
கீதா மதிவாணன்
எந்த விலங்கின் கைரேகைகள் மனிதனுடைய கைரேகைகளோடு ஒத்திருக்கும்? சொல்லுங்க… தெரியவில்லையா? நானே சொல்கிறேன். ஆஸ்திரேலியாவின் உயிரியல் அடையாளங்களுள் ஒன்றான கொவாலா (koala) என்னும் விலங்கின் கைரேகைதான் அது. மின்னணு நுண்ணோக்கி (electron microscope) வைத்துப்பார்த்தாலும் வேறுபாடு கண்டுபிடிக்க இயலாதாம். என்ன ஆச்சர்யம்!
ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் கொவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பார்ப்பதற்கு டெடிபேர் (Teddy bear) போல இருப்பதால் கொவாலாக்களும் கரடியினம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் கரடிக்கும் இவற்றுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. கங்காருக்களைப் போன்று இவையும் மார்சுபியல் வகையைச் சார்ந்தவை. ஆனால் இதையறியாத ஆரம்பகால உயிரியலாளர்கள் இதற்கு வைத்த பெயர் Phascolarctos cinereus என்பதாகும். லத்தீன் மொழியில் இதற்கு ‘வயிற்றில் பை உடைய சாம்பல் நிறக்கரடி’ என்று பொருள்.
ஆஸ்திரேலியாவில் சாம்பல் நிறம் மற்றும் சாக்லேட் பழுப்பு நிறம் என இரு நிறத்தில் இருவகையான கொவாலாக்கள் காணப்படுகின்றன. கொவாலாக்களுக்கு வால் கிடையாது. கொவாலா வால் இழந்த கதை தெரியுமா உங்களுக்கு? சொல்கிறேன்.
பூர்வகுடி மக்களின் கனவுக்கால கதை இது. ஆதிகாலத்தில் கங்காருவும் கோவாலாவும் நண்பர்களாக இருந்தன. ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவை மிகவும் கஷ்டப்பட்டன. தண்ணீரைத் தேடித் தேடி இரண்டும் கால்கள் வலிக்க காடுமலை எல்லாம் நடந்தன. தொலைவில் ஒரு ஆறு இருப்பதை அறிந்து இரண்டும் நாட்கணக்காய் நடந்து அந்த இடத்தை அடைந்தன. ஆனால் அங்கும் ஏமாற்றமே… தண்ணீர் இருந்த சுவடுமில்லாமல் நதி காய்ந்துபோயிருந்தது. அப்போது கங்காருவுக்கு அதன் அம்மா சொன்ன ஊற்று யோசனை நினைவுக்கு வந்தது. நதிப்படுகையில் சரியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இருவரும் மாறி மாறி அங்கு தோண்டினால் நீர் கிடைக்கலாம் என்பதை கோவாலாவிடம் சொன்னது. கோவாலா ஒத்துக்கொண்டது.
முதலில் ஒரு நாள் முழுவதும் கங்காரு தன்னுடைய வலிமை மிகுந்த கால்களால் தோண்டியது. தண்ணீர் கிடைக்கவில்லை. களைத்துப்போன கங்காரு, அடுத்தநாள், கோவாலாவிடம் ‘இப்போது உன் முறை.. தொடர்ந்து அதே இடத்தில் தோண்டினால் நீர் கிடைக்கும்’ என்றது. கோவாலாவோ தண்ணீர் இல்லாமல் தான் மிகவும் சோர்ந்துபோயிருப்பதாகவும் தன்னால் தோண்ட இயலாது என்றும் சொன்னது. கோவாலாவுக்காக இரக்கமுற்ற கங்காரு, மறுநாளும் தானே தொடர்ந்து தோண்டியது. அன்றைய நாளின் முடிவில் அப்பள்ளத்தில் நீர் ஊற ஆரம்பித்தது. அதைப் பார்த்து மகிழ்ந்த கங்காரு மேலே வந்து நண்பனிடம், ‘தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது’ என்று சொன்னது. அடுத்தநிமிடம், கோவாலா அப்பள்ளத்தின் உள்ளே பாய்ந்து தண்ணீர் மொத்தத்தையும் குடிக்க ஆரம்பித்தது.
இரண்டுநாட்களாய் தொடர்ச்சியாக குழி தோண்டி மிகவும் களைத்துப்போயிருந்த கங்காரு, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தது. கோபத்துடன் அருகிலிருந்து கூரிய கத்தி போன்ற கல்லை எடுத்து கோவாலாவின் பின்புறம் பாய்ந்து அதன் வாலை அறுத்துவிட்டது. அறுபட்ட வாலுடன் அலறியபடி வெளியிலோடிய கோவாலா கங்காருவுக்கு பயந்து ஒரு யூகலிப்டஸ் மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. அதன்பின் அது கீழே இறங்கவே இல்லை.. உணவும் தண்ணீரும் கிடைக்காமல் போனது. வேறு வழியில்லாமல் அந்த யூகலிப்டஸ் மரத்தின் இலைகளைத் தின்று அதிலிருந்து கிடைக்கும் நீர்ச்சத்தைக் கொண்டு உயிர்வாழ ஆரம்பித்தது. சுவையான கதைதான் அல்லவா?
கொவாலாக்களும் கங்காருக்களைப் போலவே இரவு விலங்குகள்தாம் (nocturnal animals). பகல் முழுவதும் உறங்கிக் கழித்துவிட்டு இரவில் மட்டுமே உணவு உண்கின்றன. கொவாலாவின் பிரதான உணவு யூகலிப்டஸ் இலைகள் என்றாலும் எல்லா யூகலிப்டஸ் இலைகளையும் உண்பதில்லை. ஆஸ்திரேலியாவில் காணப்படும் 600 வகையான யூகலிப்டஸ் மரங்களுள் ஐம்பது வகை மரங்களையே தேர்ந்தெடுத்து உண்கின்றன.
கொவாலாக்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 22 மணி நேரத்தைத் தூங்கியே கழிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? நார்ச்சத்தும் நச்சுத்தன்மையும் குறைந்த அளவே ஊட்டமும் கொண்ட யூகலிப்டஸ் இலைகளை சீரணிக்க இவற்றுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதால் தூக்கமொன்றே ஒரே வழி. இவை இயங்குவதில் மந்தமாக இருந்தாலும் நீந்துவதில் கெட்டி. கொவாலாக்கள் தரையில் நான்கு கால்களையும் ஊன்றி நடக்கும். முயலைப் போல் மிகவேகமாக ஓடக்கூடியவை. இவற்றின் ஆயுட்காலம் 12 முதல் 16 வருடங்கள். கொவாலாக்கள் பார்ப்பதற்கு சாதுவைப்போல் தோன்றினாலும் மிகவும் மூர்க்கமானவை. அவற்றுடைய கூரிய பற்களால் கடித்தும், கூரிய நகங்களால் தாக்கியும் எதிரிகளை சமாளிக்கின்றன.
காட்டை ஒட்டிய பல குடியிருப்புகளில் கொவாலாக்கள் வந்து தொந்தரவு தருவதாக சிலர் புலம்புகிறார்கள். நம் வசிப்பிடங்களில் காட்டுவிலங்குகள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!
கொவாலா பொதுவாக வருடத்துக்கு ஒரு குட்டி ஈனும். மிகவும் அரிதாக இவற்றின் கர்ப்பகாலம் 35 நாட்கள். கொவாலா குட்டி பிறக்கும்போது இரண்டு செ.மீ. அளவுதான் இருக்கும். கண், காது போன்ற எந்த உறுப்பும் வளர்ச்சியுறா நிலையில் அவை தவழ்ந்து தாயின் மடிக்குள் தஞ்சம் அடைந்துவிடுகின்றன. அங்கிருக்கும் இரண்டு பால்காம்புகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டுவிடும். மார்சுபியல் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இதனுடைய வயிற்றுப்பை தலைகீழாக இருக்கும். அதாவது கோவாலா மரத்தில் அமர்ந்திருக்கும்போது அதன் பையின் திறப்பு கீழ்நோக்கி இருக்கும். குட்டி கீழே விழுந்துவிடாதா என்ற பயம் நமக்குத் தோன்றும். ஆனால் விழாது. ஏன் தெரியுமா? அந்தப் பையின் வாயில் அமைந்துள்ள பிரத்தியேக தசைநார்கள் ஒரு சுருக்குப்பை போல மூடி குட்டியைப் பாதுகாக்கின்றன. ஆச்சர்ய அமைப்புதானே?
தாயின் பைக்குள் ஆறுமாதங்கள் பாலைக்குடித்தபடி இருக்கும் குட்டி முழுவளர்ச்சி பெற்றபின் பையை விட்டு வெளியேறி தாயின் வயிற்றைப் பற்றிக்கொண்டோ, முதுகில் சவாரி செய்துகொண்டோ அவ்வப்போது பைக்குள் தலையை நுழைத்துப் பால் குடித்துக்கொள்ளும். இந்த சமயத்தில் குட்டிகள், தாய் வெளியேற்றும் மலக்கழிவல்லாத மற்றொரு விசேடக் கழிவை உண்டு வளர்கின்றன. இது குட்டிகள் வருங்காலத்தில் தின்னவிருக்கும் நச்சுமிகுந்த யூகலிப்டஸ் இலையை செரிக்கவைக்கும் பாக்டீரியாக்களை அவற்றின் உடலில் உருவாக்குமாம்.
கொவாலாக்கள் அவற்றுடைய ரோமத்துக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டுவந்தன. 1908 முதல் 1927 ஆம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கொவாலாக்கள் கொல்லப்பட்டனவாம். குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள், விவசாயம், பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காக கொவாலாவின் வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதாலும் இவற்றின் தொகை பெருமளவில் குறைந்து வருகின்றன. இப்போது உலகில் உயிர்வாழ்பவை நாற்பதாயிரம் முதல் எண்பதாயிரம் என்ற குறுகிய எண்ணிக்கையில்தான் இருக்கின்றவாம். ஆஸ்திரேலியாவின் சட்டங்கள் கொவாலாவுக்கு எதிரான செயல்களைக் கண்டித்து, அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. கொவாலா குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் மாநில விலங்காகவும் சிறப்பு பெற்றிருக்கிறது.
காட்டை ஒட்டிய பல குடியிருப்புகளில் கொவாலாக்கள் வந்து தொந்தரவு தருவதாக சிலர் புலம்புகிறார்கள். நம் வசிப்பிடங்களில் காட்டுவிலங்குகள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!
(தொடரும்)
கீதா மதிவாணன், ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். மொழிப்பெயர்ப்பாளர், வலைப்பதிவர்.
ஆஸ்திரேலியாவின் அதிசய மிருகம் பற்றி விரிவாக அழகாக விளக்கியுள்ளீர்கள் கீதா பாராட்டுக்கள்
பதிவை ரசித்துக் கருத்திட்டதற்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி விஜி மேடம்.