற சாசனம் ஒன்று காணப்படுகிறது11. ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீரராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும், அப் புகலிடத்திற்கு வந்த அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்றவேண்டும் என்பது கண்ராதித்தப் பெரும்புள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகா தௌளாறு என்னும் ஊரிலே திருமூலீஸ்வரர் கோயில் முன் மண்டபத்தின் தரையில் ஒரு சாசனம் காணப்படுகிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சினான் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது12.

வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா கீழ்மின்னல்
என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம், சகலலோக சக்கரவர்த்தி வென்று
மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசருடைய 16 ஆவது
ஆண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சினான்
புகலிடமாக இருந்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது13.

வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா வடமகாதேவிமங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம், சாம்புவராயர் சகலலோக சக்கரவர்த்தி ராஜநாரயாணனுடைய 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இது, மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிநின்று வென்றான் நல்லூர் என்னும் இடம் அஞ்சினான் புகலிடமாக இருந்தது என்று கூறுகிறது14. இதனால் அபயதானத்தைப் பண்டைக்காலத்தில் சமணர் நடைமுறையில் செய்துவந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.

மூன்றவதாகிய ஒளடத தானத்தையும் சமணர். செய்துவந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்தது அம்மடத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தது. (சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய் நீக்கியசெய்தி, அவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றிற்குச் திரிகடுகம், ஏலாதி, சிறு பஞ்ச மூலம் என்று மருத்துகளின் பெயரிடப்பட்டதனாலும் அறியப்படும்.) உடல் நோயைத் தீர்க்க மருந்து கொடுத்தும் உள்ளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றி வந்தனர்.

நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப் பெரியோர், (பௌத்தர்களும்கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர்.

இதனாலேயே பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று; (பள்ளி என்றால் சமணப் பள்ளி அல்லது பௌத்தப்பள்ளி என்பது பொருள்). சமணர்களின் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்திலே பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட் செலவும் (எழுத்துக் கூலி) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதி வைத்துக் கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலே கன்னட நாட்டில் இருந்த, சமண சமயத்தைச் சார்ந்த அத்திமுப்பெ என்னும் அம்மையார் தமது சொந்தச் செலவிலே, சாந்திபுராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் எழுதுவித்துத் தானம் செய்தார் என்ப.

படம் நன்றி; jainworld.
திருமலையில் உள்ள சமண கோயில்: படம் நன்றி jainworld.

 

சமணசமயம் செழித்து வளர்வதற்கு மற்றொரு காரணமாயிருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண்டிருந்த தாய்மொழிப் பிரசாரம் ஆகும். சமணசமயத்தார் பௌத்த சமயத்தாரைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலே தங்கள் மத நூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டு மக்கள் எளிதிலே இந்த மதக்கொள்கைகளை அறிந்துகொண்டு அவற்றைக் கைக்கொள்ள முடிந்தது. பிராமணர், தம் வைதீக மத நூல்களை மக்களுக்கு விளங்காத மொழியில் எழுதிக்கொண்டதோடு அந்நூல்களை மற்றவர் படிக்கக்கூடாது, ஓதுவதைக் கேட்கவும் கூடாது என்றும், அப்படிச் செய்தவர் நாக்கை யறுக்க வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றவேண்டும் என்றும் தடைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்திக் கொண்டதுபோல் அல்லாமல், பரந்து விரிந்த மனப்பான்மையும் பெருந்தன்மையும் உள்ள சமணர்கள் தமது மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளிலே எழுதினார்கள். அதன்படி தமிழிலேயும் நூல்களை இயற்றினார்கள். இதனால் தமிழ் நாட்டில் சமணசமயம் செழித்தோங்கத் தொடங்கிற்று.

மக்கள் அறியாதபடி வேறுமொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் என்றும் பெரும் பாவம் என்றும் சமணர் கருதினார்கள். ஆகவே, தம் மத நூல்களை மக்கள் பேசுகிற தாய்மொழியிலே எழுதினார்கள். இதனைச் சமணசமய வரலாறு ஒன்று நன்கு விளக்குகிறது.

உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேண திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப்போலவே கல்விக் கடலைக் கரைகண்டவர் என்னும் புகழுடன் வாழ்ந்து வந்த விருத்தவாதி முனிவர் என்னும் சமணத் துறவி ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர். நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு இவர் ஒருவரையொருவர் காணும்படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதத்தில் தோற்றவர் வென்றவருக்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவுசெய்து கொண்டு வாதம் செய்யத் தொடங்கினர். அவ்வூர்ப் பொது மக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடுநிலையாளராக இருந்தார்கள். சித்தசேன திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வட மொழியில் வாது செய்தார். விருத்தவாதி முனிவர், வடமொழியில் நன்கு தேர்ந்தவராக இருந்தும், அந்த மொழியில் வாது செய்யாமல் நாட்டு மக்கள் பேசும் தாய்மொழியிலே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடு நின்றவர் முடிவு கூறினர். ஆகவே, உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார்.

இதன் பிறகு சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் பேசிப் பயின்றுவந்த அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்தெழுதக் கருதித் தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசிப் பயின்றுவரும் அர்த்தமாகதி மொழியில் உள்ள நூல்களை வடமொழியில் எழுதிவைத்துப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டு வரை வாய் பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார்.

இந்த வரலாற்றினால், சமணரும் பௌத்தரைப் போலவே, தாய்மொழியின் வாயிலாகப் பொதுமக்களுக்குத் தங்கள் மதக்கொள்கைகளைப் போதிக்க வேண்டும் என்னும் கருத்துள்ளவர் என்பதும், மக்கள் அறியாத வேறு மொழியில் நூல்களை எழுதிவைக்கப் பயன்படாதபடி செய்வது பெரும்பாவம் எனக் கருதி வந்தனர் என்பதும் விளங்குகிறது.
இவ்வாறு விரிந்த மனப்பான்மையுள்ள சமணர்கள் தமிழ் நாட்டிலே தமிழ் மொழியில் தம் மதக் கொள்கைகளை எழுதினார்கள். வேறு பல நீதி நூல்களையும் நிகண்டு நூல்களையும் காவிய நூல்களையும் ஒழுக்க நூல்களையும் எழுதினார்கள். இவையும் சமணசமயம் தமிழ்நாட்டில் பரவுவதற்குக் காரணமாயிருந்தன.
தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமாயிருந்தவர் அந்த மதத்துத் துறவிகள் ஆவர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று தம் சமயக் கொள்கைகளைப் போதிப்பதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். சமண முனிவரின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். (சங்கம் = கூட்டம்) ஆதிகாலத்தில் சமண சங்கம் ஒரே கூட்டமாக இருந்தது. இதற்கு மூல சங்கம் என்று பெயர்.

பிறகு சங்கம் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே, அது நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர் இடப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் கச்சை, அன்வயம் என்னும் உட்பிரிவுகள் இருந்தன.
‘‘கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா
சுனக நந்தியும் குணக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா
அனக நந்தியர்’’
முதலியவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். நமண நந்தி என்பவரைச் சுந்தரமூர்த்திகள் குறிப்பிடுகிறார். இவர்கள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டுச் சாசனங்களிலும் நந்தி கணத்தைச் சேர்ந்த முனிவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவை: புட்பநந்தி, ஸ்ரீநந்தி, கனகநந்தி படாரர், உத்தநந்தி குருவடிகள், பெருநந்தி படாரர், குணநந்தி பெரியார், அஜ்ஜநந்தி, பவணந்தி படாரர், சந்திரநந்தி முதலியன. நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவரும் இந்த நந்தி கணத்தைச் சேர்ந்தவரே.

சேனகணத்தைச் சேர்ந்த சமண முனிவர்கள் பெயரையும் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார்.
‘‘சந்து சேனனும் இந்து சேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய பெயர்கொளா’’
என்று அவர் கூறியது காண்க. சுந்தரமூர்த்திகளும் தருமசேனன் என்னும் முனிவரைக் கூறுகிறார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணராக இருந்தபோது இந்தச் சேன கணத்தைச் சார்ந்திருந்தார் என்பதை அவர் பெற்றிருந்த தருமசேனர் என்னும் பெயரினால் அறியலாம். சந்திர சேன அடிகள், தேவசேன படாரர் முதலிய பெயர்கள் சாசனங்களிலும் காணப்படுகின்றன.

சிம்ம கணத்தைச் சேர்ந்தவர்கள் வீரர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் கருமவீரன் என்பவரைக் குறிப்பிடுகிறார். கனகவீர அடிகள், குணவீர படாரர் என்னும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவரும், சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரும் தேவ கணத்தைச் சார்ந்தவர்கள் போலும்.
பிற்காலத்திலே, நந்தி சங்கத்திலிருந்து (நந்திகணத்திலிருந்து) திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்னும் ஒரு பிரிவு ஏற்பட்டதைச் சாசனங்களினால் அறியலாம். மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது;
‘‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸ்தி அருங்களா
அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வாராஸி பாரகைவU’’15
வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி. 470 இல்) திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார் என்று கூறுவர்16

எனவே, வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இரக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என்று கருதுகிறார்கள். இது தவறு. வச்சிரநந்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ்நூல்களையும் இயற்றியிருக்கக் கூடும். ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்ல என்று தோன்றுகிறது. மைசூர் நாட்டுச் சாசனங்கள் திராவிட சங்கத்தைச் சேர்ந்த சில சமண முனிவர்களின் பெயர்களைக் கூறுகின்றன:- 1. திரிகாலமுனி பட்டாரகர், திராவிட சங்கத்து புஷ்டகச்சையைச் சேர்ந்தவர், கி.பி. 900 – இல் காலமானார். 2. அஜிதசேன பட்டாரகர் என்னும் வாதிகரட்டர்; திராவிட சங்கத்து அருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர். 3. மௌனி பட்டாரகர், திராவிள சங்கத்துக் கொண்ட குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். கொண்ட குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். 4.  சாந்திமுனி திராவிள சங்கம், அருங்கலான்வயம் நந்தி கணத்தைச் சேர்ந்தவர். 5. ஸ்ரீபாலதிரை வித்யர், இவர் மாணாக்கர் வசுபூச்ய சித்தாந்த தேவர். இவர்கள் இருவரும் திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர்கள். 6. குணசேன பண்டிதர், திராவிள சங்கம், தவுளகணம், இருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர்.

சமண சமயத்துப் பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும், ஆர்யாங்கனை என்றும், கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும். கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்றபோது அவர்களுடன் சென்ற கவுந்தியடிகள் சமணசமயத் துறவியாகிய கந்தியார் ஆவார். சமண சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் குரத்தியர் என்று வேறு பெயரும் உண்டு. குரத்தி என்பது குரவர் (=குரு) என்பதன் பெண்பாற் பெயராகும். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சமணசமயப் பெண்பால் துறவிகளைக் குரத்திகள் என்று கூறுகின்றன. தமிழ் நாட்டுச் சாசனங்களிலும் குரத்தியர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில வருமாறு: ஸ்ரீமிழலூர்க் குரத்திகள், சிறிவிசயக் குரத்தியார், திருச்சாணத்துக் குரத்திகள், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், ஸ்ரீமம்மை குரத்திகள், மாணாக்கியார் அரிட்டநேமிக் குரத்திகள் ஸ்ரீபட்டினிப்படார் மாணாக்கிகள், திருப்பருத்திக் குரத்திகள், பேரூர்க் குரத்திகள், மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள், கூடற் குரத்தியார், வேம்புநாட்டுக் குரத்தி, கனக வீரக் குரத்தியார், பிருதி விடங்கக் குரத்தி.

சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சமணசமயம் பரவுவதற்காகப் பெரிதும் உழைத்து வந்தார்கள்.
தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வந்தது. (மிகச் சிறந்த தொழிலாகிய பயிர்த்தொழிலை, பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்) சமணசமயம் பயிர்த் தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது. பயிர்த் தொழில் செய்யும் வேளாளரும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற் கொண்டிருந்தனர். எந்நாட்டிலும் எக்காலத்திலும் பொருளாதாரத் துறையில் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும், விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தைத் தழுவுவராயினர். சேர சோழ பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தனர். இவர்களால் சமணசமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமணசமயத்தவரல்லாத அரசரும்கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங்களையும் பொன்னையும் பொருளையும் ‘‘பள்ளிச் சந்தமாக’’க் கொடுத்து உதவினார்கள்.

இத்தகைய காரணங்களினரலே, சமணசமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமணசமயம் (பௌத்த சமயம்கூட) தமிழ்நாட்டிலே செழித்துப் பரவியிருந்ததையும் வைதீக மதம் முதலிய ஏனைய மதங்கள் அடங்கிக் கிடந்ததையும் பெரிய புராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன.

‘‘மேதினிமேல் சமண்கையார் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
    ஆதி அரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார்பால்
    பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு
    ஏதமில் சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்.’’
என்று, திருஞான சம்பந்தரின் தந்தைசார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. மேலும்,
    ‘‘அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
    பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட…………….’’
     ஞானசம்பந்தர் பிறந்தார் என்று க்ஷ புராணம் கூறுகிறது. இன்னும்,
    ‘‘பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
    பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
    சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு
    மூழிநீர் கையிற் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.’’
    ‘‘பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
    செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி
    அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
    நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழுங் காலை.’’

என்று பாண்டிய நாட்டிலும், சமணம் செழித்திருந்ததை அப் புராணம் கூறுகிறது. இச்செய்தியையே பிற்காலத்துத் திருவிளையாடற் புராணங்களும் கூறுகின்றன. பண்டைக் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த செய்தியை, இலக்கியங்களும், ஆங்காங்கே காணப்படுகிற சமண உருவச் சிலைகளும், சமணக் கோயில்களும், கல்வெட்டுச் சாசனங்களும் சான்று பகர்கின்றன என்று மேலே கூறினோம். இந்தச் சான்றுகளை யெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராய்ந்து நோக்குவோமானால், தமிழ் நாட்டில் முற்காலத்தில் சமணசமயம் எவ்வளவு செழித்துச் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு விளங்கும்.
_____________________________________________________________________________
11. 448 of 1937-38, Ep. Rep.1937-38, page 89.
12. 22 of 1934-35.
13. 35 of 1933-34
14. 62 of 1933-34, S.I. Epi.Rep.1933-34, Page 37.
15. E.C. Vol. V Hassan Taluk, 131, Arsikera Tq. I.E.C. Vol.IV Gundlupet Tq.27
16. Page XXI. Introduction Pravacana Sara by upadhye Digambaka Darna, P.74 J Bom, B.A.S Vol XVII.

முந்தைய பகுதிகள்:

சமணம் தமிழுக்கு என்ன செய்தது?

சமணசமயம் தோன்றிய வரலாறு

சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் இல்லை!

சமணர்களின் கடுமையான துறவறம்!

சமணரின் இல்லற ஒழுக்கம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.