வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது!
தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae.
இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம்.
முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம்.
உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால் ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்ய இம்மரம் பயன்பட்டிருக்கிறது என்பது இதன் சிறப்பு. வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது! காவி வேட்டிக்கு இதன் முற்றிய மரப்பட்டைகளைக் கொதிக்க வைத்து, அதில் வெள்ளை வேட்டியை முக்கி எடுப்பார்களாம். இயற்கை சாயமாகவும் இது பயன்பட்டிருக்கிறது.
இதன் மலர்கள் தோற்றத்தில் வெண்மையாக அப்படியே முல்லையை ஒத்திருந்தாலும், இதழ்கள் அதனை விடத் தடிப்பாக உள்ளன. நறுமணமும் உண்டு. முடிச்சு முடிச்சாகத் தோன்றும், இதன் காய்களைக் கொண்டு இம்மரத்தை எளிதில் அடையாளங் காணலாம். முற்றிய பிறகு பழம் கறுப்பாக மாறும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
சங்க இலக்கியத்தில் நுணவம் என்ற பெயரில் இது குறிக்கப்படுகின்றது.
எ,கா:-
“அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்புகளித் தாலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே,”
(ஐங்குறுநூறு 342 ஓதலாந்தையார்);
(கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளையும் உடைய நுணா மரம் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது; அம்மலர்களிலுள்ள தேனைக் குடித்து விட்டு வண்டினங்கள் மகிழ்வுடன் பாடும் இளவேனில் வந்துவிட்டது; ஆனால் அவர் இன்னும் வரவில்லை என்று வருந்திக் கூறுகிறாள் தலைவி)
முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்.’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘சங்கக்காலத் தாவரங்கள்,’ பட்டியலில் இதன் பெயர் இருப்பதிலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மண்ணில் நிலை பெற்றிருக்கும் மரமிது என்றறியலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தொன்மையான மரங்களின் சிறப்புக்களைத் தெரிந்து கொள்வதுடன், வளரும் தலைமுறைக்கு இவற்றை அடையாளம் காட்டுவதும் நம் கடமை!
அரிய தகவலை அறிய தந்தைமைக்கு நன்றி கலையரசி பாராட்டுக்கள்
பாராட்டுக்கு மிகவும் நன்றி விஜி!
நான் இப்பதான் புதிதாக கதை எழுதுகிறேன் ஒரு கிராமத்து கதை இதை உங்கள் வலைதளத்தில்
வெளியிடலாமா எப்படி வெளியிடுவது என்று சொல்லவும் My Face Book ID [email protected] சொல்லவும்
நுணாதான் மஞ்சணத்தி என்று இந்தப் பதிவின் மூலம்தான் அறிந்துகொண்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் வாழ்வோடு பிணைந்திருக்கும் நுணா மரம் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எதுவும் இதுவரை அறியாதவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.