சுற்றுச்சூழல், நூல் அறிமுகம்

‘‘புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?’’

நூல் அறிமுகம்
ஞா. கலையரசி

உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை?

பல்லுயிரியம் – (BIO DIVERSITY)
ஆசிரியர் :- ச.முகமது அலி
வெளியீடு:-  வாசல்,
40D/3, முதல் தெரு , வசந்த நகர், மதுரை – 625003.
முதற்பதிப்பு:- மே 2010 இரண்டாவது பதிப்பு:- ஏப்ரல் 2013
விலை ரூ.140/-.

இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட  ச.முகமது அலி, காட்டுயிர் துறையில் தமிழகத்தின்  முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.  22 ஆண்டுகளாகத் தமிழில் வெளிவரும், ஒரே மாத இதழான ‘காட்டுயிர்’ இதழின் ஆசிரியரும் கூட.

மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு நூல் இது. காட்டுயிர் துறையில் கள ஆய்வு, 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த தேடல்,  நேரடி அனுபவம், பகுத்தறிவு  ஆகியவற்றின் உதவி கொண்டு ஆசிரியர் அளித்திருக்கும் விடைகள்,  நம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாக அகற்றி, இயற்கையைச் சரியான கோணத்தில், நம்பகத்தன்மையுடன் புரிந்து கொள்ள உதவுகின்றன.

இவரின் பிற நூல்கள்:-
நெருப்புக்குழியில் குருவி
பாம்பு என்றால்
பறவையியல் அறிஞர் சலிம் அலி
யானைகள்: அழியும் பேருயிர்
இயற்கை:செய்திகள், சிந்தனைகள்
வட்டமிடும் கழுகு

கேள்வி:-  பல்லுயிரியம் (BIO DIVERSITY) என்றால் என்ன?
பதில்:_ இன்றுவரை பூமியில் கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்ட சுமார் 8 லட்சம் உயிரினங்களும், பயிரினங்களும் நம்முடன் வாழும் வளர்ப்பு மற்றும் செல்லப்பிராணிகளோடு, மனிதரும் சேர்ந்த பெரும் உயிர்ச் சூழலமைப்பே பல்லுயிரியம் ஆகும்.

இது போல் வினா விடை பாணியில் அமைந்துள்ள இந்நூலில், வாசகர்களும், நேயர்களும் பல சமயங்களில் கேட்ட கேள்விகளுக்கு மெல்லிய நகைச்சுவை இழையோட, பொட்டில் அடித்தாற் போல் இவர் கூறியிருக்கும் பதில்கள், ரசிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கின்றன.  இயற்கையைப் பாதுகாக்க ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் செய்ய வேண்டிய முதல் வேலை, எல்லாவகையான மூடநம்பிக்கையையும் விட்டொழிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.   காட்டுகள்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலி...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலி…

கேள்வி:- புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?
பதில்:- புலியின் மாமிசம் மட்டுமல்ல, எதனுடையை மாமிசமும் ஆண்மையைப் பெருக்காது.  கொலஸ்ட்ராலைத் தான் பெருக்கும்.  உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை?

கேள்வி:- மயில் ஒருவரது கண்ணைக் கொத்திவிட்டால், மயில் ரத்தத்தை எடுத்துத் தேய்ந்தால் சரியாகிவிடுமாமே!
பதில்:- ஆபத்தான பொய்.  உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.  மருத்துவ மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
பாம்புக்கடிக்கு மருந்துண்டா?  நாட்டு வைத்தியத்தில் குணமாகுமா?
ஊசி மருந்து நிச்சயமுண்டு.  ஆனால் நாட்டு வைத்திய முறைகள் ‘பேரின்பலோகப் பயணத்திற்கே’ சீட்டு வழங்கும்”

Bio diversityமர மக்களைப் போலவே, ‘மெத்தப்’ படித்த இலக்கியவாதிகளும் இயற்கையைப் பற்றிய சரியான புரிதலின்றி, மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் என்கிற போது, அத்தகைய கேள்விகளுக்குச் சற்று காட்டமாகவே பதில் அளிக்கிறார் ஆசிரியர்.   காட்டு:-

“சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்காது என வைரமுத்து ஒரு கவிதையில் குறிப்பிடுகிறாரே, உண்மையா?”
“சிங்கத்தின் முகமாகட்டும், புலியின் பொச்சாகட்டும், ஈக்கள், கொசுக்கள் மொய்த்துப் பிடுங்குவது சர்வ சாதாரணம்.  நமது ஆக்கங்கெட்ட கவிஞர்களை நினைத்தால், எரிச்சல் தான் ஏற்படுகின்றது.  முதலில் இவர்கள் நமது 1000 ஆண்டுகட்கு முந்தைய தமிழ் இலக்கியத்தைக் கூர்ந்து கவனித்து, எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

இக்காலத்தில் இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கையோடியைந்து வாழ்தல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்து எல்லோரும் வாய்கிழியப் பேசினாலும், இயற்கைவளம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அறிந்தவர்கள், நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே என்கிறார் ஆசிரியர், இதற்கு இவர் கூறும் காரணங்கள்:-

  • ரசனையற்ற மூட நம்பிக்கை நிறைந்த மக்கள்
  • இயற்கை பற்றிய புரிதல் சிறிதுமின்றி, சுயமேதாவிலாசத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும், ‘மெத்த’ படித்த இலக்கியவாதிகள்
  • எந்தத் தொலைநோக்கு திட்டமும் இல்லாத அரசுகள்.

“நம் நாட்டின் பெரிய அளவிலான இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதி மலைச்சாரலிலிருந்து மழை நீரால் ஆற்றில் வரும் வளமான வண்டல் மண்!; அடுத்தது மணல்! வருங்காலம் கொடுமையானது!” என்று இவர் சொல்லியிருப்பதைப் படிக்கும் போது, அதிர்ச்சியாக இருக்கின்றது.

ஒரு நாட்டின் மண்வளம் அழிகிறதென்றால், அந்நாடே அழிகிறதென்று பொருள் என்கிறார், பிரான்கிலின் ரூஸ்வெல்ட்.   நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?  மரம் வெட்டிய குற்றச்சாட்டுக்காக 1985-86 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 25114 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.  இதில் 397 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர், என்ற இன்னொரு தகவல், அதிர்ச்சியை அதிகப்படுத்தி வேதனையளிப்பதாக உள்ளது.

இந்நூலில் அதிசய உயிரினங்கள் பற்றிய பல வினோதமான, சுவையான தகவல்களுக்கும் பஞ்சமில்லை. காட்டுகள்:-

பீவர் (Beaver) எனும் பெருச்சாளி முதல்தரமான அணைக்கட்டி. மண்வெட்டி போன்ற வெட்டுப்பற்களால் மரங்களை வெட்டி காட்டாறு ஓடை குறுக்கே நட்டு நீரைத் தேக்குகின்றது. இதன் ஓரத்தில் தரையில் வளைதோண்டி கூடமைக்கும்.  நீண்ட பொந்துகளில் பல அறைகள் இருப்பதால் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது மேலும் நீர்நிலைகள் பனியால் மூடப்படும் போதும், உள்ளே இதமாக இருக்கும்.

பார்பாய்ஸ் (Porpoise) என்பது பெருங்கடல்வாழ் சிறு திமிங்கலம். ஏதாவது ஒன்றுக்குக் காயம்பட்டு நீந்த முடியவில்லையெனில் வேறு இரு தோழர்கள் இரு துடுப்புத் தாங்கலாக தூக்கிவந்து கடல்மட்டத்தின் மேலே காற்றைச் சுவாசிக்கச் செய்து உயிர் பிழைக்க வைக்கின்றன.  சிலசமயம் யானை & எறும்பு தங்களுக்குள் உதவி செய்து கொள்கின்றன.
ரீங்காரச் சிட்டு பற்றியும் (கேள்வி எண் 147, 326, 436) சீட்டா & சிவிங்கிப் புலி பற்றியும்   (274, 482) கூறியது கூறலைத் தவிர்த்திருக்க வேண்டும்.

“டிஸ்கவரி சேனலை ரசிப்பவர்களை, நம் கண்ணெதிரே உள்ள இயற்கையையும், நம்மைச் சுற்றியுள்ள காட்டுயிர்களையும் நேசிக்க அழைக்கும் புத்தகமிது; இயற்கையியலாளர் முகமது அலி அவர்களின்  உணர்வு பூர்வமான அக்கறையிலிருந்து உருவான நூல்,” என்று இதன் பதிப்புரையில் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மையே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.