அனுபவம், சுற்றுச்சூழல், மருத்துவம்

மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

ஞா. கலையரசி

வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது

பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.

நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம் கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள், வர்ணம் பூசப்பட்ட குழந்தை பொம்மைகள், சில நாட்டு மருந்துப் பொருட்கள்  ஆகியவற்றில் காரீயம் அதிகளவில் கலந்திருக்கிறது.  இந்தியாவில் வர்ணம் தயாரிக்கும் கம்பெனிகள் தடையேதுமின்றிக் காலங்காலமாக இந்தக் காரீயத்தை அதிகளவில் தங்கள் பொருட்களில் கலக்கின்றன.    சீதோஷ்ண நிலையைத் தாக்குப் பிடித்து நீண்ட காலம் மங்காமல் நிலைத்திருக்கவும், வர்ணம் அடித்தவுடன் உடனே காயவும், உற்பத்தி செலவைக்குறைத்து  லாபத்தை இரட்டிப்பாக்கவும், அதிகளவு காரீயம் வர்ணங்களில் சேர்க்கப்படுகின்றன.

வீட்டுச் சுவரைத் தொட்டுவிட்டு வாயில் விரலை வைத்துச் சப்பும்  குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.  வெளிநாடுகளில் வீட்டு வர்ணங்களில் காரீயம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கலப்பதற்குக் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன.  இந்தியாவில் இது பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லை.  காரீயம் அதிகளவில் கலந்து எனாமல் வர்ணம் தயாரிப்பதைத் தடை செய்ய கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு, முறையாக செயல்படுத்தப் பட வேண்டும்.   ஆண்டுதோறும் வர்ணம் பூசப்பட்ட சாமி சிலைகளை, ஏரிகளிலும், ஆறுகளிலும் மூழ்கடிப்பதாலும், காரீயம் கலந்து தண்ணீர் நஞ்சாகிறது.   வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது என்கிறார் செயின்ட் ஜான் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் .  எனவே வர்ணம் பூசப்பட்ட பொம்மைகளை, ஆற்றில் மூழ்கடிப்பதை அரசு உடனடியாகத் தடை செய்யவேண்டும்.

பூமியின் மேல் இயற்கையாகவே படிந்துள்ள காரீயமானது, எத்தனை காலமானாலும் மக்காத பொருள்,  காற்றில் கலந்துள்ள இது, சுவாசிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில்  உள்ளே சென்றாலோ, உணவு மற்றும் நீர் வழியே உடலுக்குள் சென்றாலோ, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்;   குறிப்பாக குழந்தைகளுக்கு மூளை மற்றும் உடல் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள்.

heal1

உள்ளே செல்லும் காரீயத்தின் சிறு பகுதி மட்டுமே கழிவு மூலம் வெளியேறும்; பெரும் பகுதி கல்லீரல், மூளை, சிறுநீரகம், எலும்பு போன்ற உறுப்புக்களுக்குப் பரவி படிந்துவிடுமாம்.  இதன் அளவு அதிகமாகும் போது கோமா, வலிப்பு நோய் உண்டாகி இறுதியில் மரணம் ஏற்படும். கருவுற்ற தாய்மார்களின் உடலில் சேரும் காரீயம், தொப்புள் கொடி வழியாக குழந்தைக்குச் சென்றுவிடுமாம்.  இதன் அளவு அதிகமாகும் போது வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்துவிடும் அபாயமுண்டு.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தக் காரீயத்தைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.  ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இத்தகைய சட்டங்களோ, விழிப்புணர்வோ இல்லாததால், சுற்றுச்சூழல் நஞ்சாவதோடு, மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.  நம் நாட்டில் தான் உயிரின் விலை மிக மிக மலிவாயிற்றே!  வளரும் நாடுகளில் 15 முதல் 18 மில்லியன் குழந்தைகள் காரீயத்தால் மூளை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை, உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1998-99 ல் பெங்களூரில் செயல்படும் ஜார்ஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில், இரத்தத்தில் உள்ள காரீயத்தின் அளவைப் பரிசோதிக்க 22000 பேரிடம் சோதனை நடத்தியது.  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்,  51 சதவீதத்துக்கும் அதிகமானோர்க்கு இரத்தத்தில் அதிகளவு காரீயம் இருந்தது இச்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.  அதிர்ச்சி தரும் இச்செய்தியை 1999 பிப்ரவரியில் பெங்களூரில் நடந்த அகில உலக மாநாட்டில், இவ்வமைப்பு வெளியிட்டு இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்த பின்னரே, நம் நாட்டின் மூன்று முக்கிய பெட்ரோல் சுத்திகரிப்பு கம்பெனிகள், 2000 ஆண்டு முதல் காரீயம் கலக்காத பெட்ரோலை உற்பத்தி செய்ய முடிவெடுத்தன.

இனிப்புப் பண்டங்களின் மேல் ஒட்டப்படும் வெள்ளி ஜிகினா தாளில் கூட காரீயம் இருக்கிறதாம்.  எனவே இம்மாதிரியான அலங்கார பண்டங்களைத் தவிர்க்கவேண்டும்.  கடையில் வாங்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றிலும் கலப்படம் இருக்கும் ஆபத்து அதிகம்.   எனவே அலுப்பு  பார்க்காமல் பழைய காலம் போல், மிளகாய், மஞ்சள் வாங்கி காயவைத்து அரவை இயந்திரத்தில் தூள் செய்து கொள்ளுங்கள்.

மாகி நூடுல்ஸைத் தடை செய்வதால் மட்டுமே நமக்குப் பாதுகாப்பு கிடைத்து விட்டதாக அகம் மகிழக்கூடாது.  சூழலுக்கும் உடல்நலனுக்கும் மிகுந்த கேடு விளைவிக்கும் காரீயம் கலந்த அனைத்துப் பொருட்களையும்  ஒழித்துக் கட்டினாலொழிய நமக்கு  பாதுகாப்பில்லை; நம் வருங்காலச் சந்ததியின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, காரீயம் குறித்த விழிப்புணர்வு நமக்கு மிகவும் அவசியம்.

கட்டுரைக்கு உதவிய இணைப்புகள் –

1) http://www.tgfworld.org/lead.html

2) http://www.leadpoison.net/

3) http://toxicslink.org/?q=content/national-report-lead-paint

“மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. இவ்வளவு வீரியமுள்ள காரீயத்தை உணவுப்பொருட்களில் பயன்படுத்துவது எவ்வளவு கொடுமை. இனியாவது நாம் இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையாயிருந்து நம் உடல்நலனைக் காப்பாற்றவேண்டும். விழிப்புணர்வூட்டும் பதிவு. பாராட்டுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.