அறிவியல்
பேராசிரியர் கே. ராஜு
நிலநடுக்கம் என்றாலே நமக்குக் குலை நடுங்குகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் நாம் பெரிய பூகம்பங்களைச் சந்தித்ததில்லை. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பமே நமக்கு கிலியைத் தர போதுமானதாக இருந்தது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்பையும் பொருளிழப்பையும் பெருமளவுக்குக் குறைக்க முடியும் என்பது இன்று பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் அளவு அறிவியல் எப்போது முன்னேறப்போகிறது என்று நமக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால் நிலநடுக்கத்தைத் தடுப்பது தற்போது சாத்தியமாகாமல் இருப்பினும், கட்டடம் கட்டும் கலையில் நவீன மாற்றங்களைக் கொணர்ந்து நிலநடுக்கங்களைத் தாங்கும் வண்ணம் வீடுகளையும் கட்டடங்களையும் அமைப்பது இன்று சாத்தியமே. கட்டடங்களை அவ்வாறு அமைப்பது அறிவியல் பிரச்சனை மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் தொடர்புடைய முக்கியமானதொரு பிரச்சனை.
நேபாளத்தில் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல,, அந்த நாட்டின் கட்டமைப்புக்கும் கடுமையான சேதாரம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இயல்புநிலைக்குத் திரும்ப கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்தாக வேண்டும். இதில் ஒரு சிறு பகுதியை பாதுகாப்பான கட்டடங்களை எழுப்புவதற்கு செலவழித்திருந்தாலே பேரழிவின் பாதிப்புகளிலிருந்து அந்த நாடு தப்பித்துக் கொண்டிருக்க முடியும். நம் நாட்டில் குஜராத்திலும் இமாலயப் பகுதியிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது பூகம்பங்களைத் தாங்கும் கட்டடங்களைப் பற்றி நாம் பேசினோம். ஆம்… பேச மட்டும்தான் செய்தோம். டெல்லியின் 80 விழுக்காடு கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கக்கூடியவை அல்ல என்ற அதிர்ச்சிதரும் உண்மையை அண்மையில் மாநகரின் மூன்று மாநகராட்சிகள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளன. நிலநடுக்கத்தைத் தாங்க வேண்டுமானால், கட்டடங்கள் பெரியவையாகவும் கனமானவையாகவும் இருக்க வேண்டும் எனப் பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை நேர்மாறானது. ஒரு கட்டடம் எவ்வளவுக்கெவ்வளவு லேசாக இருக்கிறதோ அவ்வளவுக்கெவ்வளவு அது பூகம்பத்தின் அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் வகையில் அரங்குகளையும் அடுக்குமாடிக் கட்டடங்களையும் நிர்மாணிப்பதில் உலக அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்ஈஐடி ஸ்டீல் என்ற கட்டுமான நிறுவனம் பூகம்பத்தை ஒரு கட்டடம் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் அதன் கூரை லேசாக இருக்க வேண்டும் என்றும் கட்டடத்தின் அமைப்பு இறுக்கமாக இல்லாமல் எளிதில் மோதலை உள்வாங்கக் கூடியதாக, தேவைப்படின் வளையக்கூடியதாக இருந்தால் சேதாரத்திலிருந்து அது தப்பிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் கூறுகிறது. கட்டடத்தின் அடித்தளம் தரையுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டதாக இல்லாமல் பக்கவாட்டில் எளிதில் அசையக்கூடிய கம்பிச்சுருள்கள் மற்றும் உருளைகளின் மேல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பல்வேறுவகை உருளைகள் பயன்படுத்தப்பட்டாலும், மையத்தில் காரீயமும் அதைச் சுற்றி ரப்பர் மற்றும் கடினமான எஃகினால் ஆன அடுக்குகளும் கொண்ட உருளைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி அமைக்கப்படும் அடித்தளத்தின் மையம் கட்டடத்தைச் செங்குத்தாகத் தாங்கும் சக்தியைக் கொடுக்கக்கூடியதாகவும், சுற்றியுள்ள அடுக்குகள் பக்கவாட்டில் அசையக்கூடியதாகவும் இருக்கும். நிலநடுக்கம் ஏற்படும்போது கம்பிச்சுருள்களும் உருளைகளும் நகருமே தவிர, ஒட்டுமொத்த கட்டடத்தையும் அது தாக்காது. இது ஒரு வகை தொழில்நுட்பம். இன்னொரு முறையில் அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றை மட்டுப்படுத்தி, கட்டடத்திற்கு சேதாரம் இல்லாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பமும் சில பொறியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. வேறுவகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் சரி.. புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களாவது இந்த முறையில் கட்டப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை உருவாக்கவும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனக் கண்காணிக்கவும் நமது மத்திய, மாநில அரசுகள் இன்னமும் தயாராகவில்லையே?
nila nadukkathai mun koottiye ariya nammidam vazhi irukku ungalakku theriyuma?