ஆஸ்திரேலியா வரலாறு

கங்காரு எப்படி பைக்குள் வைத்து குட்டியை வளர்க்கிறது?

ஆஸியெனும் அதிசயத்தீவு – 2

கீதா மதிவாணன்

ஆஸ்திரேலியா ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பற்பல அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடு. மழைக்காடுகள், சதுப்புநிலக்காடுகள், ஊசியிலை மரக்காடுகள், யூகலிப்டஸ் மரக்காடுகள், சவான்னா புல்வெளிகள், மலைகள், மலைத்தொடர்கள், பாலைவனம் என பல்வேறு விதமான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 45% பாலைநிலம்தான் என்றால் நம்பமுடிகிறதா? அப்பாலையிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பது சிறப்பு. மாறுபட்ட நிலப்பரப்புக்கும் சூழலுக்கும் ஏற்ப வாழும் தனித்துவமிக்க தாவரங்களும் உயிரினங்களும் ஆஸ்திரேலியாவின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.

ஆஸ்திரேலிய விலங்குகளிடம் காணப்படும் ஒரு சிறப்பு பெரும்பாலான விலங்குகள் மார்சுபியல் வகையைச் சார்ந்தவை என்பதுதான். மார்சுபியல் என்றால் என்ன? மார்சுபியல் வகையில் பெண் மிருகங்களின் வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போல ஒரு அமைப்பு இருக்கும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சி பெறும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் வைத்து வளர்க்கும்.

கங்காருகள் தாவர உண்ணிகள் என்பது பலருக்கும் தெரியும். அவை ஆடுமாடுகளைப் போலவே அசைபோடும் வழக்கமுள்ளவை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் ஆடு மாடு போன்ற தாவர உண்ணிகளுக்கும் கங்காருகளுக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் உண்டு. கங்காருகள் இரவு விலங்குகள் (nocturnal animals). மாலையில்தான் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து மேய ஆரம்பிக்கும். அப்படியானால் பகல் பொழுதெல்லாம் என்ன செய்யும்? வேறென்ன? ஓய்வும் உறக்கமும்தான். மர நிழலிலோ பாறை இடுக்குகளிலோ படுத்து நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். கங்காருகள் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலேயே பல மாதங்கள் அவற்றால் உயிர்வாழ முடியும். அதனால்தான் ஆஸ்திரேலியாவின் வறட்சியான காலநிலைகளிலும் அவற்றால் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளமுடிகிறது.

400px-Kangaroo_and_joey03

கங்காருகள் குழுக்களாகத்தான் வாழும். ஒரு குழுவில் பத்து முதல் நூறு வரையிலும் கூட இருக்கும். கங்காருகள் குத்துச்சண்டையில் தேர்ந்தவை. எதிரியை சமாளிக்கவேண்டிய நெருக்கடியில் தங்கள் முன்னங்கால்களால் நன்றாக குத்து விடும் அல்லது வாலை ஊன்றி நின்று பின்னங்கால்களால் பலமாக உதைவிடும். தங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், பெண் கங்காருகளை கவரவும் பலம் வாய்ந்த ஆண் கங்காருகள் தங்களுக்குள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவதுண்டு. கங்காருகள் பெரிய அளவில் ஒலியெழுப்பாது. சின்னதாய் செருமல்கள், மெல்லிய குரைப்பொலி, சன்னமான பக் பக், க்ளக் க்ளக் போன்ற ஒலிகளைத்தான் வெளிப்படுத்தும்.

கங்காரு வருடத்துக்கு ஒரு குட்டி போடும். கங்காருக்குட்டி ஜோய் (joey) என்று குறிப்பிடப்படுகிறது. கங்காருவின் கர்ப்பகாலம் 33 நாட்கள்தான். குட்டி பிறக்கும்போது இரண்டுகிராம் எடையுடன் ஒரு மொச்சைக்கொட்டை அளவுதான் இருக்கும். கண், காது கால் உடல் என்று எதுவும் முழுமையாக உருவாகாமல் ஒரு புழுவைப் போல இருக்கும் அது பிறந்த நொடியே உள்ளுணர்வு காரணமாக உந்தப்பட்டு தன் தாயின் வயிற்றுப்பையை நோக்கி நகர ஆரம்பித்துவிடுகிறது. நன்கு வளர்ச்சியடைந்த தன்னுடைய முன்னங்கால் விரல்களால் அம்மாவின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் தாயின் பைக்குள் போய்விடும். உள்ளே நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் கவ்விக் கொண்டுவிட்டால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, அம்மா எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். கீழே விழாது. இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தாய் தன் தசைகளை சுருங்கிவிரித்து பம்ப் (pump) செய்வது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும்..

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஜோயி அதே நிலையில்தான் இருக்கும். அதற்குள் அது முழுவளர்ச்சி பெற்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக பையை விட்டு வெளியே வர ஆரம்பிக்கும். வெளியில் வந்தாலும் அம்மா கூடவே நிற்கும்.. ஆபத்து வரும் அறிகுறி அறிந்தால், அம்மா தரையில் காலைத் தட்டும். சட்டென்று குட்டி அம்மாவின் பைக்குள் ஏறிக்கொள்ள, அம்மா அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்துவிடும்.

பொதுவாகவே கங்காரு ஒரு குட்டி ஈன்றாலும் உடனே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, இன்னொரு குட்டியையும் அடுத்த ஈட்டுக்குத் தயாராக கருப்பையில் பத்திரப்படுத்திக்கொள்ளும். ஆனால் வளரவிடாது. முதலில் பிறந்த குட்டி பையை விட்டு வெளியேறும்வரை தாய் காத்திருக்கும். பஞ்ச காலம் வருவதைப் போல் தெரிந்தால் அப்போதும் குட்டியீனுவதைத் தள்ளிப்போடும். தாய்க்கு நல்ல உணவு கிடைத்து, நல்லமுறையில் பால்கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் குட்டியை ஈனத் தயாராகும்.

711px-Joey_in_pouch

ஒரே சமயம் வெவ்வேறு வயதுடைய இரண்டு குட்டிகள் அம்மாவிடம் பால் குடிப்பது உண்டு. பால்குடி மறக்காத பெரிய ஜோய் அவ்வப்போது அம்மாவின் மடிக்குள் தலைவிட்டு பாலைக்குடிக்கும். அதே பைக்குள் குட்டி ஜோய் ஒரு பக்கம் குடித்துக்கொண்டிருக்கும். ஒரு குட்டி பிறந்தது முதல் கடைசிவரை ஒரே பால்காம்பில்தான் பால் குடிக்கும். தவறியும் அடுத்ததில் வாய் வைக்காது. அதனால் பாலும் அக்குட்டிகளின் வயதுக்கேற்ப தனித்தன்மையுடன் இருக்கும். வளர்ந்த குட்டி மாற்று உணவுக்குப் பழகிவிட்டதால் அதற்குக் கிடைக்கும் பாலில் அத்தனை சத்துகள் இருக்காது. வளர்ச்சியடையாத குட்டிக்கோ அது ஒன்றே உணவென்பதாலும் வளர்ச்சிக்குத்தேவை என்பதாலும் மிகவும் சத்தான பால் கிடைக்கும். சின்னதென்றாலே செல்லம்தானே?

கங்காரு ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது. அதனால் பல இடங்களில் அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது. அவற்றின் இறைச்சிகள் கடைகளில் விற்பனையும் ஆகிறது. நான் ஆஸ்திரேலியா வந்தபுதிதில் கடைகளில் கங்காரு இறைச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு நாட்டின் தேசியமிருகமென மதிக்கப்படும் விலங்கின் இறைச்சியை மக்கள் உண்கிறார்களே என்று! விவரம் அறிந்து மனம் தெளிவானது.

ஆஸ்திரேலியாவில் கங்காரு வேட்டை இன்று நேற்றல்ல, காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் தங்களுடைய உணவுக்காகவும், உடைக்காகவும் கங்காருகளை வேட்டையாடியிருக்கிறார்கள். ஐரோப்பிய காலனி உருவான பிறகு வேட்டையாடப்படும் கங்காருகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. வருடாவருடம் குறிப்பிட்ட சில இன கங்காருகளின் எண்ணிக்கையைக் கண்காணித்தும், சந்தையில் கங்காரு இறைச்சியின் தேவையைப் பொறுத்தும் வேட்டைக்கான கால நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை கங்காரு அறுவடை என்றுதான் அரசு குறிப்பிடுகிறது.

கங்காருவை ஆஸ்திரேலியாவிலிருந்து உயிரோடு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் ஆஸ்திரேலியாவிலிருந்து கிட்டத்தட்ட 55 நாடுகளுக்கு உணவுக்காக கங்காரு இறைச்சி ஏற்றுமதியாகிறது. ரோமங்களுக்காகவும், தோல்பொருள் தயாரிக்கவும் அதன் தோலும் கூட ஏற்றுமதியாகிறது.

கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை தெரியுமா உங்களுக்கு? கொஞ்சம் காத்திருங்க. அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

(தொடரும்)

முந்தைய பதிவு

“கங்காரு எப்படி பைக்குள் வைத்து குட்டியை வளர்க்கிறது?” இல் 7 கருத்துகள் உள்ளன

    1. வலையில் வந்தவற்றோடு பல புதிய தகவல்களும் கதைகளும் இத்தொடரில் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி மேடம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.