“செய்து பாருங்கள்” இதழ் வெளியீட்டு விழா 1-4-2017 அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடந்தது. எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ், பத்திரிகையாளர் அருள் எழிலன், எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர் சரவணன் சந்திரன், பதிப்பாளர் டிஸ்கவரி வேடியப்பன், நாடக இயக்குநர் சோழன், ஊடக வியலாளர் சரா சுப்ரமணியன், ஊடகவியலாளர் விஜி பழனிச்சாமி, எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி, ஃபேஷன் டிஸைனர் மாடலிங் பூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜின் வாழ்த்து:
ஊடகவியலாளர் மு.வி.நந்தினி மேல் ஒரு ப்ரியமும் அன்பும் எப்போதும் இருக்கும். அதற்கு காரணம் எதற்கும் வளைந்துகொடுக்காத அவரது அரசியல் பார்வை.அமைதியாக ஆனால் தன்னுடைய கருத்துகளை திடமாக முன்வைப்பவர். பல்வேறு ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு ’த டைம்ஸ் தமிழ்.காம்’ இணைய இதழை நடத்திக்கொண்டிருக்கும் நந்தினி கைவினைப்பொருள்களுக்கான “செய்து பாருங்கள்” இதழ் ஒன்றை தொடங்கியுள்ளார். ஒரு இதழை சொந்தமாக நடத்துவது என்பது ஒரு பெண் செய்யக்கூடிய சாதாரண காரியம் அல்ல. அதற்கு நிறைய துணிவும் நம்பிக்கையும் வேடும்.நந்தினி இந்த இதழ் முயற்சி நிச்சயம் நிறைய பெண்களுக்கு உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும். நந்தினிக்கு வாழ்த்துகளும் அன்பும்.
வாசகர்களை வாடிக்கையாளர்களாக பாவிக்காமல் அவர்கள் கைவினைப்பொருள்களை செய்து ஒரு சிறுதொழிலை செய்வதற்கான வழியை அமைத்துக்கொடுக்கும் வகையில் இப்புத்தகம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. கைவினைபொருட்கள் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமல்ல எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கைவினைப்பொருள்கள் செய்வது எப்படி என்று விளக்கப்பட்டிருகிறது. வேலைக்கு போகாமல் வீட்டிருக்கும் பெண்களுக்கு இது ஒரு வருமானத்தை உருவாக்கும் வழியாகவும் இருக்கும். வேலைக்கு செல்பவர்களும் தங்களுடைய ஓய்வான நேரங்களில் க்ரியேட்டிவாக கைவினைப்பொருள்களை செய்து பார்க்கலாம்.
நாடக இயக்குநர் சோழன்:
குழந்தைகளுக்கான ஒர்க்ஷாப்பில் பலூன் மாஸ்க் செய்யும்போது குழந்தைகளின் மனநிலையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். காரணம் வண்ணங்களைக் கொண்டு பலூன்கள் மீது குழந்தைகள் தங்களுடைய கற்பனைகளைத் தீட்டுவார்கள். அந்த கற்பனைகள் ஒரு வடிவமாக உருக்கொண்டு பெற்றோர்களின் கூட இருப்பவர்களின் பாராட்டுகளைப் பெறும்போது அந்தக் குழந்தைகள் அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
குழந்தைகளுக்கு அவர்களுடைய படைப்பாற்றலை, விசாலமான கற்பனையை, அதன் சுதந்திர வெளிகளை இந்த மாதிரியான ஒர்க்ஷாப்புகள் ஏற்படுத்தி கொடுக்கக் கூடியவை. அப்படியான ஒர்க்ஷாப்புகளில்தான் நானும் என்னைக் கண்டுகொண்டு வளப்படுத்திக் கொண்டேன்.
பொதுவாகவே நம்முடைய ஆற்றலை உணர்ந்துகொள்வதற்கான ஒரு வார்த்தை ஒரு சந்தர்ப்பம் ஒரு திறப்பு யார் உருவாக்கித்தருவார்களோ அவர்கள் மீது நமக்கு அளவில்லாத அன்பும் மரியாதையும் பெருகும்.
பத்ரிகையாளர் நந்தினி சண்முகசுந்தரத்தை ஆசிரியராக பதிப்பாளராகக் கொண்டு வெளிவந்திருக்கும் “செய்து பாருங்கள்” இதழ் தமிழின் முக்கியமான சூழலுக்கு மிகவும் அவசியமான முதல் முயற்சி.
தேன்கனிக்கோட்டை என்கிற ஒரு சிறு நகரத்திலிருந்து சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து தனக்கான வெளியை உருவாக்கிக் கொண்ட சுயமரியாதையும் சமூகப் பொறுப்பும் தனக்கென்று ஒரு அரசியல் பார்வையும் கொண்டு ’த டைம்ஸ் தமிழ்.காம்’ இணைய இதழை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் நந்தினிசண்முகசுந்தரத்தின் நெடுநாள் கனவு இந்த இதழ். “என் கனவின் வழியாக என்னைப் போல உள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தூண்டுகோளாக இருக்க வேண்டும் என்பதே ‘செய்து பாருங்கள்’ இதழின் நோக்கம்.” என்று அவர் தலையங்கத்தில் சொல்லியிருப்பது போலவே இந்த இதழின் பக்கங்கள் வாசகர்களின் படைப்பாற்றலை, கற்பனையை, அதன் வழியாக கிடைக்கக் கூடிய தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கக்கூடிய வகையில் இருக்கின்றன.
இதழ் பார்வைக்கும் வாசிப்புக்கும் செய்து பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சிக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது…நீங்களும் வாங்கி உணருங்கள்.
நந்தினி சண்முகசுந்தரத்திற்கும் கோசிகனுக்கும் இதழ் குழுவிற்கும் என் அன்பும் வாழ்த்துக்களும்.
பத்திரிகையாளர் சரா சுப்ரமணியன்:
நான் சற்றே எட்ட நின்று பார்த்து உத்வேகம் கொள்ளும் நண்பர் மு.வி.நந்தினி . ஃபேஸ்புக், ட்விட்டர் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பு தமிழில் வலைப்பதிவுகளின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிய காலக்கட்டம் அது. பாப்புலராக வலம் வந்தவர்கள் ப்ளாக்ஸ்பாட்டில் எழுதிக் கொண்டிருக்க, வேர்டு பிரஸ்ஸில் கடைவிரித்தவர்கள் நாங்கள். அப்போது, புனைப் பெயரில் ப்ளாக் எழுதித் தள்ளி சுபயோக சுபதினத்தில் அத்தனையையும் அழித்தது குளோப சரித்திரம். எனினும், வேர்ட்பிரஸில் தொடர்ந்து நந்தினி, சைபர்சிம்மன், விழியன் முதலானோரின் பதிவுகளைப் பார்த்து வருவது வழக்கம்.
அதன்பின், வெவ்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்த நந்தினி The Times Tamil தளத்தை உருவாக்கி நடத்தத் தொடங்கிய பிறகு மீண்டும் கவனம் ஈர்த்தார். எல்லாரும் காப்பி – பேஸ்ட் ஆயுதமேந்தி செய்தித் தளங்களையும், சினிமா செய்தித் தளங்களையும் நாடிவந்த சூழலில், செய்திகளைத் தவிர்த்து கோணங்களை வழுங்கி தனித்துவம் காட்டத் தொடங்கினார்.

கருத்தியல், கொள்கை, லொட்டு, லொச்சுக்கு என சில அம்சங்களில் கருத்தொற்றுமை, கருத்து வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு உத்வேக நண்பராகத் திகழும் அவர் இப்போது வேற லெவல் புதிய முயற்சி ஒன்றில் வெற்றிகரமாக தடம் பதித்துள்ளார். கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென ‘செய்து பாருங்கள்’ என்ற பெயரில் காலாண்டிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இத்துறை சார்ந்த முதல் தமிழ் இதழ் எனும் பெருமித ஆக்கத்துக்கு கெத்தான சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
இந்த இதழில் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். சென்னையில் வசித்து வந்தாலும் ஒரு முறை கூட நேரில் பார்க்காததால், 12 ஆண்டுகளாக தொலைத்தொடர்புகளால் மட்டுமே நட்பு கொண்டிருந்த நந்தினியை நேரில் சந்தித்து ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு, கடைசி வரிசையில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு கழண்டு போய்விடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், என்னை மும்முட்டி போல் ‘அழகன்’ ஆக மேடைக்கு அழைத்து அமரவைத்து, சில நிமிடங்கள் பேசவைத்தும் டரியலுக்கு ஆளாக்கப்பட்டேன்.
கைவினைக் கலையில் ஈடுபாடுள்ளவர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கும், உளவியில் ரீதியில் பலன்பெற விரும்புவோர் கைவினைக் கலைகளை நாடுவதற்கும் இந்தக் காலாண்டிதழ் வழிவகுக்கும் விதத்தில் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது சிறப்பு. இந்த இதழை விருப்பமுள்ள நண்பர்கள் வாங்கிப் பயனடையுமாறு பரிந்துரைப்பதுடன், அதையே என் விருப்பமாகவும் இங்கே பர்சனலாக பதிவுசெய்துகொள்கிறேன்.
எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சரவணன் சந்திரன்:
மு.வி.நந்தினி யின் புதிய முயற்சியான செய்து பாருங்கள் இதழ் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தோழமைகள் அருள் எழிலன், கவிதா சொர்ணவல்லி, சந்திரா அக்கா, விஜி பழனிச்சாமி, சரா, வேடியப்பன் ஆகியோரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியான அனுபவம்.
அந்த விழாவில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்றைப் பேசியிருக்கிறேன். வீடியோ பண்ணியிருப்பதால் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த இதழ் வெளியிடுவதை முன் வைத்து தமிழ் வணிகத்தின் எல்லை, அதில் சாதிக் கூறுகள் செயல்படும் விதம், பொருளாதர முன்னேற்றம், முதல் தலைமுறை தொழில் முனைவு என்றெல்லாம் அடர்த்தியாகப் பேசினேன். என்னை மறந்து அதிகமாகப் பேசினேன். பொருளாதாரத்தைக் கையில் தூக்கியதன் வழியாக ஒரு சாதி எப்படி மைய நீரோட்டத்திற்கு நீந்தி வந்தது என்பதைப் பற்றிப் பேசினேன். பொருளாதர சுதந்திரத்தின் அவசியம் பற்றிப் பேசுவதன் வழியாக தமிழ் வணிகத்தின் இன்னொரு சித்திரத்தை வரைந்தேன்.

வெளியானால் கேட்டுப் பாருங்கள். ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோனாய், என்னைப் போலக் கிளம்பி வருபவர்கள் உடன் நிற்பதைக் கடமையாகவே கருதுகிறேன். அடிக்கடி சொல்வதைப் போல பேசுகிற இடத்தில் பேசி விட வேண்டும். நந்தினியின் விழாவில் பேசியாக வேண்டிய தேவை இருப்பதாக நினைத்தேன். கொஞ்சம் உரக்கவே பேசி விட்டேன். அடர்த்தியான பொலிட்டிகல் ஸ்பீச். நந்தினியின் இந்தப் புதிய பிராடக்ட்டும் உரக்கப் பேச வேண்டும். தொழிலை தொழிலாக மட்டும் பாருங்கள் நந்தினி. வாழ்த்துக்கள். நண்பர்களும் உடனிருந்து உதவ வேண்டும். தரமான முயற்சிகளுக்கு கை கொடுத்து உதவ வேண்டும்.
பத்தியாளர் ஏ.கே. பத்மஜா:
என் மூத்த மகளுக்கு பனிரெண்டு வயது.கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம்.சென்ற வருட கோடை விடுமுறையிலேயே அதற்கான வகுப்பில் சேர்த்து விடும்படி பலமுறை கேட்டாள்.இந்த வாரம் முகநூலில் மு.வி.நந்தினிஅவர்கள் புதிதாய் வெளியிட உள்ள “செய்து பாருங்கள்” இதழ் குறித்து வாசிக்க நேர்ந்தது. உடனே என் மகளுக்கு இந்த கோடை விடுமுறைக்கு சிறந்த பரிசாய் இருக்குமே என்று தோன்றியது.சில மணி நேரத்தில் மு.வி.நந்தினி அவர்களிடம் இருந்து குறுந்தகவல் உங்களுக்கு கைவினை பொருட்கள் புத்தகம் எல்லாம் ஆர்வம் உண்டா என்று? எங்கு இந்த புத்தகம் வாங்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்த எனக்கு அவர்கள் கொரியர் அனுப்புகிறேன் என்று சொன்னதும் நன்றிகளை அடுக்கிவிட்டேன்.
புத்தகம் அனுப்புகிறேன் என்று சொன்னாலும் சிலர் அவர்களுக்கு சௌகரிய பட்டபோதுதான் அனுப்புவர்.சிலர் வெறும் வாயில் அனுப்பிவிடுவர்.அதனால், புத்தகம் வர போகிறது என்று என் மகளிடம் சொல்லவில்லை.நேற்று விலாசம் கேட்டு வாங்கி இன்று மதியம் என் மகள் கையில் புத்தகம் கிடைக்கும் படி துரித வேகத்தில் அனுப்பிய உங்களுக்கு என் அன்பும்,நன்றிகளும்.
கொரியரை பிரிக்காமல் “summer Gift”என்று மகளிடம் கொடுத்தேன்.அட்டைப்படத்தில் இருந்து ஒவ்வரு பக்கத்தையும் கடக்கும் போதும் அவள் கண்கள் ஆர்வத்தில் விரிவதை பார்த்து ரசித்தேன்.இன்று மாலை இதழ் வெளியீட்டு விழா என்று தெரிந்தபோது அதே புத்தகம் என் கையில் இப்பொது இருக்கிறது என்று தெரியும் போதும் நீங்கள் கொடுத்த முக்கியத்துவத்திற்கும்,முதன்மைக்கும் நன்றிகள் பல.
ஒவ்வரு பக்கத்திற்கும் வாவ்,சூப்பர்,சூப்பர்ல என்று சொல்லிக்கொண்டே இருக்கும் என்மகள் இப்போ “ருசிக்க பக்கத்தில் உள்ள திணை கட்லெட்” செய்து பார்க்க தொடங்கியாச்சு….
புத்தகம் வெளியானது அறிய மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்